தேடுதல்

புர்கினா பாசோ கோவில் ஒன்றில் புர்கினா பாசோ கோவில் ஒன்றில் 

மோதல்களுக்கான தீர்வை விரோத மனப்பான்மை தருவதில்லை

வழிபாட்டுதலங்கள் மதிக்கப்பட வேண்டும் மற்றும் அமைதியின் மதிப்பீடுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்ற அழைப்பு புர்கினா பாசோவிற்கு விடப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

புர்கினா பாசோ நாட்டில் கத்தோலிக்கக் கோவில் ஒன்றிலும், மசூதி ஒன்றிலும் இடம்பெற்ற தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டு தந்திச் செய்தி ஒன்றை அந்நாட்டுக்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களால் அனுப்பப்பட்டுள்ள இந்த தந்திச் செய்தியில், வழிபாட்டுதலங்கள் மதிக்கப்பட வேண்டும் மற்றும் அமைதியின் மதிப்பீடுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்ற அழைப்பு திருத்தந்தையால் விடப்பட்டுள்ளது.

நாட்டின் வடகிழக்குப் பகுதியின் Essakane என்னுமிடத்தில் உள்ள கத்தோலிக்கக் கோவிலின் ஞாயிறு திருப்பலியின்போது இடம்பெற்ற தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் மற்றும் கிழக்குப் பகுதியில் உள்ள Natiaboani  மசூதியில் தொழுகை இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குறித்து தன் ஆழ்ந்த அனுதாபங்களை அத்தந்திச் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மோதல்களுக்கான தீர்வாக விரோத மனப்பான்மையை கைக்கொள்ளல் கூடாது என அனைவரையும் விண்ணப்பித்துள்ளார்.

புர்கினா பாசோ மற்றும் நிஜர் நாடுகளின் ஆயர் பேரவைத் தலைவரான ஆயர் Laurent Dabiré அவர்களுக்கு கர்தினால் பரோலின் அவர்களால் அனுப்பப்பட்டுள்ள தந்திச் செய்தியில்,  மனித உயிரிழப்புக்கள் குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலைக் கொண்டுள்ளதாகவும், உறவினர்களை இழந்துள்ள குடும்பங்களின் துக்கத்தில் அவரும் கலந்து கொள்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 25ஆம் தேதி ஞாயிறன்று Essakane என்னுமிடத்தில் உள்ள கத்தோலிக்கக் கோவிலில் இடம்பெற்ற தாக்குதலில் 12 பேர் அவ்விடத்திலேயே உயிரிழக்க, 3 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

அதே நாளில் Natiaboani மசூதியில் இடம்பெற்ற தாக்குதலில் குறைந்தபட்சம் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 February 2024, 15:09