பல்வேறு நினைவுகளைப் பகிரும் திருத்தந்தையின் சுயசரிதை நூல்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
அர்ஜண்டீனா நாட்டின் கொடுங்கோலாட்சி காலத்தில் தன் குழந்தைப் பருவ நினைவுகள், தலைநகர் பேராயராக பணியாற்றிய அனுபவங்கள், இறைமக்களின் பணி என்பது மிகவும் பின்தங்கிய நிலையிலிருக்கும் ஏழைகளுக்கு சேவையாற்றுவதே என்ற தன் நம்பிக்கை ஆகியவைகளை தன் சுயசரிதைப் புத்தகத்தில் விவரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
‘வாழ்வு. வரலாற்றில் என் கதை’ என்ற தலைப்பில் வத்திக்கான் எழுத்தாளர் மர்கேசே ரகோனா என்பவரின் துணையுடன் திருத்தந்தையால் எழுதப்பட்டுள்ள சுயசரித நூல், இம்மாதம் 19ஆம் தேதி புனித யோசேப்பு திருவிழாவன்று, அதாவது திருத்தந்தை திருஅவையை வழிநடத்த பொறுப்பேற்ற 11ஆம் ஆண்டு நிறைவன்று வெளியிடப்பட உள்ளது.
உடல் நிலை காரணமாக பதவி விலகும் ஒரு நிலை ஏற்பட்டால், முன்னாள் திருத்தந்தை என அழைப்பட மாட்டேன் மாறாக முன்னாள் உரோமை ஆயர் என அழைக்கப்படுவேன் எனவும், புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் குடியிருந்து ஒப்புரவு அருள்சாதனத்தை நிறைவேற்றவும், நோயுற்றோருக்கு திருநற்கருணையை எடுத்துச் செல்லும் பணியை மேற்கொள்வேன் எனவும் தன் நூலில் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பல்வேறு சிரமச் சூழல்கள் இருப்பினும் தான் பணியிலிருந்து விலகுவது குறித்து சிந்திக்கவேயில்லை எனவும், அத்தகைய ஒரு சூழல் வெகு தொலைவில் உள்ளது எனவும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.
பணி ஓய்வு பெறுவதற்கான சூழல்கள் எதுவும் இன்னும் உருவாகவில்லை எனவும், தீவிர உடல்நிலை பாதிப்பு எதுவும் ஏற்பட்டால்தான் அத்தகைய ஒரு நிலை வரும் எனவும் தன் சுயசரிதையில் கூறும் திருத்தந்தை, தன் பணி ஓய்வு கடிதம் ஏற்கனவே தன்னால் கையொப்பமிடப்பட்டு திருப்பீடச் செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும், மிகத் தீவிரமான உடல்நலக் கோளாறு இடம்பெறும் பட்சத்தில் இந்த கடிதம் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தான் தற்போது நல்ல உடல் நலத்துடனேயே இருப்பதாகவும், ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய உள்ளன எனவும் மேலும் கூறியுள்ளார் திருத்தந்தை.
300 பக்கங்களுக்கு மேல் கொண்ட இந்த புத்தகத்தில், தன் குடும்பத்தினருடன் உறவு, குருத்துவ பயிற்சி காலம், இரண்டாம் உலகப்போர், அர்ஜண்டினாவின் கொடுங்கோலாட்சி, அக்காலத்தில் இளையோரிடயே தன் பணி, ஏழைகளுக்கான நம் கடமைகள், மனித வாழ்வு பாதுகாக்கப்படுதல், கால்பந்தில் தன் ஆர்வம், முன்னாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக்டுடன் நல்லுறவு, கொரோனா தொற்று நோய்க்காலம், படைப்புக்களின் பாதுகாப்பு, இயற்கைக்கு முரணான தம்பதியருக்கு ஆசீர் என பல்வேறு தலைப்புக்கள் குறித்து தன் சுயசரிதையில் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்