பயிற்சி என்பது அருள்பணியாளரின் வாழ்வு முழுவதும் தொடரக் கூடியது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இத்தாலியின் நேப்பிள்ஸ் பெருமறைமாவட்டத்தின் குருத்துவ பயிற்சி இல்லமான "Alessio Ascalesi" துவக்கப்பட்டதன் 90வது ஆண்டைச் சிறப்பிப்பதை முன்னிட்டு அக்குருமட மாணவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உருவாக்குதல் பயிற்சி என்பது ஒருவரின் வாழ்வு முழுவதும் தொடரக் கூடியது என்பது குறித்து தன் உரையைத் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குருத்துவப் பயிற்சியை ஒரு கட்டியெழுப்பப்பட்டுவரும் கட்டிடத்திற்கு ஒப்பிட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
கட்டுமானப் பணிகள் இடம்பெறும் ஒரு திறந்த இடமாக திருஅவையை உருவகிக்கலாம் என்ற திருத்தந்தை, தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதாகவும், தூய ஆவியார் கொணரும் புத்தம்புதியவைகளுக்கு தன்னைத் திறந்ததாகவும், சுயநலப் பாதைகளுக்கான சோதனைகளை வெற்றிகொள்வதாகவும் திருஅவை உள்ளது எனவும், திருஅவை எப்போதும் உயிர்த்த கிறிஸ்துவுடன் நடைபோட்டு, நற்செய்தியின் அழகை மக்களுக்குக் கொண்டுவருகிறது எனவும் கூறினார்.
இன்றைய உலகின் சிக்கல் நிறைந்த உண்மை நிலைகளுக்கு நாம் ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கும் தீர்வுகளைக் கொண்டு விடைகாண முடியாது, மாறாக, நம்முடைய நெருக்கம், கனிவு, தெளிந்து தேர்தல் போன்றவைகளின் வழியாக இறை இரக்கத்தை வெளிப்படுத்துவதன் மூலம் இதற்கு விடை காண முடியும் என குருமட மாணவர்களிடம் கூறினார் திருத்தந்தை.
அருள்பணித்துவத்திற்கான பயிற்சி என்பது ஒரு கட்டுமான இடத்தைக் குறிப்பதாகும், இங்கு நாம் அஞ்சத் தேவையில்லை, ஏனெனில், இறையருளுடன், நம் பலவீனங்களிலும், பணியின் மகிழ்விலும் இறைவனின் கனிவைக் கண்டுகொள்ள முடியும் என மேலும் எடுத்துரைத்தார்.
குருத்துவ பயிற்சிகளில் பல புதிய முயற்சிகள் திட்டமிடப்பட்டு செயலாக்கப்பட்டு வருகின்றன என்பதையும் பல மேய்ப்புப்பணித் திட்டங்கள் சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இத்தகைய புதிய முயற்சிகளை வரவேற்று இறையளுக்கும் சேவைக்குமான வாய்ப்பாக அவைகளை நோக்கும்போது, இறைவனின் பிரசன்னத்தை அங்கு கண்டுகொள்ளலாம் என மேலும் கூறினார்.
தவக்காலப் பயணத்தை தற்போதுதான் துவக்கியுள்ளோம் என்பதை நினைவூட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறையன்பால் ஆட்கொள்ளப்பட்டவர்களாக மனமாற்றம் மற்றும் புதுப்பித்தலின் பாதையில் நடைபோடுவோம் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்