மக்களின் உரிமைக்காக பிரேசில் ஆயர்களால் நடத்தப்படும் சமூக வாரம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
‘நாம் விரும்பும் பிரேசிலில் மக்களின் நல்வாழ்வு’ என்ற தலைப்பில் பிரேசில் ஆயர்களால் அந்நாட்டில் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ள ஆறாவது சமூக வாரத்திற்கு தன் வாழ்த்துக்களை வெளியிட்டு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிரேசில் தலைநகர் பிரெசிலியாவில் இம்மாதம் 20 முதல் 22 வரை இடம்பெற்றுவரும் இந்த 6வது சமூக வாரக் கூட்டத்திற்கு செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, இந்த கூட்டத்தின் நடவடிக்கைகளுக்கும் கனிகளுக்கும் தன் நெருக்கத்தையும் செபத்தையும் வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
1991ஆம் ஆண்டு இந்த சமூக வாரத் திட்டம் துவக்கப்பட்டதிலிருந்து தலத்திருஅவையானது, ஏழை மக்களின் நிலம், உறைவிடம், வேலைவாய்ப்பு ஆகியவைகளுக்கான உரிமைகளுக்கு ஆதரவாகவும், ஏழை மக்களுக்கு எதிரான பாராமுகம், ஒதுக்கிவைக்கப்படுதல் போன்றவைகளுக்கு எதிராகவும், மக்களிடையே உழைக்கும் ஒரு திருஅவையாகச் செயல்பட்டுவருவதை தன் செய்தியில் பாராட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாட்டிற்கான தீர்மானங்களை எடுப்பதில் மக்களின் பங்கேற்பை ஊக்குவித்தல், ஒருமைப்பாட்டு பொருளாதாரத்தை பரிந்துரைத்தல், ஜனநாயக மதிப்பீடுகளுக்கு புத்துயிரளித்தல், சமூகத்தைக் கட்டியெழுப்புதல் போன்றவைகளுக்கு ஆயர்களின் இந்த சமூக வார நடவடிக்கைகள் உதவி வருகின்றன என்பதைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அசிசியின் பிரான்சிஸ் மற்றும் கிளாரா முன்வைக்கும் பொருளாதாரத்தை இளைஞர்களுடன் இணைந்து ஊக்குவித்துவரும் பிரேசில் ஆயர்களுக்கு தன் பாராட்டுக்களையும் வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு கிட்டவேண்டும் என ஆவல்கொள்ளும் நிலம், வீடு மற்றும் வேலைவாய்ப்புக்காக குரல் கொடுத்துவரும் பிரேசில் ஆயர்களை தன் செய்தியில் பாராட்டும் திருத்தந்தை, ஆயர்களின் இந்த சமூக வார முயற்சி நடவடிக்கைகள் ஒரு நீதியான சமூகம் உருவாக உதவும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்