தேடுதல்

மனித வர்த்தகத்திற்கு எதிராகக் கண்டனக்குரல் மனித வர்த்தகத்திற்கு எதிராகக் கண்டனக்குரல்  

செவிசாய்ப்போம், கனவு காண்போம், செயல்படுவோம்!

மனித வர்த்தகத்திற்கு எதிரான இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற முடியும் என்பதை நாம் அறிந்துள்ளோம் என்றாலும் கூட, இந்தப் பிரச்சனைக்கான அடிப்படைக் காரணங்கள் என்னவென்பதை அறிந்து அவற்றை அகற்றுவது அவசியம் : திருத்தந்தை.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சிறுவயதில் அடிமையாக விற்கப்பட்டு கடத்தல்காரர்களால் பாதிக்கப்பட்ட சூடான் நாட்டைச் சேர்ந்த புனித பகிதாவின் அடிச்சுவடுகளில் நாம் ஒன்றிணைந்து நடப்போம் என்றும், இன்றும் கூட மனித வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டுள்ள நம் சகோதரர்  சகோதரிகளுக்கு நாம் பதிலளிக்கும் விதமாக திறந்த இதயமுடன் அவர்களுக்கு உதவ முன்வருவோம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி எட்டாம் நாள் சிறப்பிக்கப்படும் உலக மனித வர்த்தகத்திற்கு எதிரான 10-வது இறைவேண்டல் நாளை முன்னிட்டு, தான் வழங்கியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்மையில் மனித வர்த்தகம் என்பது பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாமல் போய்விடுகிறது என்றாலும், இந்த நவீன அடிமைத்தனத்தை துணிவுடன் வெளிக்கொணரும் பல்வேறு ஊடகங்களின் செய்தியாளர்களுக்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.

இளையோர் பலர் மனித வர்த்தகத்திற்கு எதிரான இந்த உலக நாளின் சவாலை ஏற்றுக்கொண்டுள்ளனர், அதற்காக இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன் என்றும், அவ்விளையோரின்  உற்சாகமும் அர்ப்பணிப்பும் நமக்கு வழி காட்டுகின்றன என்றும், உரைத்துள்ள திருத்தந்தை, மனித வர்த்தகத்தை எதிர்ப்பதற்கு நாம் செவிசாய்க்கவும், கனவு காணவும், செயல்படவும் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

செவிசாய்ப்போம்

முதலில் இம்மனித வர்த்தகத்தால் துயருறும் அனைவருக்காகவும் இறைவேண்டல் செய்வோம் என்றும், போர்கள் மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்டவர்கள், காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள், குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள், பாலியல் ரீதியாக அல்லது பணியிடத்தில் சுரண்டப்படுபவர்களைப் பற்றி நான் அதிகம் நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

கனவு காண்போம்

உதவிக்காக ஏங்கித்தவிக்கும் அவர்களின் கூக்குரலைக் கேட்டு, அவர்கள் சொல்லும் கதைகளால் மனித வர்த்தகம் குறித்த சவால்களை நாம் ஏற்கத்துணிவோம் என்றும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, பாதிக்கப்பட்டவர்களுடனும் இளைஞர்களுடனும் சேர்ந்து, அனைத்து மக்களும் சுதந்திரத்துடனும் மனித மாண்புடனும் வாழக்கூடிய உலகத்தை உருவாக்க மீண்டும் ஒருமுறை கனவு காண்போம் என்றும் அழைப்புவிடுத்துள்ளார்.

செயல்படுவோம்

அன்பான சகோதரர் சகோதரிகளே, இயேசு கிறிஸ்துவின் தூய ஆவியாரின் வலிமையால், இந்த மனித வர்த்தகத்தை எதிர்த்து உறுதியான நடவடிக்கைகளை எடுத்து இந்த கனவை நனவாக்குவோம் என்றும் விண்ணப்பித்துள்ளார்.

மேலும் தனி நபர்களாகவும் குடும்பங்களாகவும், அல்லது பங்குத்தளங்களாகவும் மற்றும் துறவறக் குழுக்களாகவும், திருஅவைச்சார் அமைப்புகளாகவும் மற்றும் இயக்கங்களாகவும், சமூக மற்றும் அரசியலின் பல்வேறு துறைகளிலும் இறைவேண்டல் மற்றும் செயல்பாட்டின் வழியாக மனித மாண்பைக் காக்க ஊக்கமுடன் செயல்படுவோம் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை

மனித வர்த்தகத்திற்கு எதிரான இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றி பெற முடியும் என்பதை நாம் அறிந்துள்ளோம் என்றாலும் கூட, இந்தப் பிரச்சனைக்கான அடிப்படைக் காரணங்கள் என்னவென்பதை அறிந்து அவற்றை அகற்றுவது அவசியம் என்றும் அறிவுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

மனித வர்த்தகத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், பாதிக்கப்பட்டுவர்களின் முழு மனித மாண்பை மீட்டெடுப்பதற்கும் நமது அனைத்து வளங்களையும் பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பதற்கான அழைப்புதான் இது என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, இதனைச் செய்யாது நாம் நமது கண்களையும் காதுகளையும் மூடிக்கொண்டால், இந்தக் குற்றச் செயலுக்கு நாமும் உடந்தையாக இருக்கின்றோம் என்ற குற்றவுணர்வால் தூண்டப்படுவோம் என்றும் எச்சரித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 February 2024, 14:13