தேடுதல்

கர்தினால் Miguel Ángel Ayuso Guixot அவர்கள், திருத்தந்தையின் செய்தியை வாசித்தளித்தபோது கர்தினால் Miguel Ángel Ayuso Guixot அவர்கள், திருத்தந்தையின் செய்தியை வாசித்தளித்தபோது  

ஞானம் மற்றும் அமைதியை மீண்டும் கண்டறிய முயல்வோம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செய்தியினை பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் மிகுவேல் ஆங்கெல் அயூசோ குவிக்ஸ்சா (Miguel Ángel Ayuso Guixot) அவர்கள் அபுதாபியில் வாசித்தளித்தார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

பிறரைப் பற்றிய அறிவின்மை, செவிகொடுக்காமை, நுண்ணறிவில் நெகிழ்வுத் தன்மையின்மை போன்ற மூன்று தீமைகளும், மனிதஉடன்பிறந்த உணர்வை அழித்து மனிதகுலத்தின் தோல்விகளுக்கு வேர்களாக அமைகின்றன என்றும், ஞானம் மற்றும் அமைதியை மீண்டும் கண்டறிவதற்கு அதனை நன்கு அடையாளம் காண வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 4 ஞாயிற்றுக்கிழமை அபுதாபியில் நடைபெற்ற PLURIEL எனப்படும் இஸ்லாம் பற்றிய பல்கலைக்கழக ஆராய்ச்சியின் நான்காவது பன்னாட்டு மாநாட்டை முன்னிட்டு அதன் பங்கேற்பாளர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியினை பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் மிகுவேல் ஆங்கெல் அயூசோ குவிக்ஸ்சா (Miguel Ángel Ayuso Guixot) அவர்கள் வாசித்தளித்தார்.

மற்றவர்களைப் பற்றிய அறிவின்மை

நாம் மற்றவர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், மதிக்கவும் முயற்சிக்காமல் இருந்தால் தனிமைப்படுத்தப்பட்டவர்களாகவும், நமது இன்றைய மற்றும் நாளைய பிரச்சனைகள் தீர்க்கப்படாமலும் இருக்கும் என்றும், ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளுதல், நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையை வளர்த்தல், எதிர்மறை எண்ணங்களை விடுத்து ஒவ்வொருவரையும் சகோதரராக பார்த்தல், போன்றவை, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அமைதிக்கான செயல்முறைகளைத் தொடங்குவதற்கான வழி என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிறரைப் பற்றிய அறிவு, மனிதமாண்பு இல்லாத அமைதி என்பது, மதிப்பற்றது எதிர்காலமற்றது என்றும்,  நம்மை விட வேறுபட்டவர்களை சகோதரர்களாகப் பார்ப்பதன் வழியாக உரையாடல் மற்றும் சந்திப்பிற்கான கல்வியின் பாதையில் நாம் செல்லவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செவிசாய்த்தலின்மை

நம்மிலிருந்து வேறுபட்ட சகோதர சகோதரிகளுடன் இப்பூமியில் வாழ்வதற்கு, நாம் அவர்களுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “ஒவ்வொருவரும் கேட்பதில் வேகமும், பேசுவதிலும் சினங்கொள்வதிலும் தாமதமும் காட்டவேண்டும். ஏனெனில், மனிதரின் சினம் கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள் நிறைவேறத் தடையாயிருக்கிறது” என்ற திருத்தூதர் யாக்கோபின் திருமடலில் உள்ள இறைவார்த்தைகளையும் மேற்கோள்காட்டியுள்ளார்.

செவிகொடுக்காமை மனித உடன்பிறந்த உணர்வினை அழிக்கும் இரண்டாவது தீமை என்று சுட்டிக்காடியுள்ள திருத்தந்தை அவர்கள், குடும்பம், அரசியல், துறவறக் குழுமம், பல்கலைக்கழகம், மக்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையே, செவிசாய்த்தல், அமைதி, உண்மையான வார்த்தைகள் இருந்தால் பல தீமைகளைத் தவிர்க்க முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பிறருடன் நல்ல உறவும் ஒப்பீடும் இல்லை என்றால், தன்னையும் தான் வாழ்கின்ற இடத்தையும் பற்றி, தெளிவாகவும், முழுமையாகவும் அறிந்துகொள்ள முடியாது என்றும், பிற கலாச்சாரங்கள் எதிரிகள் அல்ல, மாறாக அவை, மனித வாழ்வின் வற்றாத செழுமையை எடுத்துரைக்கும் வெவ்வேறு பிரதிபலிப்புக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

நுண்ணறிவில் நெகிழ்வுத்தன்மையின்மை

அறிவுசார் நெகிழ்வுத்தன்மையின் பயிற்சியும், ஆராய்ச்சியும், மக்களை இறுக்கமின்றி, நெகிழ்வானவர்களாக, உயிருள்ளவர்களாக, மற்றவர்களுக்குத் திறந்தமனம் கொண்டவர்களாக, சகோதரத்துவம் கொண்டவர்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும், “ஞானம் மற்றொன்றைத் தேடுகிறது, கடினமான சோதனையை முறியடிக்கிறது, நிகழ்காலத்துடன் உரையாடுவது எப்படி என்பதை அறிந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

உரையாடல் என்பது ஒரு மேசையைச் சுற்றி அமர்ந்து விவாதிப்பதோடு மட்டும் முடிந்துவிடாமல் ஒருவர் மற்றவருடனான நெருக்கத்தை வெளிப்படுத்துவது, செவிசாய்ப்பது, புரிந்துகொள்ள முயற்சிப்பது, தொடர்பு கொள்வதற்கான வழிகளைத்தேடுவது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

ஒழுக்கத்துடன் இருங்கள், ஆர்வமாக இருங்கள், நெகிழ்வுத்தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், உலகிற்கு செவிகொடுங்கள், உலகைப்பற்றி பயம் கொள்ளாதீர்கள், உடன்வாழும் சகோதரர்களுக்கு செவிகொடுங்கள், என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது. என்ற திருவிவிலிய வரிகளையும் மேற்கோள்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 February 2024, 13:50