சேவை என்பது கிறிஸ்துவினுடைய பணியாளர்களின் அடையாள அட்டை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நீங்கள் ஒருவருக்கொருவர் செவிசாய்க்கவும், உங்கள் மாநாட்டுக்கான கருப்பொருளாக நீங்கள் தேர்ந்துள்ள 'உங்களுக்குள் இருக்கும் கடவுளின் கொடையைத் தூண்டி எழுப்பிடுங்கள்' என்ற திருத்தூதர் புனித பவுலடியாரின் அறிவுரையால் (2 திமோ 1:6) நீங்கள் ஈர்க்கப்படவும் உங்களை நான் ஊக்குவிக்கின்றேன் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோமையில் உலக அருள்பணியாளர்களுக்கான 5 நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்றுவரும் வேளை, பிப்ரவரி 8, இவ்வியாழன்று, வத்திக்கானின் புனித ஆறாம் பவுலரங்கில் அவர்களுக்கு வழங்கியுள்ள எழுச்சியுரையில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, உங்களுக்குள் இருக்கும் கடவுளின் அந்த மங்காத கொடையை உயிர்ப்பிக்கவும், அதன் திருப்பொழிவை மீண்டும் கண்டுபிடிக்கவும், அதன் சுடரை மீண்டும் பற்றி எரியச் செய்யவும் உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் விண்ணப்பித்தார்.
நமக்குக் கிடைத்த கடவுளின் கொடையை எப்படிச் சுடராகப் பற்றி எரியச் செய்வது என்று சிந்திக்கும்போது, அருள்பணியாளர்களின் தொடர் உருவாக்கப் பயிற்சியில் இருக்கவேண்டிய மூன்று பாதைகளான, நற்செய்தியின் மகிழ்ச்சி, கடவுளின் மக்களில் ஒரு பகுதியாக இருப்பதன் உணர்வு, சேவை உருவாக்கம் ஆகியவற்றை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்று அவர்களிடம் உரைத்த திருத்தந்தை பின்னர் ஒவ்வொன்றையும் விரிவாக விளக்கத் தொடங்கினார்.
நற்செய்தியின் மகிழ்ச்சி
நற்செய்தியின் மகிழ்ச்சி என்பது, கடவுள் கனிவும் இரக்கமும் கொண்டு நம்மை அன்புகூர்கின்றார் என்பதை உணர்வதுதான் என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, இறந்து உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் மீட்கும் அன்பின் அழகை அனைவரும் கண்டறியும் வகையில், இந்த மகிழ்ச்சியான அறிவிப்பை நமது சாட்சிய வாழ்வால் உலகம் முழுவதும் முழக்கமிட அழைக்கப்படுகின்றோம் என்றும் விளக்கினார்.
நாம் சீடர்களாக இருந்தால் மட்டுமே கடவுளின் பணியாளர்களாகவும் அவருடைய இறையாட்சியின் மறைப்பணியாளர்களாகவும் ஆக முடியும் என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியின் மகிழ்ச்சியை வரவேற்பதன் வழியாகவும், அதனைப் பாதுகாப்பதன் வழியாகவும் மட்டுமே, இந்த மகிழ்ச்சியை மற்றவர்களுக்குக் கொண்டு வர முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
நமது அருள்பணித்துவ வாழ்வின் தொடர் உருவாக்கப் பயிற்சியில், நாம் எப்போதும் சீடர்கள் மற்றும் வழிப்போக்கர்கள் என்பதை நினைவில் கொள்வோம் என்று குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது கடவுளின் அருளால் நமக்குக் கிடைத்த மிகவும் அழகானதொரு காரியம் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்வோம் என்றும் கேட்டுக்கொண்டார்.
எவ்வாறாயினும், கடவுளின் அருள் என்பது எப்போதும் இயற்கையை ஊகிக்கிறது, மேலும் இது ஒரு ஒருங்கிணைந்த மனித உருவாக்கத்திற்கு அழைப்பு விடுகிறது என்றும் உண்மையில், இயேசுவின் சீடர்களாக இருப்பது என்பது வெளிப்புற துறவறம் பற்றியது அல்ல, மாறாக வாழ்க்கையின் ஒரு பாணியைப் பற்றியது என்றும், கூறிய திருத்தந்தை, இது நமது மனித குணங்களை வளர்ப்பதற்கு நமக்கு அழைப்பு விடுகிறது என்றும் அருள்பணியாளர்கள் ஆவதற்கு முன் நாம் மனிதர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
ஆகவே, உங்கள் ஆற்றல்கள் மற்றும் வளங்கள் அனைத்தையும் மனித உருவாக்கத்திற்கு அர்ப்பணிக்குமாறும் அவற்றின் வளர்ச்சியில் முழுமையாகக் கவனம் செலுத்துமாறும் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறிய திருத்தந்தை, நற்செய்தியின் ஆறுதல் இயேசுவின் ஆவியால் மாற்றப்பட்ட அவர்களின் மனிதநேயத்தின் வழியாகக் கடவுளின் மக்களைச் சென்றடைவதற்கு, முழுமையான மனிதநேயம், நலமான உறவுகள் மற்றும் பணிவாழ்வின் சவால்களை எதிர்கொள்வதில் முதிர்ச்சியுள்ள அருள்பணியாளர்கள் நமக்குத் தேவை என்றும், மனிதநேயமுள்ளவர்களாக மாற்றும் நற்செய்தியின் வலிமையை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது என்றும் சுட்டிக்காட்டினார்.
