தேடுதல்

அமைதியான எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப முயற்சிப்போம்

போர் எப்போதும் தோல்வி தான் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. அழிவைத் தருகின்ற, முடிவற்ற, பயனற்ற, பிரச்சனைகளுக்குத் தீர்வைத் தராத இப்போரினால் மக்கள் சோர்வடைகின்றார்கள்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

மிகவும் கடுமையான மனிதாபிமானமற்ற சூழ்நிலையை ஏற்படுத்திய, சூடான் நாட்டு ஆயுத மோதல் தொடங்கி, பத்து மாதங்களைக் கடந்துவிட்டது என்றும், அன்பான சூடான் மக்களின் அமைதியான எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப, அமைதிக்கான வழிகளை விரைவில் கண்டறிய சிறப்பாக செபிப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 18 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த ஏறக்குறைய 15000 திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் இவ்வாறு எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  உலக அமைதிக்காக செபிக்க வலியுறுத்தினார்.

மொசாம்பிகாவின் காபோ டெல்காதோ பகுதியில் அதிகரித்து வரும் பாதுகாப்பற்ற கட்டமைப்பினால் ஏற்படும் அழிவு குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், ஆப்ரிக்காவில் உள்ள  தூய Mazeze அன்னை கத்தோலிக்க பணி நிலையம் அண்மையில் தீவைத்து எரிக்கப்பட்டது குறித்த தனது வேதனையைத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட அப்பகுதியானது அமைதியை மீண்டும் திரும்பப்பெற செபிக்கவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

போர் மற்றும் மோதல்களால் தங்களது இரத்தத்தை சிந்திக்கொண்டிருக்கும் ஆப்ரிக்க கண்டத்தில் வாழும் மக்கள் மட்டுமன்றி, ஐரோப்பா, பாலஸ்தீன், உக்ரைன் ஆகிய பகுதிகளில் வாழும் துன்புறும் மக்களுக்காகவும் செபிக்கக் கேட்டுக்கொண்டார்.

போர் எப்போதும் தோல்வி தான் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், அழிவைத் தருகின்ற, முடிவற்ற, பயனற்ற, பிரச்சனைகளுக்குத் தீர்வைத்தராத இப்போரினால் மக்கள் சோர்வடைகின்றார்கள் என்றும் எடுத்துரைத்தார்.

நமது செபம் பயனுள்ளது என்பதை உணர்ந்து சோர்வடையாமல் தொடர்ந்து அமைதிக்காக செபிப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், அமைதிக்காக அர்ப்பணிக்கப்பட்ட நல்ல மனதையும் இதயத்தையும் இறைவனிடம் கொடையாகக் கேட்போம் என்றும் கூறினார்.

உரோம் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 18 ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் தான் தொடங்க இருக்கும் தவக்கால தியானம் பற்றியும் திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்தார்.     

உரோம் கூரியாவின் உடன்பணியாளர்களுடன் இணைந்து தவக்கால தியானத்தைத் தொடங்க இருப்பதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இத்தவக்காலத்திலும், யூபிலி ஆண்டிற்காக தயாராகும் இச்செப ஆண்டு முழுவதிலும், கடவுளின் உடனிருப்பை உணரும் விதமாக அவர்முன் கூடிவருவதற்கான அதிக வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும் என்று திருப்பயணிகளிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 February 2024, 14:25