தேடுதல்

குறைவான வார்த்தைகள், உறுதியான செயல்களைக் கொண்டவர்களாவோம்

எனக்கு செவிசாய்க்க, எனக்கு உதவி செய்யத் தயாராக இருக்கின்றீர்களா? என்று நம்மை நோக்கிக் கேட்கும் நமது நண்பர்களுக்கு, இயேசுவைப்போல, “நான் விரும்புகிறேன் உனக்கு உதவிகள் செய்ய, உனக்காக நான் இருக்கின்றேன் என்று நம்பிக்கையோடு பதிலளிக்க முயல்வோம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

உறுதியான தன்மை, உடனிருப்பு, சந்திப்பு, நேரம், இடம் ஆகியவை அன்பிற்கு மிக முக்கியமாகத் தேவை என்றும், இயேசுவைப்போல குறைவான வார்த்தைகள், ஆனால் உறுதியான செயல்பாடுகள் கொண்டு வாழவேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 11 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செபஉரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புகைப்படங்கள், குறுஞ்செய்திகள், அழகான வார்த்தைகள் போன்றவை, அன்பை வெளிப்படுத்துமே தவிர முழுமையாக அன்புகூர்வதற்கு போதுமானவைகளாகவோ, உறுதியான உடனிருப்பிற்கு மாற்றாகவோ அவை அமைய முடியாது என்றும் கூறினார்.

பொதுக்காலத்தின் ஆறாம் வார நற்செய்தி வாசகமான தொழுநோயாளர் நலமடைதல் என்னும் பகுதி குறித்தக் கருத்துக்களைத் திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று முழந்தாள்படியிட்டு வேண்டிய தொழுநோயாளியின் மீது பரிவு கொண்டு, கையை  நீட்டி, அவரைத் தொட்டு, “நான் விரும்புகிறேன் உமது நோய் நீங்குக” என்ற எளிய வார்த்தையின் வழியாக இயேசு குணப்படுத்தினார் என்றும் கூறினார்.

வத்திக்கான் வளாகத்தில் திருப்பயணிகள்
வத்திக்கான் வளாகத்தில் திருப்பயணிகள்

எளிய வார்த்தைகள், உறுதியான செயல்கள் வழியாக தொழுநோயாளர், காதுகேளாதவர், முடக்குவாதமுற்றவர் போன்ற நோயினால் துன்புற்றவர்களை நலமாக்கியவர் இயேசு என்றும், குறைவான வார்த்தைகள், ஆனால் கீழே குனிந்து தொடுதல், கையை நீட்டுதல், தூக்குதல் போன்ற உறுதியான செயல்களின் வழியாகப் பலருக்கு குணமளித்தவர் இயேசு என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அதிகமான உரையாடல், விவாதம் போன்றவற்றில் ஈடுபடாமல் அவர்கள் மீது பரிவு கொள்ளுதல், உணர்வுப்பூர்வமாக அவர்களது நிலையை அறிதல், பலவீனமான அவர்களின் நிலையை உணர்தல், செவிசாய்த்தல், உடனடியாக அவர்களுக்கு உதவுதல் போன்றவற்றின் வழியாக துன்புறும் அத்தகைய மக்கள் மீது இயேசு கொண்ட பரிவு வெளிப்படுத்தப்படுகின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.   

இயேசுவின் அன்பின் அற்புதமான இவ்வழியைக் கற்பனை செய்வதும், ஒருங்கிணைப்பதும் நமக்கு நல்லது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், தெருக்களில் நாம் சந்திக்கும் மனிதர்களிடத்தில், வார்த்தைகளில் நிதானத்தையும், செயல்களில் தாராள மனத்தையும், உதவி செய்வதிலும் செவிகொடுப்பதிலும் திறம்படைத்த உள்ளத்தையும் வெளிப்படுத்த வலியுறுத்தினார்.

வத்திக்கான் வளாகத்தில் மக்கள்
வத்திக்கான் வளாகத்தில் மக்கள்

எனக்கு செவிசாய்க்க, எனக்கு உதவி செய்யத் தயாராக இருக்கின்றீர்களா? என்று நம்மை நோக்கிக் கேட்கும் நமது நண்பர்களுக்கு, இயேசுவைப்போல, “நான் விரும்புகிறேன் உனக்கு உதவிகள் செய்ய, உனக்காக நான் இருக்கின்றேன் என்று நம்பிக்கையோடு பதிலளிக்க முயல்வோம் என்றும் கூறினார் திருத்தந்தை.

உறவுகளுக்கான அடித்தளத்தை விரிவுபடுத்தும் இத்தகைய உறுதியான தன்மை நமது உலகிற்குத்தேவை என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், “ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, “நலமே சென்று வாருங்கள்; குளிர் காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக் கொள்ளுங்கள்;” என்பாரென்றால் அதனால் பயன் என்ன?“ என்ற திருத்தூதர் யாக்கோபின் வரிகளையும் மேற்கோள்காட்டினார்.

தேவையிலிருப்பவர்களை, நோயாளர்களை நான் கடைசியாக எப்போது சென்று சந்தித்தேன்? என்னுடன் வாழ்பவர்களின் குரலுக்கு செவிகொடுக்கின்றேனா? அவர்களுக்கு உதவவும், சரியான பதிலளிக்கவும் நான் தயாராக இருக்கின்றேனா? என்பன போன்ற கேள்விகளுக்கு இதயத்தில் இருந்து பதிலளிப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், நாம் எப்போதும் பிறருக்கு உதவ தயாராகவும், அக்கறை காட்டவும், அன்பில் உறுதியாக இருக்கவும் அன்னை மரியா உதவுவாராக என்று கூறி கூடியிருந்த மக்களுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 February 2024, 13:04

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >