தேடுதல்

திருத்தந்தையின் புதன் மறைக்கல்விஉரை - சோம்பல் எனும் தீயொழுக்கம்

பிப்ரவரி 14 புதன்கிழமை தவக்காலத்தின் தொடக்கமான திருநீற்றுப்புதனன்று வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு சோம்பல் என்னும் தீயொழுக்கம் குறித்த கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

அருளின் காலமாம் இத்தவக்காலத்தில் இறைவனின் அன்பையும், இயேசு நமக்காகப் பட்ட பாடுகளையும் சிறப்பாக நினைவுகூர்ந்து, செபம், தவம், தானம் என்னும் மூன்று நிலைகளில் சிந்திக்க நாம் அழைக்கப்படுகின்றோம். பிப்ரவரி 14 புதன்கிழமையாகிய இன்று துவங்கியுள்ள 2024 ஆம் ஆண்டு தவக்காலத்தின் முதல் நாளில் வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் பல்வேறு நாடுகளைச் சார்ந்திருந்த திருப்பயணிகள் ஏராளமானோர் திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரைக்கு செவிசாய்க்க மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர்.

அரங்கத்தில் கூடியிருந்த திருப்பயணிகள் அனைவரையும் கரமசைத்து மகிழ்வுடன் வரவேற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதன் மறைக்கல்வி உரை வழங்கும் இடத்தை வந்தடைந்ததும் சிலுவை அடையாளம் வரைந்து கூட்டத்தை இனிதே துவக்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து மத்தேயு நற்செய்தியில் உள்ள "கெத்சமெனித் தோட்டத்தில் இயேசு" என்னும் பகுதியின் கீழ் உள்ள இறைவார்த்தைகள், போர்த்துக்கீசியம், அரபு, பிரெஞ்சு, போலந்து, ஆங்கிலம், ஜெர்மானியம், இத்தாலியம், இஸ்பானியம் ஆகிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.

மத்தேயு 26: 36,40,41

இயேசு சீடர்களுடன் கெத்சமனி என்னும் இடத்திற்கு வந்தார். அவர், “நான் அங்கே போய் இறைவனிடம் வேண்டும்வரை இங்கே அமர்ந்திருங்கள்” என்று அவர்களிடம் கூறினார். பின்பு, அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், “ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வமுடையதுதான்; ஆனால், உடல் வலுவற்றது. எனவே, சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்” என்றார்.

நற்செய்தி வாசகமானது வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் என்னும் தலைப்பில் வழங்கி வரும் தொடர் பொதுமறைக்கல்வி உரையின் எட்டாம் பகுதியாக சோம்பல் என்னும் தீயொழுக்கம் குறித்த கருத்துக்களை திருப்பயணிகளுக்கு வழங்க ஆரம்பித்தார். திருத்தந்தையின் மறைக்கல்விஉரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.     

அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!

எல்லா கொடிய தீயொழுக்கங்களுக்கு இடையில் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் இருக்கும் ஒன்று சோம்பல். மிக அமைதியாக நமக்குள் நடைபெறும் இத்தீயொழுக்கமானது சோம்பேறித்தனம் மற்றும் மந்தமான மனநிலையால் உருவாகின்றது. உண்மையில் சோம்பல் உருவாகும் காரணத்தை விட அது உருவாக்கும் விளைவுகள் தான் அதிகம். ஒருவன் எந்த வேளையும் செய்யாமல், அலட்சியமாக வெறுமனே உட்கார்ந்து இருக்கின்றபோது, அவனை சோம்பேறி என்று நாம் கூறுகின்றோம். சோம்பேறித்தனத்தின் வேராக அடித்தளமாக பராமரிப்பு குறைபாடு இருக்கின்றது என்று பாலைவனத்தந்தையர்கள் கூறுகின்றனர்.

சோம்பல் மிகவும் ஆபத்தான சூழலுக்கு நம்மை உட்படுத்துகின்றது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் இறப்பை விரும்பும் எண்ணத்தால் தூண்டப்பட்டவர்கள் போலாகின்றனர். எல்லாவற்றிலும் ஒரு வெறுப்பையும், கடவுளோடு கொண்டுள்ள உறவில் ஆர்வமின்மையையும் கொண்டவர்களாக மாறுகின்றனர். தங்களது கடந்த காலத்தில் இதயத்திற்கு இதமளித்த நற்செயல்கள் மற்றும் தூய செயல்கள் அனைத்தும் இப்போது பலனற்றவையாக அவர்களுக்குத் தோற்றமளிக்கின்றன. கடந்து போகும் இத்தகைய காலத்திற்காக, மனிதனும் அவனுக்குப் பின் இருக்கும் சீர்படுத்த முடியாத சரிசெய்ய முடியாத இளமைப்பருவமும் வருந்துகின்றது.

