சமூகத்திலும் திருஅவையிலும் ஒவ்வொருவரின் சிறப்பு அழைப்புகள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
நாமனைவரும் புனிதர்கள் அல்ல, ஆனால், நாம் ஒரு நாள் புனிதர்களாவோம் என்ற நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்வதே, நம் முதல் அழைப்பு என அனைத்துலகக் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டோரை வெள்ளியன்று காலை திருப்பீடத்தில் சந்தித்தபோது எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
‘இறைவனின் சாயலில் ஆணும் பெண்ணும் - இறையழைத்தலின் மானுடவியல் நோக்கி’ என்ற தலைப்பில் இடம்பெற்ற அனைத்துலக கருத்தரங்கில் கலந்துகொண்டோரை, திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமூகத்திலும் திருஅவையிலும் ஒவ்வொருவரின் சிறப்பு அழைப்புகள் குறித்து புரிந்துகொள்வதற்கு எடுக்கப்பட்டுவரும் கல்வி ஆய்வுகள் குறித்து தன் பாராட்டுக்களை வெளியிட்டார்.
மனிதனின் வாழ்வே ஓர் அழைப்பாக இருக்கும் நிலையில், ஒவ்வோர் அழைப்பின் கூறுகள் குறித்து ஆராய்ந்து, பொதுநலனுக்காக ஒவ்வொருவரும் எவ்வாறு பங்காற்ற முடியும் என்பதை ஆய்ந்து செயல்படுவது அவசியம் என்பதை சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
‘கடவுள் என்னை வீணாகப் படைக்கவில்லை, அவரின் பணிகளை எடுத்து நடத்துபவனாக, அமைதியின் இறைத்தூதனாக, உண்மையின் போதகனாக நான் செயல்படுவேன்’, என்ற கர்தினால் நியூமேனின் வார்த்தைகளை மேற்கோள் காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட அழைப்பைப் பெற்றுள்ள நிலையில் அவர்களின் தனிவரங்களுக்காக இறைவனை நோக்கி நன்றியுரைப்போம் எனவும் கூறினார்.
மரண அனுபவங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் இன்றைய உலகிற்கு நம்பிக்கையைத் தரும்வகையில் உழைக்க வேண்டிய அனைத்து தரப்பினரும், உடன்பிறந்த உணர்வும், திறந்த மனப்பான்மையும் கொண்ட உலகைக் கட்டியெழுப்புவதில் சிறப்புப் பங்காற்றுகிறார்கள் என மேலும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்