தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

இரக்கம் மற்றும் அமைதியின் பாதையில் திருத்தந்தையின் 11 ஆண்டுகள்!

திருத்தந்தையின் திருமடல்களில் வெளிப்படும் உடன்பிறந்த உறவு, காலநிலை மாற்றம், இடம்பெயர்வு, போர்கள், பொருளாதாரம் ஆகியவற்றின்மீதான அவரது அக்கறையையும் பொறுப்புணர்வையும் எடுத்துக்காட்டியுள்ளார் முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அருகிலும் தொலைவிலும் இருப்பவர்களின் தவறான புரிதலையும் எதிர்த்துநின்று, வாழ்வின் புனிதத்தை மையமாக வைத்து, பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுடன் நெருக்கமுடன் இருப்பதையும், வெளிவேடத்தில் போர்களின் சரங்களை இழுக்கும் அழுக்குப் பொருளாதாரத்தின் விருப்பங்களைக் கண்டிப்பதையும் தொடர்கிறார் என்று கூறியுள்ளார் திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர், முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி.

மார்ச் 13, இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோமைப் பேராயராகப் பொறுப்பேற்று 12-ஆம் ஆண்டைத் தொடங்கும் வேளை, இவ்வாறு பெருமிதத்துடன் கூறியுள்ள முனைவர் தொர்னியெல்லி அவர்கள், போரின் தவிர்க்க முடியாத தன்மைக்கு சரணடைவது போல் தோன்றும், அவைகளின் முடிவுகளின் விளைவுகளை மதிப்பிட முடியாத ஆட்சியாளர்களின் தயவில் சிக்கித்தவிக்கும் மனிதகுலத்தின் ஓர் இருண்ட வேளையில் தனது 12-ஆம் ஆண்டைத் தொடங்குகிறார் திருத்தந்தை என்றும் உரைத்துள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கடந்த பதினோரு ஆண்டுகால வரலாற்றை மீள்பார்வை செய்து பார்த்தால், பேதுருவின் வழித்தோன்றலான திருத்தந்தையின் குரலில்  இறைவாக்குரைத்தலின் மதிப்பை ஒருவர் உணர முடியும் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் முனைவர் தொர்னியெல்லி.

2015-ஆம் ஆண்டு வெளியிடட்பட்ட 'இறைவா உமக்கே புகழ்'  (Laudato si'), 2020- ஆண்டு வெளியிடப்பட்ட 'அனைவரும் உடன்பிறந்தோரே' (Fratelli tutti) ஆகிய திருத்தந்தையின் இரண்டு திருமடல்களை சுட்டிக்காட்டி, உடன்பிறந்த உறவு, காலநிலை மாற்றம், இடம்பெயர்வு, போர்கள், பொருளாதாரம் ஆகியவற்றின்மீதான அவரது அக்கறையையும் பொறுப்புணர்வையும் எடுத்துக்காட்டியுள்ளார் முனைவர் தொர்னியெல்லி.

வரவேற்பின், நெருக்கத்தின், மென்மையின், உடனிருப்பின் தோற்றத்தில், அரவணைத்துச் செவிமடுக்கக்கூடிய ஒரு கிறிஸ்தவ சமூகத்தின் தோற்றத்தில், ஆயிரம் வரம்புகளுக்கு மத்தியிலும், ஒருவர் அனுபவித்த மற்றும் அனுபவிக்கத் தேடும் பரிவிரக்கத்தினை மீட்டெடுப்பதற்கான எதிர்முழக்கம் திருத்தந்தையிடத்தில் இருக்கிறது என்றும் கூறியுள்ளார் முனைவர் தொர்னியெல்லி.

இதனை மனதில்கொண்டு ஒருவர் திருத்தந்தையின் உணர்வுபூர்வமான செயல்பாடுகளைப் படித்தால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசுவின் பணிவாழ்வில் எதிர்ப்புகளின் மத்தியிலும் அவரிடம் விளங்கிய மறைப்பணி ஆர்வத்திற்கான அதே செயல்பாடுகளைக் கண்டுணர்ந்துகொள்ள முடியும் என்றும் விளக்கியுள்ளார் முனைவர் தொர்னியெல்லி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 March 2024, 12:24