தேடுதல்

அமைதி என்னும் பாலைவனத்திற்குள் நுழைவோம்

விண்ணகத்தின் சுவையை, கடவுளின் ஆற்றலை நாம் இன்னும் அதிகமதிகமாகப் புரிந்துகொள்ள அமைதிக்குள் நுழைய வேண்டும்

மெரினா ராஜ் – வத்திக்கான்

இயேசுவைப் போல நாமும் அமைதி, உள்ளார்ந்த உலகத்திற்குள் செல்லுதல், இதயத்தின் குரலுக்கு செவிசாய்த்தல், உண்மையுடன் தொடர்பு கொள்ளுதல் என்னும் பாலைவனத்திற்குள் நுழைய இத்தவக்காலத்தில் அழைக்கப்படுகின்றோம் என்றும்,  தீயொழுக்கங்கள், செல்வத்தின் மீதான பற்று, வீண் விருப்பம், புகழ், பேராசை என்னும் காட்டுவிலங்குகளிடையே நாம் வாழ்கின்றோம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 18 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செபஉரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தவக்காலத்தின் முதல் வார நற்செய்தி வாசகமான இயேசு சோதிக்கப்படுதல் என்னும் பகுதி குறித்த தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.

வானதூதர்களால் இயேசு பாலைவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது போல நாமும் அமைதி என்னும் பாலைவனத்திற்குள் செல்ல இத்தவக்காலத்தில் அழைக்கப்படுகின்றோம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு காட்டு விலங்குகளிடையே இருந்தார், வானதூதர்கள் அவருக்குப் பணிவிடை செய்தனரென்றும் எடுத்துரைத்து, நாமும் தீயொழுக்கங்கள் என்னும் காட்டுவிலங்குகளிடையேயும் நல்லெண்ணங்கள் மற்றும்  நல்லுணர்வுகள் என்னும் வானதூதர்களால் பணிவிடை செய்யப்படுகின்றோம் என்றும் கூறினார்.

சோதனைகள் நம்மை இறைவனிடம் இருந்து பிரிக்கின்றன என்றும், நல்ல தெய்வீக முயற்சிகள் நம்மை ஒருங்கிணைத்து நல்லிணக்கத்திற்கு கொண்டு வருகின்றன, அவை இதயத்தை அமைதிப்படுத்துகின்றன என்றும் கூறினார் திருத்தந்தை.

விண்ணகத்தின் சுவையை, கடவுளின் சுவையை ஆற்றலை நாம் இன்னும் அதிகமதிகமாகப் புரிந்துகொள்வதற்கு அமைதிக்குள் நுழைய வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தவக்காலம் இதைச் செய்வதற்குஉகந்த காலம் என்றும், கடவுளின் குரலானது நமது இதயத்தோடு உரையாட, நம்மை நாம் அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பாலைவனத்தில் இயேசுவிற்குப் பணிவிடை புரிந்த வானதூதர்கள் கடவுளின் தூதர்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வானதூதர்கள் நமக்கு நன்மைகளைச் செய்கின்றார்கள் என்றும், தூய ஆவியால் தூண்டப்பட்ட நல் எண்ணங்களையும் உணர்வுகளையும் நம்முள் ஏற்படுத்துபவர்கள் அவர்கள் என்றும் கூறினார்.

நமது இதயத்தை சலனப்படுத்தும் காட்டு விலங்குகள், ஒழுங்கற்ற உணர்ச்சிகள் என்ன? இயேசுவின் குரலைக் கண்டறிந்து அவர் நம் இதயத்துடன் பேசுவதைக் கேட்கவும், நன்மையினால் அதைக் காக்கவும், நம்மை நாமே தனிமைப்படுத்தும் பாலைவன அனுபவத்திற்கு நமது அன்றாட நாள்களில் சிறிதளவாவது இடமளிக்கின்றோமா? என்னும் இரண்டு கேள்விகளை நமக்குள் கேட்க வலியுறுத்தினார் திருத்தந்தை.

தீமை என்னும் அலகையின் தூண்டுதலால் தாக்கப்படாமல், இறைவார்த்தையைக் கடைபிடித்து வாழ்ந்த தூய அன்னை மரியா, இத்தவக்காலப் பயணத்தில் நமக்கு உதவுவாராக என்று கூறி தன் அப்போஸ்தலிக்க ஆசீரைத் திருப்பயணிகளுக்கு வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 February 2024, 14:06

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >