தேடுதல்

ஆர்மினிய கத்தோலிக்க ஆயர்களுடன் திருத்தந்தை ஆர்மினிய கத்தோலிக்க ஆயர்களுடன் திருத்தந்தை   (Vatican Media)

நாம் அனைவரும் அமைதிக்கான முழக்கத்தை முன்னெடுப்போம்!

அமைதிக்கான முழக்கத்தை நாம் அனைவரும் முன்னெடுப்போம். காரணம், அதுவே அனைவரின் இதயங்களையும், குறிப்பாக, ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் துன்பங்களால் தீண்டப்படாத இதயங்களையும் கூடத் தொடும் : திருத்தந்தை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

தனிமையும் ஒதுக்கப்படுத்தலும் நிறைந்த இவ்வுலகில், நம் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டவர்கள் நல்ல மேய்ப்பரின் நெருக்கத்தையும், சொந்த தந்தைக்குரிய நம் அக்கறையையும், உடன்பிறந்த உறவின் அழகையும், கடவுளின் கனிவிரக்கத்தையும் உணருவதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 28, இப்புதனன்று, சிலிசியாவின் அர்மினிய கத்தோலிக்க வழிபாட்டு முறையின் ஆயர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உங்கள் அன்பான மக்களின் குழந்தைகளுக்கு ஆயர்களாகிய உங்களின் உடனிருப்புத் தேவைப்படுகிறது என்றும் உரைத்தார்.

அன்பான சகோதரர்களே, உங்கள் திருஅவைக்கு நாளைய ஆயர்களை வழங்குவது, ஆயர் பேரவையின் மிகப்பெரிய பொறுப்புகளில் ஒன்றாகும் என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, அவர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றும், அப்போதுதான் அவர்கள் மந்தைக்குத் தங்களை முழுதுமாக அர்ப்பணிப்பவர்களாகவும், மேய்ப்புப் பணியில் உண்மையுள்ளவர்களாகவும், தனிப்பட்ட சுயநல இலட்சியத்தால் ஆட்கொள்ளப்படாதவர்களாகவும் இருப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

ஓர் ஆயர் என்பவர், புதிய பணிகளையும் அல்லது, பதவி உயர்வுகளையும் பெறுவதற்காக அவர் நேரத்தை வீணடிக்கும்போது, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மேய்ப்புப் பணிக்குரிய செயல்களில் அவர் அக்கறைகாட்ட மறக்கிறார் என்று கூறிய திருத்தந்தை, ஆயர்கள் சந்தையில் வாங்கப்படுவதில்லை; கிறிஸ்துவே அவர்களைத் தம்முடைய திருத்தூதர்களின் வழித்தோன்றல்களாகவும், அவருடைய மந்தையின் மேய்ப்பர்களாகவும் தேர்ந்தெடுக்கிறார் என்றும் தெரிவித்தார்.

நம் பராமரிப்பில் உள்ள மக்கள் அதிக எண்ணிக்கையில் உலகம் முழுவதும் புலம்பெயர்ந்தவர்களாகவும், சில வேளைகளில் பரந்த நாடுகளில் வாழும் அவர்களைச் சந்திப்பது மிகவும் கடினமாகவும் இருக்கும் என்பதைத் தான் அறிந்துள்ளதாகக் கூறிய திருத்தந்தை, ஆனாலும் கூட, திருஅவை என்பது ஓர் அன்பான தாய், அவர்களைச் சென்றடைவதற்கும், கடவுளின் அன்பை அவர்களின் சொந்த திருஅவையின் பாரம்பரியத்தில் அவர்களுக்கு வழங்குவதற்கும், சாத்தியமான எல்லா வழிகளையும் அது தேடாமல் இருக்க முடியாது என்றும் விளக்கினார்.

மேலும் இது நற்செய்தி அறிவிப்புக்கு உதவும் ஒரு வழிமுறையாக மட்டுமே இருக்கும் கட்டமைப்புகளைப் பற்றிய கேள்வி அல்ல, ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக மேய்ப்புப் பணி என்பது, நற்செய்திக் கண்ணோட்டம் மற்றும் திறந்த மனப்பான்மையுடன் நல்லதைத் தேடுவதும் மேம்படுத்துவதும் ஆகும் என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

அன்பான சகோதரர்களே, இந்தப் புனிதமான தவக்காலத்தில் திருச்சிலுவையை தியானித்து, மன்னிப்புடனும் அன்புடனும் நம்முடைய காயங்களை ஆற்றும் கிறிஸ்துவை கட்டியெழுப்ப அழைக்கப்பட்டுள்ளோம் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, மனம் மற்றும் ஆன்மாவின் அகலத்தில் அனைவருக்காகவும் இறைவனிடம் பரிந்துபேச நாம் அழைக்கப்படுகிறோம் என்றும் கூறினார்.

சகோதரர்களே, அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், இருபால் துறவியர், மற்றும், உங்கள் திருச்சபையின் அனைத்து விசுவாசிகளுடனும் இணைந்த நிலையில், நீங்கள் ஆற்றவேண்டிய பெரியதொரு பொறுப்பு உங்களுக்கு உள்ளது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, வெறுப்பு, பிரிவு, வன்முறை மற்றும் பழிவாங்கும் இருளைப் பெரும்பாலும் விரும்பும் இவ்வுலகில், நீங்கள் கிறிஸ்தவ இறைவாக்கின் கதிர்களைப் ஒளிரச்செய்ய அழைக்கப்பட்ட ஒரு விடியலாகத் திகழ்கிறீர்கள் என்றும் உரைத்தார்.

நான் முதன்மையானதாகக் கருதும் மற்றொரு காரியத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறிய திருத்தந்தை,  இறைவனின் அன்புக்குரியவர்களாக, நற்செய்தியின் முன்னுரிமைகளை நீங்கள் பகுத்தறிந்து, இணக்கமாகச் செயல்பட உங்களை அனுமதிக்கும் உள்நோக்கத்தைப் பேணுவதற்கு, அதிகம் இறைவேண்டல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நான் நம்பி உங்களிடம் ஒப்படைக்க விரும்பும் மேலும் ஒரு சிந்தனை, மேய்ப்புப்பணிகான அழைத்தல்களுடன் தொடர்புடையது என்று உரைத்த திருத்தந்தை, நமது மதச்சார்பற்ற உலகில், குருமாணவர்கள் மற்றும் துறவு வாழ்வில் உருவாகி வருபவர்கள், இன்று எப்பொழுதையும் விட, பதவியைப் பெறத்தூண்டும் எந்தவொரு ஆசையிலிருந்தும் விலகி, ஓர் உண்மையான கிறிஸ்தவ வாழ்வுக்குரியவற்றில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

அறுவடை எப்பொழுதும் அதிகமாக இருந்தாலும், வேலையாட்கள் குறைவாக இருந்தாலும், தம்மை நம்புகிறவர்களிடத்தில் வியப்புக்குரிய காரியங்களை நிகழ்த்துகிற ஆண்டவர் இயேசுவிடம் நம்பிக்கை கொள்வோம் என்றும், நம் வாழ்வின் எல்லா நிலைகளிலும் இந்த நம்பிக்கையை வளர்த்துக்கொள்வோம் என்றும் விண்ணப்பித்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 February 2024, 13:56