"கிறிஸ்து உயிரோடு இருக்கிறார்" அறிவுரை மடலின் ஐந்தாம் ஆண்டு
மெரினா ராஜ் – வத்திக்கான்
"கிறிஸ்து உயிரோடு இருக்கிறார்" என்ற திருத்தூது அறிவுரை மடலானது ஒன்றிணைந்துப் பயணிக்க விரும்பும் திருஅவையின் பலன் என்றும், உரையாடல், செவிசாய்த்தல், கடவுளின் திருவுளத்தைத் தெளிந்து தேர்தல் போன்றவற்றைப் பகுத்தறிய உதவுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
"கிறிஸ்து உயிரோடு இருக்கிறார்" என்ற திருத்தந்தையின் திருத்தூது அறிவுரை மடல் வெளியிடப்பட்ட ஐந்தாம் ஆண்டை முன்னிட்டு மார்ச் 25 திங்கள்கிழமையன்று, இளையோர்க்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஐந்தாண்டுகளுக்கு முன்பாக இளையோரை மையப்படுத்தி நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றத்தில் உலகின் பல்வேறு பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான இளையோர் உரோம் நகருக்கு வந்து தங்களது எதிர்பார்ப்புக்களையும் விருப்பங்களையும் தெரிவித்தனர் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், ஒருங்கிணைந்த பயணத்திற்கான ஓர் முன்னனுபவமாக இளைஞர்களின் பகிர்வு அமைந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர்களே பயணிக்கும் திருஅவையின் வாழும் எதிர்காலம் என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவின் உடலாகிய திருஅவை வாழ்விற்குத் தங்களதுப் பங்களிப்பினைத் தரும் இளையோர், நன்மையைச் செய்தல், தூய்மையான மற்றும் சுறுசுறுப்பான இயந்திரம் போன்ற அவர்களின் செயல்கள், உயிர்த்த இயேசுவின் மகிழ்ச்சியை அறிவிக்கும் உண்மையான வாழ்க்கை முறை போன்றவற்றை ஒரு போதும் தவறவிடக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
2018 அக்டோபர் மாதம் வத்திக்கானில் இளையோரை மையப்படுத்தி நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்ட கருத்துக்களின் தொகுப்பானது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூது அறிவுரை மடலாக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 2, செவ்வாயன்று திருப்பீடத்தில் வெளியிடப்பட்டது.
எல்லையற்ற விதத்தில் அன்பு செய்யும் இயேசு
நமது மற்றும் அனைத்து மனிதகுல நம்பிக்கையின் அடித்தளமாக இருக்கும் அறிவிப்பான "கிறிஸ்து வாழ்கிறார்!" என்ற வார்த்தைகளை சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், கிறிஸ்து நம்மை எல்லையற்ற விதத்தில் அன்பு செய்கின்றார், அவரது அன்பு நமது தவறுகள் மற்றும் வீழ்ச்சிகளால் கட்டுப்படுத்தப்படாமல் நமக்காக தன் உயிரையே கொடுக்கும் அளவிற்கு உயர்ந்தது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சிலுவையில் அறையப்பட்ட அவரது கரங்களில் நம்மை எப்போதும் புதுப்பித்துக் கொள்ள அர்ப்பணிப்போம் என்றும், ஒரு நண்பரைப்போல அவருடன் நடந்து, வாழ்க்கையில் வரவேற்று, இளமைக்கால மகிழ்ச்சி, துன்பம், கவலைகள் மற்றும் நம்பிக்கைகளை அவருடன் பகிர்ந்து வாழவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதனால் நமது வாழ்க்கைப்பாதை ஒளிவீசக்கூடியதாகவும் மிகப்பெரிய சுமைகள் குறைவானதாக மாறுவதைக் காண முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், ஏனெனில் இயேசு நம்முடன் இருந்து நமது சுமைகளை சுமக்கின்றார் என்றும் கூறியுள்ளார்.
இயேசுவின் இதயத்தில் நம்மை நுழையச் செய்யும் ஆற்றல் பெற்ற தூய ஆவியை ஒவ்வொரு நாளும் அழைக்க மறக்க வேண்டாம் என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், நீங்கள் அவருடைய அன்பினாலும், அவருடைய ஒளியினாலும், அவருடைய பலத்தினாலும் அதிகமாக நிரப்பப்படுவீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்