அச்சம் மற்றும் வெறுப்பின் அலைகளை ஏற்படுத்தியுள்ள போர்

சரியான மற்றும் நிலையான அமைதியை ஏற்படுத்தும் அரசியல் நடவடிக்கைகள் உருவாக்கப்பட வேண்டும். இதனால் மனிதநேயம் மீட்டெடுக்கப்பட வேண்டும்

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஏராளமான இறப்புக்கள், காயங்கள், வேதனைகள், கண்ணிர் போன்றவற்றை ஏற்படுத்தியுள்ள உக்ரைன் போர் தொடங்கி இரண்டாம் ஆண்டு நிறைவுற்ற நிலையில், இப்போரானது ஐரோப்பா மட்டுமன்று உலகளாவிய வகையில் அச்சம் மற்றும் வெறுப்பின் அலைகளை ஏற்படுத்தியுள்ளன என்றும், காலநிலை நெருக்கடி எனப்படும் உலகளாவிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 25 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செபஉரையின் இறுதியில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல், காங்கோ ஜனநாயகக்குடியரசு, நைஜீரியா, மங்கோலியா பகுதி மக்களுக்காக செபிப்பதாகவும் எடுத்துரைத்தார்.

முடிவுகள் காணப்படாத வகையில் ஏராளமான பாதிப்புக்களை ஏற்படுத்திவரும், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்காக செபிப்பதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், சரியான மற்றும் நிலையான அமைதியை ஏற்படுத்தும் அரசியல் நடவடிக்கைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், இதனால் மனிதநேயம் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பாலஸ்தீனம், இஸ்ரயேல், மற்றும் போரினால் பிளவுபட்ட எண்ணற்ற மக்களுக்காக செபிக்க மறக்க வேண்டாம் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், அவர்களுக்காக செபிப்பதோடு மட்டுமல்லாமல் காயம்பட்ட, துன்புற்ற அப்பாவிக் குழந்தைகள் மற்றும் மக்களுக்கு உறுதியான உதவிகளைச் செய்ய மறக்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் வன்முறை அதிகரித்து வருவதை குறித்து கவலை தெரிவித்த திருத்தந்தை அவர்கள், மோதல்கள் நிறுத்தப்படுவதற்காகவும், நேர்மையான மற்றும் ஆக்கபூர்வமான உரையாடலுக்கான தேடலுக்காகவும், உலக அமைதிக்காகவும் நம்பிக்கையுடன் செபிக்க அழைப்புவிடுக்கும் ஆயர்களோடு இணைந்து அழைப்பதாகவும் கூறினார்.

நைஜீரியாவில் அடிக்கடி நடக்கும் கடத்தல் சம்பவங்கள் கவலையை ஏற்படுத்தி உள்ளன என்று கூறிய திருத்தந்தை அவர்கள், நைஜீரிய மக்களோடு தனது ஆன்மிக நெருக்கத்தை செபத்தின் வழியாக வெளிப்படுத்துவதாகவும், இந்த கடத்தல்கள் அதிகரிக்கப்படுவதை முடிந்தவரை கட்டுப்படுத்த, தலைவர்கள் பணியாற்றுவார்கள் என்று தான் நம்புவதாகவும் எடுத்துரைத்தார்.

மங்கோலியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான குளிரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களோடு தனது உடனிருப்பை வெளிப்படுத்துவதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், காலநிலை மாற்றத்தினால் இவ்விளைவுகள்  ஏற்பட்டுள்ளன என்றும், பலரது வாழ்வில் குறிப்பாக, மிகவும் பலவீனமானவர்களின் வாழ்வில், ஆழமான பாதிப்புக்களை ஏற்படுத்தும் இத்தகைய காலநிலை நெருக்கடி என்பது ஓர் உலகளாவிய சமூகப் பிரச்சனை என்றும் கூறினார்.

இத்தகைய காலநிலைமாற்றப் பிரச்சனைகளிலிருந்து மக்களைக் காக்க, அறிவுப்பூர்வமான, துணிவான, தேர்வுகளைத் தேர்ந்து கொள்ளவேண்டும் என்றும், படைப்பைக் காப்பதற்கான பங்களிப்பை ஒவ்வொருவரும் வழங்க செபிக்க வேண்டும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளிலிருந்து கூடிவந்திருந்த அனைத்து திருப்பயணிகளையும் வாழ்த்தி தனது விண்ணப்பங்களை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 February 2024, 13:17