நண்பகல் அலகை என்று அழைக்கப்படும் சோம்பல் ஒரு நாளின் நண்பகல் வேளையில் உருவாகின்றது. சோம்பல் அதன் உச்சியில் இருக்கும்போது, நம்முன் இருக்கும் நேரங்கள் மிகவும் சலிப்பானதாகவும், வாழ்வதற்கு உகந்ததல்லாதவைகள் போன்றும் காட்சியளிக்கின்றன. எவாகிரியோ என்னும் துறவி சோம்பல் குறித்து இவ்வாறு கூறுகின்றார். ”சோம்பல் கொண்டவரின் கண்கள் எப்போதும் சன்னலைப் பார்த்தபடியே இருக்கும். அவரது மனம், கற்பனையில் பலரைச் சந்தித்துக் கொண்டிருக்கும். படிக்கும்போது தலைகவிழ்ந்து, அடிக்கடி கொட்டாவி விட்டுக்கொண்டிருப்பார். சோம்பலினால் வரும் தூக்கத்தைத் தவிர்க்க, அடிக்கடி கண்களைக் கசக்குகின்றார், கைகளைத் தேய்க்கின்றார், புத்தகத்திலிருந்து தன் பார்வையை விலக்கி சுவரைப் பார்க்கின்றார். மறுபடியும் புத்தகத்தைப் பார்க்கும் நபர், கொஞ்ச நேரம் வாசித்துவிட்டு இறுதியில் தலையைத் தாழ்த்தி அப்புத்தகத்தின் அடியிலேயே சிறிது உறங்கி விடுகின்றார். பசி மற்றும் அவரது அடிப்படைத் தேவைகளுக்காக மீண்டும் அவராக எழும்பும் வரையில், அப்படியே உறங்குகின்றார். இத்தகைய சோம்பல் கொண்ட மனிதரால் கடவுளின் பணியினை உடனடியாக நிறைவேற்றுவது இயலாததாகின்றது என்று நிறைவுசெய்கின்றார் துறவி எவாகிரியோ.

தற்கால வாசகர்கள் இந்த விளக்கங்கள், உளவியல் மற்றும் தத்துவக் கண்ணோட்டத்தில், மனச்சோர்வின் தீமையை மிகவும் நினைவூட்டுவதாகக் காண்கிறார்கள். உண்மையில், சோம்பேறித்தனத்தால் பிடிக்கப்பட்டவர்களுக்கு, வாழ்க்கை என்பது அர்த்தமற்றதாகிறது அவர்கள் வாழ்வின் அர்த்தத்தை இழக்கிறார்கள். அவர்களது செபம் கூட சலிப்பானதாகவும், எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வும் அர்த்தமற்றதாகவும் மாறிவிடுகின்றது. இளமையில் ஊட்டத்தைத் தந்த விருப்பங்கள், நியாயமற்றவைகள் போன்றும், கண்ட கனவுகள் மகிழ்ச்சியைத் தராதவைகளாகவும் மாறிவிடுகின்றன. இதனால் கவனச்சிதறலுக்கும் எதையும் சிந்திக்காமல் இருப்பதற்கும், அதிலிருந்து வெளியேறுவது ஒன்றை மட்டும் வழியாகக் கொண்டவர்களாகவும் மாறுகின்றார்கள். மேலும் முற்றிலும் வெறுமையான மனதைக் கொண்டவர்களாகவும், முன்கூட்டியே இறப்பைத் தேடுபவர்களாகவும் மாறுகின்றனர்.

