தேடுதல்

திருத்தந்தையுடன் கத்தோலிக்க சிறார் திருத்தந்தையுடன் கத்தோலிக்க சிறார்  (VATICAN MEDIA Divisione Foto)

அமைதியின் பக்கம் நின்று வன்முறை நெருப்பை அணைப்போம்

இயேசுவின் அன்பின் செய்தியை செழிக்கச் செய்ய அமைதி கட்டாயம் தேவை என்றும் அமைதி இல்லாமல் அன்பு இருக்க முடியாது

மெரினா ராஜ் – வத்திக்கான்

நமக்கு மிக அருகில் நடக்கும் போர்கள் அமைதியைப் பற்றி சிந்திப்பது கடினம், அமைதியைப் பற்றி யாரும் கவனம் செலுத்தவில்லை என்பதனை உணர்த்துகின்றது என்றும், உரோம் கத்தோலிக்க இயக்கம் அமைதியின் பக்கம் நின்று வெறுப்பு மற்றும் வன்முறையின் நெருப்பை அணைக்க முயற்சிக்கின்றது என்றும் கூறினர் உரோம் கத்தோலிக்க இயக்க சிறார்.

சனவரி 28 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மூவேளை செப உரையைத் தொடர்ந்து ACR எனப்படும் உரோம் கத்தோலிக்க இயக்கத்தைச் சார்ந்த சிறார் இருவர் திருத்தந்தையின் அருகில் நின்று அவருக்குத் தங்கள் இயக்கத்தார் எழுதிய கடிதத்தை வாசித்தளித்த போது இவ்வாறு கூறினர்.

அமைதியை வளர்த்தல், பொதுவான இல்லமாகிய இப்பூமியைக் காத்தல், போன்றவற்றை உரோம் கத்தோலிக்க இயக்கத்தின் முக்கியமான கொள்கையாகக் கொண்டுள்ளதாக எடுத்துரைத்த அச்சிறார், ஒரு சிறிய செடியை அமைதியின் சின்னமாக வடிவமைத்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

போர் என்பது ஒரு உலர்ந்த வெற்று செடியைப் போன்றது என்றும், அமைதி என்பது பசுமையான தாவரம் போன்றது என்றும் எடுத்துரைத்த சிறார், உலகம் கடவுளின் பரிசு என்பதை அமைதியின் செடி நமக்கு நினைவூட்டுகிறது, அதனை நாம் அழிக்கக்கூடாது என்றும் எடுத்துரைத்தனர்.

இயேசுவின் அன்பின் செய்தியை செழிக்கச் செய்ய அமைதி கட்டாயம் தேவை என்றும் அமைதி இல்லாமல் அன்பு இருக்க முடியாது என்றும் கூறிய சிறார், திருத்தந்தையின் அமைதிக்கான முயற்சிகளில் உரோம் கத்தோலிக்க இயக்கத்தார் உடன்இருப்பதாகவும் வாக்குறுதி அளித்தனர்.

நமது வீடு நமது பூமி நமது உலகம் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து, நாம் வாழ்கின்ற இயற்கையைப் பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என்று கூறிய சிறார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காகவும் அவரின் பணிக்காகவும் தொடர்ந்து செபிப்பதாகவும் எடுத்துரைத்து தங்கள் அன்பினை வெளிப்படுத்தி கடிதத்தை நிறைவு செய்தனர். 

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 January 2024, 14:25