திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

நீதிபதிகள் அமைதியின் பணியாளர்கள்!

இலட்சக்கணக்கான குழந்தைகள் நுகர்வோரின் கழிவுகளை மட்டுமே உண்ணும் இவ்வுலகில் எதிர்காலம் என்பது இல்லை, வளர்ச்சி இல்லை, நீதி இல்லை, மக்களாட்சி இல்லை : திருத்தந்தை.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்கு இயேசு வழிகாட்ட இறைவேண்டல் செய்யுமாறும், அமைதியையும் நீதியையும் கட்டியெழுப்பிடுமாறும் அர்ஜென்டினா நீதிபதிகளிடம் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 28, இப்புதனன்று, அர்ஜென்டினாவில் சமூக உரிமைகள் மற்றும் பிரான்சிஸ்கன் கோட்பாட்டிற்கான Pan-American அமைப்பிற்கு அனுப்பியுள்ள காணொளிச் செய்தி ஒன்றில் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, பாதிக்கப்படக்கூடிய மற்றும் துன்பப்படுபவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அவர்களின் பணியில் அவர்களை ஊக்குவிப்பதாகவும் கூறியுள்ளார்.

நாம் அநீதிகள் அதிகம் நிறைந்துள்ள காலங்களில் வாழ்கிறோம் என்றும், ஒரு சில பணக்காரர்கள் மேலும் மேலும் வலிமைவாய்ந்தவர்களாக மாறுகிறார்கள், மற்றும் இலட்சக்கணக்கான ஏழைகள் நிராகரிக்கப்படுகிறார்கள் மற்றும் கைவிடப்படுகிறார்கள் என்றும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் இலட்சக்கணக்கான குழந்தைகள் நுகர்வோரின் கழிவுகளை மட்டுமே உண்ணும் இவ்வுலகில் எதிர்காலம் என்பது இல்லை, வளர்ச்சி இல்லை, நீதி இல்லை, மக்களாட்சி இல்லை என்றும் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் அக்காணொளிச் செய்தியில் பகிர்ந்துள்ளார் திருத்தந்தை. 

சமூகத்தில் ஏழை எளியோரின் உரிமைகளைப் பாதுகாப்பதும், சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதுமே வழக்கறிஞர்கள், நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் மற்றும் பாதுகாவலர்கள் உட்பட நீதிச் செயல்களில் ஈடுபடுபவர்களின் அடிப்படையான மற்றும் முக்கியமான பணி என்பதையும் அச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

மேலும், விதிகளை நடைமுறைப்படுத்துவதிலும் செயல்படுத்துவதிலும் நீதிபதிகளின் இன்றியமையாத பங்கை வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனிநபர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளுக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருஅவையின் சமூகக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட இயேசுவின் படிப்பினைகள், சட்டப்பணியில் சரியாக ஈடுபடுவதற்குப் பாதுகாப்பான மற்றும் ஒளிமயமான பாதைகளாக அமைந்துள்ளன  என்பதையும் அச்செய்தியில் அடிகோடிட்டுக் காட்டியுள்ளார்  திருத்தந்தை.

மேலும் நீதிபதிகளின் நெறிமுறை மற்றும் தார்மீக பொறுப்புகளை நினைவுபடுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தயவுகூர்ந்து, ஒவ்வொரு நாளும் கண்ணாடியின் முன் நின்று, உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், மற்றவர்களிடமும் கேள்வி கேளுங்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நீதியும் மனித மாண்பும் நிறைந்த சமூகங்களைக் கட்டியெழுப்பிட உழைக்குமாறு நீதிபதிகளை கேட்டுக்கொண்ட திருத்தந்தை, ஒருவர் மற்றவரின் துன்பங்களைக் கண்டு தன் கண்களை மூடிக்கொண்டால் அவர் ஒரு நல்ல நீதிபதியாக இருக்க முடியாது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 February 2024, 12:07