மிகவும் ஆபத்தான இந்த தீமையை எதிர்கொள்ளும்போது நாம் கடைபிடிக்கவேண்டிய பல்வேறு தீர்வுகளை ஆன்மிகத் தலைவர்கள் வழங்குகின்றனர். எது மிக முக்கியமானதோ அதை நம்பிக்கையின் பொறுமை என்று கூறுகின்றனர். சோம்பல் என்னும் தீயொழுக்கத்தின் அடியில் மனிதனின் விருப்பமானது வேறு இடத்தில் இருக்கும். அதிலிருந்து நாம் மீள  கடவுளின் திருமுன் நமது இருப்பு, நேரம், சூழல் எப்படி உள்ளது என்பதைப் பற்றி சிந்திக்கவும், வரவேற்கவும் நாம் தயாராக இருக்கவேண்டும். தாங்கள் வாழ்கின்ற சிறு அறை தங்களது வாழ்க்கையின் மிகச்சிறந்த ஆசிரியர் என்று துறவிகள் கூறுகின்றனர். ஏனெனில் நாம் தங்கி இருக்கும் இடம் இறைவனோடு மிக அன்போடு நமது வாழ்க்கையைப் பற்றி தினமும் பேசும் இடம். அலகையானது நமது இப்போதைய இருப்பு நேரம் பற்றி சிந்திக்கும் மகிழ்ச்சியை நன்றியுணர்வை அழிக்க நினைக்கின்றது. எல்லாமே வீண், அர்த்தமற்றது, எதையும், யாரையும் பாதுகாப்பது, பராமரிப்பது தேவையற்றது என நம்மை நம்ப வைக்க அலகை முயற்சிக்கின்றது. நமது வாழ்வில் நாம் சோம்பலினால் பாதிக்கப்பட்ட நபர்களைச் சந்திக்கின்றோம். இவன் சோம்பேறித்தனம் கொண்டவன். எளிதில் தொற்றக்கூடிய சலிப்பு மனம் கொண்டவன் என்று பலரை நாம் அழைக்கின்றோம்.

சோம்பலினால் பாதிக்கப்பட்டு அலைந்து கொண்டிருக்கும் எத்தனையோ மனிதர்களை நாம் பார்க்கின்றோம். இவர்கள் தாங்கள் மேற்கொண்ட பாதையை அறிவற்றத்தனமாகக் கைவிட்டிருக்கின்றார்கள். சோம்பல் என்பது உறுதியான போர், எனவே நாம் அதன் எல்லா நிலையிலும் வெற்றி பெறவேண்டும். புனிதர்களைக் கூட விட்டுவைக்காதது சோம்பல் என்பதை அவர்களின் வரலாற்றுக் குறிப்பில் உள்ள சில பக்கங்கள் தெளிவுபடுத்துகின்றன. எல்லாமே இருளாகிப்போன நேரங்கள், சிக்கலான பயங்கரமான தருணங்கள், உண்மையான உறுதியான நம்பிக்கை கொண்ட இரவுகள், என்று அவர்கள் எடுத்துரைக்கும்  பகுதிகள் இத்தகைய சோம்பலினால் தாக்கப்பட்ட இடங்களாகும். புனிதர்கள் எளிமையான நம்பிக்கை கொண்டு பொறுமையுடன் அத்தகைய இருளின் இரவில் நடக்க நமக்குக் கற்றுத் தருகின்றனர். சோம்பலின் அடியில் ஒரு சிறிய அளவிலான அர்ப்பணிப்பையும், அடையக்கூடிய இலக்குகளை வைத்திருக்கவும், நமது சோதனைகளை முறியடிக்க விடாமுயற்சியுடன், நம்மை எப்போதும் கைவிடாத இயேசுவின் மீது நாம் சாய்ந்துகொள்ளவும் புனிதர்கள் பரிந்துரைக்கின்றனர்.  

சோம்பலின் முயற்சியால் துன்புறும் நமது நம்பிக்கையானது, அதன் மதிப்பை ஒருபோதும் இழக்காது. உண்மையான மனித நம்பிக்கையானது  ஒளி இழக்கச்செய்யும் எல்லா இருளான சூழல் இருந்த போதிலும் தாழ்ச்சியுடன் தன் நம்பிக்கையில் இருக்கின்றது. இத்தகைய நம்பிக்கையானது நமது இதயத்தில் நிலைத்து நிற்கின்றது. சாம்பலுக்குள் மறைந்திருக்கும் தீக்கனல்கள் போல எப்போதும் நிலைத்திருக்கும். சோம்பல் என்னும் தீயொழுக்கத்தில் நாம் விழ நேரும் போது அல்லது அதற்கான சூழல் ஏற்படும்போது, நமக்குள் நாமே பார்த்து நம்பிக்கையின் தீக்கனல்களைப் பாதுகாத்து முன்னேறிச் செல்வோம்.

