தேடுதல்

அருகிருப்பு, நெருக்கம், ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் நோயாளர் உலக தினம்

நோயுற்றிருக்கும்போது நமக்கு மிக முக்கியமாகத் தேவைப்படுவது நம்மை அன்பு செய்பவர்கள் மற்றும் நலமளிப்பவர்களின் உடனிருப்பு, இதயத்தில் கடவுளின் அருகிருப்பு போன்றவையே

மெரினா ராஜ் - வத்திக்கான்

திருஅவையில் இன்று புதிய புனிதராக அறிவிக்கப்பட்ட அர்ஜென்டினாவைச் சார்ந்த María Antonia de Paz y Figueroa அவர்களுக்காக கரவொலி எழுப்பி நம் மகிழ்வைத் தெரிவிப்போம் என்றும், லூர்து அன்னை திருவிழாவன்று சிறப்பிக்கப்படும் நோயாளர் உலக தினமானது நோயாளர்களோடு நாம் கொண்டிருக்கவேண்டிய அக்கறை, அருகிருப்பு, ஒருமைப்பாடு மற்றும் நெருக்கத்தை வெளிப்படுத்துகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 11 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு மூவேளை செபஉரை வழங்கியதைத் தொடர்ந்து, தனது விண்ணப்பங்களை எடுத்துரைத்து இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நோயுற்றிருக்கும்போது நமக்கு மிக முக்கியமாகத் தேவைப்படுவது நம்மை அன்பு செய்பவர்கள் மற்றும் நலமளிப்பவர்களின் உடனிருப்பு, இதயத்தில் கடவுளின் அருகிருப்பு போன்றவையே என்றும், துன்புறுபவர்கள், நோயாளர்கள் போன்றோரை சந்திக்க நற்செய்தியின் வழியாக இயேசு நமக்கு அழைப்புவிடுக்கின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.   

உலகில் வாழும் அனைத்து நோயாளர்கள் மற்றும் பலவீனமானவர்களுடன் திருஅவையின் நெருக்கத்தை வெளிப்படுத்துவதாகக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் செயலான அருகிருப்பு, இரக்கம் மற்றும் மென்மையை மறந்துவிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

பராமரிப்பிற்கான உரிமைகள் மற்றும் வாழ்விற்கான உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு துன்புறும் மக்கள், வறுமையில் வாடுபவர்கள் போன்றோரை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், ஒவ்வொரு நாளும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரினால் மனித உரிமைகள் மீறப்பட்டு, எண்ணற்ற கொடிய துன்பங்களை அனுபவிக்கும், உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல், மியான்மார் மக்களுக்காகாவும் போரினால் துன்புறும் ஏனைய மக்களுக்காகவும் செபிப்பதாக எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 February 2024, 13:04