நான் உங்களுடன் இருக்கிறேன், உங்களை என் இதயத்தில் சுமக்கிறேன்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உயிர்ப்பு என்பது நமது நம்பிக்கையின் இதயம் என்றும், இயேசு வாழ்ந்து இறந்து உயிர்த்தெழுந்த இடங்களில் இவ்விழாவைக் கொண்டாடும் உங்களுக்கு, இது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 27, இப்புதனன்று, புனித பூமியில் வாழும் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, இத்தருணத்தில் அங்கு நிகழும் போரினால் துயருற்று மிகுந்த வேதனைப்படுபவர்கள், கொடிய வலியின் பிடியில் சிக்கித் தவிப்பவர்கள் மற்றும், எதிர்காலம் மறுக்கப்படும் குழந்தைகள் அனைவருடனும் தான் உடனிருப்பதாகவும், அவர்களைத் தன் இதயத்தில் சுமப்பதாகவும் கூறியுள்ளார்.
உங்கள் துயரங்களையும், உழைப்பையும், அறிந்த ஒரு தந்தையாக நீங்கள் ஒவ்வொருவரும் என் பாசத்தை உணர விரும்புகிறேன் என்று உரைத்துள்ள திருத்தந்தை, நல்ல சமாரியராகிய இயேசு, உங்கள் உடல் மற்றும் ஆன்மாவின் காயங்களில் ஆறுதல் தரும் எண்ணெயையும், நம்பிக்கையளிக்கும் மதுவையும் ஊற்றுவார் என்றும் தனது ஆறுதலை வழங்கியுள்ளார்.
அன்பான சகோதரர் சகோதரிகளே, புனித பூமியின் கிறிஸ்தவச் சமூகம், பல நூற்றாண்டுகளாக, மீட்பளிக்கும் இடங்களின் பாதுகாவலராக மட்டுமல்லாமல், இயேசுவின் பாடுகளின் மறைபொருளுக்குத் தனது சொந்த துன்பங்களின் வழியாகத் தொடர்ந்து சான்றுபகர்ந்து வருகிறது என்றும் தனது செய்தியில் புகழாரம் சூட்டியுள்ளார் திருத்தந்தை.
மேலும், எழுந்து முன்னேறும் திறனுடன், சிலுவையில் அறையப்பட்ட இயேசு வெற்றிவீராக உயிர்த்தெழுந்தார் என்றும், தனது பாடுகளின் அடையாளங்கள் வழியாக அவர் சீடர்களுக்குத் தோன்றி விண்ணகத்திற்குச் சென்றதுடன், துன்புறுத்தப்பட்ட ஆனால் மீட்கப்பட்ட மனிதகுலத்தையும் தன்னுடன் விண்ணகத் தந்தையிடம் அழைத்துச் சென்றார் என்றும் தொடர்ந்து அறிவித்து வருகிறது என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
இந்த இருண்ட காலங்களில், புனித வெள்ளியின் இருள் உங்கள் பூமியையும் உலகின் பல பகுதிகளையும் ஆட்கொண்டு போரால் சிதைத்துவிட்டது என்று எண்ணிக்கொண்டு மக்கள் நம்பிக்கையிழந்து வாழும் சூழலில், நீங்கள் இரவில் ஒளிரும் தீபங்களாகவும், மோதலால் கிழிந்த நிலத்தில் நல்ல விதைகளாகவும் இருக்கிறீர்கள் என்றும் தனது செய்தியில் அவர்களைப் பாராட்டியுள்ளார் திருத்தந்தை.
என் அன்பான சகோதரர் சகோதரிகளே, நீங்கள் தனியாக இல்லை, நாங்கள் உங்களைத் தனியாக விடமாட்டோம் என்றும், இறைவேண்டல் மற்றும் பிறரன்பு பணிகள் வழியாக நாங்கள் உங்களுடன் இணைந்திருக்கின்றோம் என்றும் திடப்படுத்தியுள்ள திருத்தந்தை, திருப்பயணிகளாக விரைவில் உங்களிடம் எங்களால் திரும்பி வர முடியும் என்றும், உங்கள் கண்களை உற்றுநோக்கி உங்களை அரவணைத்துக் கொள்ள முடியும் என்று நம்புகிறோம் என்றும் கூறியுள்ளார்.
உங்களின் மேய்ப்புப் பணியாளர்கள், இருபால் துறவறத்தார் அனைவரும் இந்தத் துயரமான தருணத்தில் உங்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன் என்று உரைத்துள்ள திருத்தந்தை, அவர்கள் யாவரும் செய்துவரும் அத்தனை நற்காரியங்களுக்கும் தனது இதயத்திலிருந்து நன்றி நவில்வதாகத் தெரிவித்துள்ளார்.
உங்களின் துன்பத்தின் இருளிலும், ஒன்றிப்பின் ஒளி ஒளிர்ந்து சுடர்வீசட்டும் என்றும், கிறிஸ்தவச் சான்று வாழ்வு வாழும் அத்தனை சகோதரர் சகோதரிகளுடனும், எனது ஆன்மிக நெருக்கத்தையும், ஊக்கத்தையும் வெளிப்படுத்த விரும்புகிறேன் என்றும் அச்செய்தியில் உரைத்துள்ள திருத்தந்தை, அனைவரையும் தனது செபத்தில் நினைவு கூர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்