இவ்வாறு தனது மறைக்கல்வி உரையினை நிறைவு செய்த திருத்தந்தை  பிரான்சிஸ் அவர்கள் கூடியிருந்த அனைத்து திருப்பயணிகளையும் வாழ்த்தினார்.

இத்தாலிய மொழி பேசும் திருப்பயணிகளை அன்புடன் வரவேற்ற திருத்தந்தை அவர்கள், பெஸ்காராவில் உள்ள மார்கோனி கல்லூரி மாணவர்கள், சுத்ரியில் உள்ள "ஆல்டோ மோரோ" நிறுவனத்தார், கொர்பெத்தாவில் உள்ள "ஜான்னா பெரெத்தா மோல்லா பள்ளி மாணவர்கள் ஆகியோருக்குத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும் மிலானில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் குழந்தைகள் அவர்களின் பெற்றோர் மற்றும் நலவாழ்வுப் பணியாளர்களையும் லெச்சேயின் மோட்டார் சிகிச்சை சங்கத்தின் உறுப்பினர்களையும் வரவேற்றார்.

திருஅவையின் மறைசாட்சிகள் பலரின் வாழ்க்கை வரலாற்றை நாம் அனைவரும் படித்திருப்போம். வத்திக்கான் இப்போது இருக்கும் இடத்தில், பல மறைசாட்சிகளின் கல்லறை உள்ளது. உலகில் இது போன்று பல மறைசாட்சிகள் இருக்கின்றனர். தொடக்ககாலத்தில் இருந்ததைவிட அதிகமானோர் இருக்கலாம். கிறிஸ்தவ நம்பிக்கைக்காக துன்புறுத்தப்பட்டவர்கள் பலர் இருக்கின்றனர். இன்று வாழும் மறைசாட்சியாக நம் நடுவில் இருக்கும் கர்தினால் சிமோனி அவர்களை வாழ்த்த நினைக்கின்றேன். அருள்பணியாளராக ஆயராக 28ஆண்டுகள் அல்பேனிய கம்யூனிஸ்ட் சிறையில் கொடுமையான துன்புறுத்தல்களினால் வாழ்ந்தவர். தொடர்ந்து தனது சான்றுள்ள வாழ்வை வழங்கிவருகின்றார். அவரைப்போலவே பலர் இருக்கின்றனர்.  95 வயதான ஆயர் சிமியோனி அவர்கள் இன்னும் திருஅவைக்காக மனம் தளராமல்  பணியாற்றி வருகின்றார். சகோதரர் அவர்களின் சான்றுள்ள வாழ்விற்காக எனது நன்றி. என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

இளைஞர்கள், முதியவர்கள், நோயாளிகள் மற்றும் புதுமணத் தம்பதிகளை நினைவுகூர்ந்து வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், இன்று தொடங்கி இருக்கும் தவக்காலம் குறித்தும் எடுத்துரைத்தார். கடவுளுடைய வார்த்தையைக் கேட்பதற்கும், மிகவும் தேவையிலிருக்கும் நம் சகோதர சகோதரிகளைப் பராமரிப்பதற்கும், மனமாற்றம் மற்றும் உள்ளத்தைப் புதுப்பிப்பதற்கும் தவக்காலத்தின் இந்த நேரத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த நம்மைத் தயார் செய்வோம் என்று கூறினார் திருத்தந்தை.

உக்ரைன், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் போன்ற இடங்களில் மக்கள் படும் பல துன்பங்களை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்றும், போரினால் பாதிக்கப்பட்ட இந்த சகோதர சகோதரிகளுக்காக செபிப்போம். கடவுளுடைய வார்த்தையைக் கேட்பதிலும், தேவையிலுள்ள சகோதர சகோதரிகளைக் கவனித்துக்கொள்வதிலும், நமது செபங்களைத் தீவிரப்படுத்துவதிலும், குறிப்பாக உலகிற்கு அமைதி என்னும் கொடையைப் பரிசாகக் கேட்பதிலும், மனமாற்ற செயல்முறைகளிலும் முன்னேறுவோம் என்று கூறினார் திருத்தந்தை

இவ்வாறு தனது  விண்ணப்பங்களை எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 February 2024, 09:04

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >