மனித வர்த்தகத்திற்கு எதிராக ஒன்றுபடுவோம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
புனித பகிதாவின் நினைவு நாளில், பொய்யான வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டு, பின்னர் சுரண்டல் மற்றும் முறைகேட்டிற்கு ஆளாகியுள்ள நமது பல சகோதரர் சகோதரிகளை நினைவு கூர்வோம் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 8, இவ்வியாழனன்று, மனித வர்த்தகத்திற்கு எதிராக இறைவேண்டல் செய்யுங்கள் என்று ஹேஷ் டாக்குடன் வெளியிட்டுள்ள டுவிட்டர் குறுஞ்செய்தி ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித வர்த்தகம் என்ற வியத்தகு உலகளாவிய நிகழ்வை எதிர்த்துப் போராட நாம் ஒன்றுபடுவோம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
உலகளவில் 2 கோடியே 76 இலட்சம் பேர் இந்த மனித வர்த்தகத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். மனித வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளோர் எல்லா வயதினரையும், நாட்டவரையும் கடத்துகின்றனர். மேலும் அவர்களை தங்களின் சொந்த இலாபத்திற்காக சுரண்டுகிறார்கள்.
குறிப்பாக, இத்தாலியில், மனித வர்த்தகம் என்பது ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு அடுத்தப்படியாக, குற்றச்செயலில் ஈடுபடும் அமைப்புகளுக்கு மூன்றாவது பெரிய வருமான ஆதாரமாக உள்ளது என்றும், ஐரோப்பிய ஒன்றியத்தில் பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் பாலியல் சுரண்டல் நோக்கத்திற்காகக் கடத்தப்படும் பெண்கள் மற்றும் சிறுமிகள் என்றும் அண்மையில் தெரிவித்தது Save The Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்