தெய்வீக வழிபாடு மற்றும் சடங்குகளின் ஒழுங்குமுறை திருப்பீடத்துறையின் அமைப்பினர் தெய்வீக வழிபாடு மற்றும் சடங்குகளின் ஒழுங்குமுறை திருப்பீடத்துறையின் அமைப்பினர்   (ANSA)

வழிபாட்டு சீர்திருத்தம் இல்லாமல் திருஅவை சீர்திருத்தம் இல்லை!

திருஅவைத் தந்தையர்கள், வழிபாட்டு முறைகளை அதன் மையத்தில் வைக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர், ஏனென்றால் அது வாழும் கிறிஸ்துவை சந்திக்கும் சிறந்த இடமாகக் கருதப்பட்டது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உங்களின் இந்த அர்ப்பணிப்பில் தொடர்ந்து ஈடுபடுமாறு நான் உங்களை ஊக்குவிக்கிறேன், இதனால் மக்களை வழிபாட்டுக் கொண்டாட்டத்தின் பயனுள்ள நல்வாழ்விற்கு எவ்வாறு வழிநடத்துவது என்பதை மேய்ப்பர்கள் அறிவார்கள் என்றும், அங்கு இறந்து உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் அறிவிப்பு அவரது வாழ்க்கையை மாற்றும் இருப்பின் உறுதியான அனுபவமாக மாறும் என்றும் உரைத்தார்.

பிப்ரவரி 8, இவ்வியாழனன்று, தெய்வீக வழிபாடு மற்றும் சடங்குகளின் ஒழுங்குமுறை திருப்பீடத்துறையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தின் பங்கேற்பாளர்களை சந்தித்தபோது இவ்வாறு உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவுடன் புதுப்பிக்கப்பட்ட ஒரு சந்திப்பு இல்லாமல் திருஅவையில் சீர்திருத்தம் சாத்தியமில்லை என்றும் கூறினார். 

உள்விதிமுறை அமைப்பின் (Constitution) முதல் எண்கள் வியக்கத்தக்க வகையில் சுருக்கமாகக் கூறுவது போல, இறையியல் அர்த்தத்தில் வழிபாடு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் மட்டுமே, ‘வழிபாட்டு சீர்திருத்தம் இல்லாமல் திருச்சபை சீர்திருத்தம் இல்லை’  என்றதொரு அறிக்கையை வெளியிட முடியும் என்று தெரிவித்தார் திருத்தந்தை.

ஆன்மிக வளர்ச்சியின் பேரார்வத்தை உணராத, அந்தக் காலத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் புரியும் வகையில் பேச முற்படாத, கிறிஸ்தவர்களிடையே நிலவும் பிரிவினையைக் கண்டு வருந்தாத, இறையச்சமற்ற நிலையில் கிறிஸ்துவை அறிவிக்கும் திருஅவை என்பது, ஒரு நோய்வாய்ப்பட்ட திருஅவை என்றும் உரைத்தார் திருத்தந்தை.

திருஅவையின் சீர்திருத்தத்தின் ஒவ்வொரு நிகழ்வும் எப்போதுமே வாழ்க்கைத் துணையின் நம்பகத்தன்மை குறித்த விடயமாகும், அதாவது, மணமகனான கிறிஸ்துவை அவள் எவ்வளவு அதிகமாக அன்புகூர்கிறாளோ, அந்த அளவுக்கு மணமகளான திருஅவை மிகவும் அழகானதாகவும், அவருக்கு முற்றிலும் சொந்தமானதாகவும், அவருக்கு முழுமையாக ஒத்துப்போகும் அளவிற்கு செயலாற்றக் கூடியதாவும் இருக்கும் என்றும் எடுத்துக்காட்டிய திருத்தந்தை, கிறிஸ்துவுடன் ஒரு புதுப்பிக்கப்பட்ட சந்திப்பு இல்லாமல் திருஅவையின் சீர்திருத்தம் இருக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

அதனால்தான், திருஅவைத தந்தையர்கள், வழிபாட்டு முறைகளை அதன் மையத்தில் வைக்க வேண்டும் என்று அவர்கள் அறிந்திருந்தனர், ஏனென்றால் அது வாழும் கிறிஸ்துவை சந்திக்கும் சிறந்த இடம் என்றும் குறிப்பிட்ட திருத்தந்தை, மணமகன் தனது சிலுவையுடன் மணமகளுக்கு வழங்கிய விலைமதிப்பற்ற கொடையாக இருக்கும் தூய ஆவியானவர், திருமுழுக்கு வாழ்க்கையைத் தொடர்ந்து உயிர்ப்பித்து புதுப்பித்துக்கொள்ளும் ஆர்வமுள்ள பங்கேற்பை (Active Participation) சாத்தியமாக்குகிறார் என்றும் விளக்கினார்.

இறுதியாக, நாம் திருப்பணியாளர்களுக்கான புதிய வழித்தடங்களைத் தயாரிக்கும் அதேவேளையில், இவை கடவுளுடைய மக்களின் நோக்கங்களையும் அடிப்டையாகக் கொண்டவை என்பதையும் சிந்திக்க வேண்டும். காரணம், ஆண்டவரின் நாள் மற்றும் வழிபாட்டு ஆண்டு விழாக்களில் கூடும் கூட்டங்களில் தொடங்கி இவை வழிபாட்டு முறை உருவாக்கத்திற்கான முதல் உறுதியான வாய்ப்பாக அமைகின்றன என்பதையும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 February 2024, 14:37