தேடுதல்

அர்ப்பணிக்கப்பட்ட துறவியர் உலக நாள் திருப்பலி

28 ஆவது ஆண்டு அர்ப்பணிக்கப்பட்ட துறவியர் உலக நாளை முன்னிட்டு உரோம் உள்ளூர் நேரம் மாலை 5 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 9.30 மணியளவில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமான இருபால் துறவியர் கலந்து கொண்டனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

அர்ப்பணிக்கப்பட்ட துறவியர் உலக நாளை முன்னிட்டு வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற திருப்பலிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று மறையுரையாற்றினார்.  

பிப்ரவரி 2 வெள்ளிக்கிழமை 28 ஆவது ஆண்டு அர்ப்பணிக்கப்பட்ட துறவியர் உலக நாளை முன்னிட்டு உரோம் உள்ளூர் நேரம் மாலை 5 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 9.30 மணியளவில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமான இருபால் துறவியர் கலந்து கொண்டனர்.

பேதுரு பெருங்கோவிலின் நுழைவாயில் அருகே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மெழுகுதிரிகளை ஆசீர்வதித்த பின்னர் பவனியாக துறவியர் கையில் எரியும் மெழுதிரிகளை ஏந்தி வந்தனர். அதன்பின்னரே பெருங்கோவிலின் விளக்குகள் ஒளிர்விட ஆரம்பித்தன.

பீடம் வரை அனைவரும் பவனியாக வர, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வைத் தேர்ந்தோர், மற்றும் திருத்தூதுப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்பினரை ஒருங்கிணைக்கும் திருப்பீடத் துறையின் தலைவர்  கர்தினால் João Braz de Aviz அவர்கள் திருப்பலி பீடத்தை தூபம் கொண்டு அர்ச்சித்தார். அதன்பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிலுவை அடையாளம் வரைந்து அர்ப்பணிக்கப்பட்ட துறவியருக்கான உலக நாள் திருப்பலியைத் துவக்கி வைத்தார்.

முதல் வாசகமானது இஸ்பானிய மொழியில் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பதிலுரைப்பாடலானது சிஸ்டைன் சிற்றாலய பாடகர் குழுவினரால் பாடப்பட்டது. நற்செய்தி வாசகமானது திருத்தொண்டர் ஒருவர் வாசிக்கப்பட்ட பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அர்ப்பணிக்கப்பட்ட துறவியர் உலக நாளுக்கான மறையுரையை வழங்க ஆரம்பித்தார்.

மறையுரையைத் தொடர்ந்து ஆங்கிலம், போலந்து, பிரெஞ்சு, அரபு, போர்த்துக்கீசியம் ஆகிய மொழிகளில் நம்பிக்கையாளர் மன்றாட்டுக்கள் எடுத்துரைக்கப்பட்டன.

காணிக்கைப்பவனியின்போது மூன்று குடும்பத்தார் மற்றும் துறவறத்தார் திருத்தந்தையிடம் திருப்பலிக்கான காணிக்கைப் பொருள்களை கொடுத்தனர். கர்தினால் அவர்கள் திருப்பலியின் நற்கருணை மன்றாட்டுப் பகுதியை திருத்தந்தை சார்பில் எடுத்துரைத்து செபிக்க மக்கள் அனைவரும் பக்தியுடன் இத்திருப்பலியில் கலந்து கொண்டனர்.

திருநற்கருணைக் கொண்டாட்டத்தின் இறுதியில் கூடியிருந்த அனைவருக்கும் தன் சிறப்பு அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 February 2024, 15:18