பிரேசிலில் உள்ள Aparecida அன்னைப் பேராலயம் பிரேசிலில் உள்ள Aparecida அன்னைப் பேராலயம்   (AFP or licensors)

உலகளாவிய உடன்பிறந்த உறவை உருவாக்க நாம் அழைக்கப்படுகிறோம்!

ஒவ்வொரு உயிரினத்திற்கும் நமது அன்பை விரிவுபடுத்தவும், புவியியல் எல்லை கடந்து நாம் அனைவருக்கும் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை உணரவும் உங்களுக்கு நான் நினைவூட்ட விரும்புகின்றேன் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சகோதரர் சகோதரிகளாகிய நம் அனைவரையும் இறைத்தந்தை தனது மகன்களாகவும், மகள்களாகவும் வரவேற்கும் விண்ணகத்தின் பார்வையை இழக்காமல், இச்சமுதாயத்தில் நமது வாழ்வையும், இப்புவியில் நமது உயிர்வாழ்வையும் ஆதரிக்கும் உண்மையான உலகளாவிய உடன்பிறந்த உறவை உருவாக்க நாம் அழைக்கப்படுகிறோம் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த ஆண்டு, "உடன்பிறந்த உறவு மற்றும் சமூக நட்பு" என்ற கருப்பொருளுடனும், "நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள்" (காண்க. மத் 23:8) என்ற விருதுவாக்குடனும் பிரேசிலில் நடைபெறும் உடன்பிறந்த உறவுகுறித்த பொதுப்பரப்புரையின் 60-வது ஆண்டுவிழாவிற்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு உரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நோன்பு, தவம் மற்றும் இறைவேண்டலுடன் நாம் தவக்காலப் பயணத்தைத் தொடங்கியுள்ள இவ்வேளையில், ​​பிரேசில் ஆயர்களின் தேசிய மாநாட்டின் சகோதரர் சகோதரிகளுடன் இணைந்து இறைவனுக்கு நன்றிதெரிவிக்கும் இவ்விழாவில் நானும் கலந்துகொள்கின்றேன் என்று கூறியுள்ள திருத்தந்தை, நம்பிக்கை மற்றும் வாழ்க்கை, ஆன்மிகம் மற்றும் சகோதர அர்ப்பணிப்பு, கடவுளின் அன்பு மற்றும் அடுத்திருப்போரின் அன்பு யாவும் அனைவரையும் குறிப்பாக, மிகவும் பலவீனமானவர்களையும் தேவையில் உள்ளோரையும் ஒருங்கிணைக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

எதிர்பாராத விதமாக, நாம் இன்னும் உலகில் சுய நலத்தின் அறிகுறிகளைக் காண்கின்றோம் என்றும், எனவே, ஒவ்வொரு உயிரினத்திற்கும் நமது அன்பை விரிவுபடுத்தவும், புவியியல் எல்லை கடந்து நாம் அனைவருக்கும் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை உணரவும் உங்களுக்கு நான் நினைவூட்ட விரும்புகின்றேன் என்றும் அச்செய்தியில் உரைத்துள்ளார் திருத்தந்தை

இந்தத் தவக்காலப்  பயணத்தில் பிரேசிலில் உள்ள தலத்திருஅவை நல்ல பலன்களைப் பெறும் என்று தான் நம்புவதாகவும், மேலும் உடன்பிறந்த உறவுகுறித்த பொதுப்பரப்புரை, இந்த அன்பான தேசத்தின் மக்களுக்கும் சமூகங்களுக்கும் பிரிவினை, அலட்சியம், வெறுப்பு மற்றும் வன்முறை அனைத்தையும் கடந்து நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியின்மேல் பற்றுறுதிகொள்ள மீண்டும் உதவும் என்று நான் உறுதியளிக்கிறேன் என்றும் விளக்கியுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 February 2024, 14:24