அனைத்து சக்திகளையும்விட பலம் வாய்ந்தது இறையன்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
கிறிஸ்தவ தியான முயற்சிகள் உடல் ஆரோக்கியத்திற்கான விடுமுறை காலம் அல்ல, மாறாக, மீண்டும் பிறப்பெடுப்பதற்கான காலம் என, பிப்ரவரி 13, இச்செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்ட ஒரு புத்தகத்திற்கு முன்னுரை எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
'முதலில் கடவுளுக்கு உரியவர்கள்: திருத்தந்தையுடன் தியானம் செய்தல்' என்ற தலைப்பில் Austen Ivereigh என்பவரின் நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்கள் வாழ்வைக் குறித்து அறிந்துகொள்ளும் போராட்டத்தில் ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஈடுபட வேண்டியுள்ளது என்பதை தன் வாழ்க்கை அனுபவங்கள் வழி புனித லயோலா இஞ்ஞாசியார் தெளிவாக தெரிந்துகொண்டார் என்பதை தன் முன்னுரையின் துவக்கத்தில் குறிப்பிடுவதோடு, கடவுள் தன் இல்லத்தை நம் இதயங்களில் அமைத்துக் கொள்ள உதவ நமக்குள்ளேயே நாம் மேற்கொள்ளும் போராட்டமே இது என மேலும் தெரிவித்துள்ளார்.
இறைவனின் அன்பு, இவ்வுலகின் அனைத்து சக்திகளையும்விட பலம் வாய்ந்தது என்பதை ஏற்கனவே இயேசுவின் மரணத்திலும் உயிர்ப்பிலும் நிருபிக்கப்பட்டுள்ளபோதிலும், அந்த வெற்றியை நம்மிடம் தக்கவைத்துக் கொள்ள நம் போராட்டங்கள் தேவைப்படுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
நம் போராட்டத்தில் சுற்றுச்சூழல் அழிவு, போர்கள், ஏழைகளுக்கு எதிரான அநீதிகள் போன்றவைகளுக்கான போராட்டமும் அடங்கும் எனக் கூறியுள்ளதோடு, அப்பாதையில் ஆன்மீக அருள்கொடைகள் நமக்கு வழங்கும் பலத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகையப் பாதையில், அதாவது, வாழ்வுப் போராட்டத்தில் தியான வழிமுறைகள் எவ்விதம் உதவிச் செய்கின்றன என்பது குறித்தும் இப்புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாம் ஒதுங்கியிருந்து தியான பயிற்சி முறைகளில் ஈடுபடும்போது இறைவன் நம்மோடு உரையாடி நம் வருங்காலத்தை அமைப்பதற்கான வழிகளை நம் உதவியுடன் அமைக்கிறார் என அதில் மேலும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்