தேடுதல்

புனிதர் María Antonia புனிதர்பட்ட திருப்பலி

பிப்ரவரி 11 ஞாயிற்றுக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெற்ற புனிதர்பட்ட திருப்பலியில் அர்ஜெண்டினா மற்றும் உலகின் பல பகுதிகளிலிருந்து ஏறக்குறைய 5500 விசுவாசிகள் பக்தியுடன் கலந்து கொண்டனர்

மெரினா ராஜ் - வத்திக்கான்

திருஅவையின் புதிய புனிதராகவும் அர்ஜெண்டினாவின் முதல் புனிதராகவும் அருளாளர் María Antonia de Paz y Figueroa அவர்கள், பிப்ரவரி 11 ஞாயிற்றுக்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதராக உயர்த்தப்பட்டார்.

பிப்ரவரி 11 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற திருப்பலிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று மறையுரையாற்றினார். உரோம் உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெற்ற இத்திருப்பலியில் அர்ஜெண்டினா மற்றும் உலகின் பல பகுதிகளிலிருந்து ஏறக்குறைய 5500 விசுவாசிகள் பக்தியுடன் கலந்து கொண்டனர்.   

திருச்சிலுவை ஏந்திய பீடப்பணியாளர்களைத் தொடர்ந்து ஏராளமான கர்தினால்கள் ஆயர்கள், அருள்பணியாளர்கள் பவனியாகப் பீடத்தை நோக்கி வந்தனர்.

அருளாளர், மற்றும், புனிதர்களாக உயர்த்தப்படும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர் கர்தினால் மார்செல்லோ செமெராரோ அவர்கள், திருப்பலி பீடத்தினைத் தூபம் கொண்டு அர்ச்சித்தார். அதனைத்தொடர்ந்து இஸ்பானிய மொழியில் திருப்பலியைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தூயஆவியின் வருகைக்காக பாடல்கள் பாடப்பட்டதைத் தொடர்ந்து கர்தினால் செமரேரோ அவர்கள், திருத்தந்தையின் முன் நின்று, புனிதராக அறிவிக்கப்பட உள்ள அருளாளர்  María Antonia de Paz y Figueroa அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்து புனிதராக அறிவிப்பதற்கான பரிந்துரையைத் திருத்தந்தையிடம் முன்வைத்தார். அதன் பின் புனிதர்கள் மன்றாட்டானது சிஸ்டைன் சிற்றாலயப் பாடகர் குழுவினரால் இத்தாலிய மொழியில் பாடப்பட்டபின் திருத்தந்தை அவர்கள், அருளாளர் María Antonia de Paz y Figueroa அவர்களைப் புனிதராக அறிவித்தார்.

அதனைத்தொடர்ந்து புனிதர் María Antonia அவர்களின் புனித பொருள்கள் வைக்கப்பட்டிருந்த அன்னையின் திருஉருவத்திற்கு முன் எரியும் இரு விளக்குகளையும் மலர்களையும் நான்கு பேர் பவனியாக கொண்டு வந்து வைத்தனர், அதன்பின் புனித பொருள்கள் தூபம் கொண்டு அர்ச்சிக்கப்பட, வானவர்கீதமானது பாடப்பட்டது.

முதல் வாசகமானது இஸ்பானிய மொழியில் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பதிலுரைப்பாடலானது சிஸ்டைன் சிற்றாலய பாடகர் குழுவினரால் பாடப்பட்டது. இரண்டாம் வாசகமானது இத்தாலிய மொழியில் வாசிக்கப்பட்டது.

நற்செய்தி வாசகமானது திருத்தொண்டர் ஒருவரால் இலத்தீன் மொழியில் வாசிக்கப்பட்ட பின்னர், இரண்டாம் முறையாக கிரேக்க மொழியில் அருள்பணியாளர் ஒருவரால் வாசிக்கப்பட்டது.

அதன் பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது மறையுரையை வழங்க ஆரம்பித்தார். திருத்தந்தையின் மறையுரைக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.

திருத்தந்தையின் மறையுரையைத் தொடர்ந்து நம்பிக்கை அறிக்கையானது இலத்தீன் மொழியில் பாடப்பட்டதைத் தொடர்ந்து, சீனம், இஸ்பானியம், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஆகிய மொழிகளில் நம்பிக்கையாளர் மன்றாட்டுக்கள் எடுத்துரைக்கப்பட்டன.

காணிக்கைப்பவனியின்போது திருப்பலிக்கான காணிக்கைப் பொருள்களான அப்பம் இரசம் போன்றவற்றை சில குடும்பத்தார் திருத்தந்தையிடம் காணிக்கையாக அளித்தனர்.

கர்தினால் செமரேரோ அவர்கள் திருப்பலியின் நற்கருணை மன்றாட்டுப் பகுதியை திருத்தந்தை சார்பில் எடுத்துரைத்து செபிக்க, மக்கள் அனைவரும் பக்தியுடன் இத்திருப்பலியில் கலந்து கொண்டனர்.

திருநற்கருணைக் கொண்டாட்டத்தின் இறுதியில் கூடியிருந்த அனைவருக்கும் தன் சிறப்பு அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 February 2024, 16:21