கடவுளின் மக்களில் ஒரு பகுதியாக இருப்பதன் உணர்வு,
இரண்டாவது பாதையானது, கடவுளுடைய மக்களில் ஒரு பகுதி என்ற உணர்வை வளர்ப்பதை உள்ளடக்கியது என்று கூறிய திருத்தந்தை, நாம் அனைவரும் ஒன்றிணைந்த நிலையில் மறைப்பணித்துவ சீடர்களாக மட்டுமே இருக்க முடியும் என்றும் நாம் தேர்ந்துகொள்ளப்பட்ட கடவுளின் புனித மக்களில் முழுமையாக அங்கம் வகித்தால் மட்டுமே, அருள்பணியாளர்களுக்குரிய கடமையைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்றும் விளக்கினார்.
நாம் கடவுளின் புனித மக்களின் ஒரு பகுதி என்ற உணர்வு, நம்மைப் பாதுகாக்கிறது, நம் முயற்சிகளில் நம்மை நிலைநிறுத்துகிறது, நமது மேய்ப்புப்பணிக்குரிய அக்கறைகளில் நமக்குத் துணை செய்கிறது மற்றும் எதார்த்தத்திலிருந்து விலகி வளரும் ஆபத்திலிருந்தும் மற்றும் எல்லாவற்றிலும் நான் வலிமைபடைத்தவன் என்ற தவறான மனப்போக்கிலிருந்தும் காப்பாற்றுகிறது என்றும் விவரித்தார் திருத்தந்தை.
பணி உருவாக்கம்
இறுதியாக, நாம் எடுக்க வேண்டிய மூன்றாவது பாதை பணி உருவாக்கமாகும், பணி என்பது கிறிஸ்துவினுடைய பணியாளர்களின் அடையாள அட்டை. நமது தலைவராக இயேசு இதை தனது வாழ்நாள் முழுவதும், குறிப்பாக இறுதி இரவு உணவின் போது, அவர் சீடர்களின் பாதங்களைக் கழுவியபோது காட்டினார் என்று எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
இதன் அடைப்படையில் பார்க்கும்போது, பணி உருவாக்கம் என்பது படிப்பினைகளின் தொகுப்பின் பரிமாற்றம் மட்டுமல்ல, மாறாக, அது மற்றவர்கள் மீது கவனம் செலுத்தும் கலை, அவர்களின் அழகு மற்றும் அவர்களிலுள்ள அனைத்து நன்மைகளையும் வெளிக்கொணர்ந்து, அவர்கள் பெற்றுள்ள கடவுளின் கொடைகள்மீது மட்டுமன்றி, அவர்களின் பின்புலம், காயங்கள் மற்றும் ஆசைகள் மீதும் ஒளிபாய்ச்சுகிறது என்றும் குறிப்பிட்டார் திருத்தந்தை.
இதன் விளைவாக, அருள்பணியாளர்களின் தொடர் உருவாக்கப் பயிற்சி என்பது அவர்களுக்குப் பணியாற்றுவது, அவர்களின் பயணத்தை ஊக்குவிப்பது, தெளிந்து தேர்தலில் அவர்களுக்கு உதவுவது, அவர்களுக்கு வழிகாட்டுவது, அவர்களின் சிரமங்களில் அவர்களுடன் இணைந்திருப்பது, மேய்ப்புப் பணி சவால்களுக்கு மத்தியில் அவர்களுக்கு ஆதரவளிப்பது ஆகியவற்றை உள்ளடக்கியது என்பதையும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
இந்த வழியில் உருவாக்கப்பட்ட ஒரு அருள்பணியாளர் பின்னர் கடவுளின் புனித மக்களின் பணியில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்வார், மக்களுடன் நெருக்கமாக இருப்பார், சிலுவையில் எல்லாவற்றையும் சுமந்த இயேசுவைப் போல, அனைவருடைய பொறுப்பையும் விரும்பி சுமப்பார் என்றும் விளக்கினார் திருத்தந்தை
இதுதான் ஒரு மேய்ப்புப் பணியாளரை உருவாக்கும் நடவடிக்கையின் இரகசியம் என்றும், இது நம்மை மையமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக கிறிஸ்துவில் புதிய வாழ்க்கைக்கு மகள்களையும் மகன்களையும் உருவாக்குவதை மையமாகக் கொண்டுள்ளது மற்றும் மனித இதயங்களின் மண்ணிலும் நாம் வாழும் காலங்களிலும் நற்செய்தியின் உயிருள்ள தண்ணீரை ஊற்றுகிறது என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்