மன்னிப்பதில் ஒருபோதும் சோர்வடையாதக் கடவுள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
தவக்காலமானது புதிய வாழ்வில் நடைபோடுதல் என்பதை ஒப்புரவுப் பாதையின் வழியாக நமக்கு நினைவூட்டுகின்றது என்றும், கடவுள் மன்னிப்பதில் ஒருபோதும் சோர்வடையாதவர், மாறாக நாம் தாம் மன்னிப்பதில் சோர்வடைகின்றோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 8 வெள்ளிக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் மாலை 4.30 மணியளவில் புனித ஐந்தாம் பயஸ் பங்கு ஆலயத்தில் 24 மணி நேர தவக்கால திருநற்கருணை ஆராதனை மற்றும் ஒப்புரவு வழிபாட்டின்போது வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மன்னிப்பதில் ஒருபோதும் சோர்வடையாத கடவுள் எல்லாவற்றையும், எல்லாரையும் மன்னிக்கின்றார் என்றும், “தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்” என்ற இறைவார்த்தைக்கேற்றவாறு பாவமன்னிப்பினால் தூய்மைபெற்று கடவுளைக் காண்பவர்களாக மாற நம்மை அழைக்கின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை.
இத்தகைய தூய்மையான நிலையினை நாம் அடைய நமது முயற்சிகள் மட்டும் போதாது ஏனெனில் நாம் பலவீனமானவர்கள், கடவுள் மட்டுமே நமது இதயத்தை அறிந்து அதனைக் குணப்படுத்த வல்லவர், நம்மை விடுவிக்க வல்லவர், என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
“நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்ற இறைவார்த்தைகள் மிகவும் அழகான செபம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், கூடியிருந்த மக்கள் அனைவரும் இதனை மீண்டும் மீண்டும் ஒருமித்து சத்தமாகவும் அதன்பின் மனதிற்குள்ளாகவும் சொல்லப் பணித்தார்.
நான் செய்த பாவம் மிகவும் கொடியது கடவுளால் என்னை மன்னிக்க முடியாது என்று யாரும் நினைக்க வேண்டாம், கடவுள் எல்லாப் பாவங்களையும் மன்னிக்க வல்லவர், அவர் மன்னிப்பதில் ஒருபோதும் சோர்வடைவதில்லை என்றும், மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
புதிய வாழ்வைப் பெற்றவர்களாக, உள்மன விடுதலை பெற்றவர்களாக, மகிழ்வானவர்களாக, நமது பயணத்தை இடையில் நிறுத்தாதவர்களாக நாம் வாழவேண்டும் என்பதைக் கடவுள் விரும்புகின்றார், நமது பலவீனங்களால் நாம் எளிதில் வீழ்பவர்கள், என்பதை அவர் நன்கு அறிவார். நம்மை மீண்டும் அதிலிருந்து தூக்கி விடுவார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பாவம் என்பது எப்போதும் தோல்விதான் கடவுள் பாவத்தை மன்னிப்பவர் அதனை வெற்றிகொள்பவர் என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதியுடன் போ உனது பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்ற இயேசுவின் வார்த்தைகளை மனதில் கொண்டு பிறரையும் மன்னிப்போம்.என்றும் கூறினார்.
திருமுழுக்கு அருளடையாளத்தில் துவங்கிய நமது பயணமானது ஒப்புரவு அருளடையாளத்தினால் மீண்டும் தொடங்கப்படுகின்றது என்றும், சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் கரங்களில் நமது பாவங்களை ஒப்படைத்து உள்மன விடுதலை பெற்றவர்களாக புதிய வாழ்வில் நடைபோடுவோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்