தேடுதல்

 Valencia தீ விபத்து Valencia தீ விபத்து  (ANSA)

இஸ்பெயின் தீவிபத்தினால் இறந்தோர்க்குத் திருத்தந்தை ஆறுதல்

14 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தினால் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 4 பேர் உட்பட 10 இறந்துள்ளனர், 20 பேர் காணாமல் போயுள்ளனர், பலர் காயமுற்றுள்ளனர்.

மெரினா ராஜ்  - வத்திக்கான்

இஸ்பெயினின் வலென்சியா பகுதியில் உள்ள கம்பனர் அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஆன்மிக நெருக்கத்தை வெளிப்படுத்தி இரங்கல் தந்தி ஒன்றினை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 23 வெள்ளிக்கிழமை ஏற்பட்ட இத்தீவிபத்தினால் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 4 பேர் உட்பட 10 இறப்புக்கள், 20 பேர் காணாமலும், பலர் காயமுற்றும் உள்ள நிலையில் திருத்தந்தையின் இரங்கல் தந்திச்செய்தியானது, வலேன்சியா மறைமாவட்ட பேராயர் ENRIQUE BENAVENT VIDAL அவர்களுக்கு திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் கையொப்பமிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

14 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் இறந்தவர்கள் அனைவருக்கும், இறைவனின் இரக்கத்தை வேண்டுவதாகவும், இறப்பு, இழப்பு மற்றும் காயங்களை ஏற்படுத்தியுள்ள இத்தீவிபத்தின் துன்பத்திலிருந்து, வலேன்சியா பகுதி மக்கள் மீண்டு வர, இறைவன் அவர்களுக்கு ஆற்றல் அளிக்க செபிப்பதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

20க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணியில் ஈடுபடுவோர், மீட்புப்பணியில் இருப்போர் ஆகிய அனைவருக்கும் இறைவனின் ஆற்றல் கிடைக்கப்பெற செபிப்போம் என்றும், இத்தகைய சூழ்நிலையைக் கடப்பதற்கான ஆற்றலைப்பெற, நமது பாதுகாவலரும் உதவியாளருமான தூய யோசேப்பு மற்றும் அன்னை மரியாவின் பரிந்துரையை நாடுவோம் என்று குறிப்பிட்டு ஆறுதல் தரும் அப்போஸ்தலிக்க ஆசீரை இதயப்பூர்வமாக அவர்களுக்கு வழங்குவதாக எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 February 2024, 14:46