முதுபெரும்தந்தை NEOFIT மறைவிற்குத் திருத்தந்தை இரங்கல் செய்தி
மெரினா ராஜ் – வத்திக்கான்
முதுபெரும்தந்தை NEOFIT, நற்செய்தி மற்றும் உரையாடல் வழியில் விலைமதிப்பற்றப் பணியினைத் தனது கடினமான மற்றும் துன்பமான நேரங்களில் வழங்கியவர் என்றும், தாழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின் மனிதராகத் தன்னை வெளிப்படுத்தி, கடவுளுக்கும் திருஅவைக்கும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை வாழும் எடுத்துக்காட்டான ஒரு மனிதராகத் திகழ்ந்தவர் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 17 ஞாயிற்றுக்கிழமை இறைபதம் சேர்ந்த, பல்கேரிய ஆர்த்தடாக்ஸ் தலத்திருஅவையின் முதுபெரும்தந்தையுமான NEOFIT அவர்களின் மறைவிற்கு அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வார்னா பெருநகரப் பேராயர் யோன் அவர்களுக்கு இச்செய்தியினை அனுப்பியுள்ளார்.
முதுபெரும்தந்தை NEOFIT பல்கேரிய ஆர்த்தடாக்ஸ் தலத்திருஅவையின் நம்பிக்கைக்கு சிறந்த சாட்சியாக இருந்தவர் என்றும், அவரது பிரிவினால் வருந்தும் பல்கேரியா ஆர்த்தடாக்ஸ் தலத்திருஅவை மற்றும் அனைத்து மக்களுக்கும் தனது செபத்தையும் ஆன்மிக நெருக்கத்தையும் வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இப்பூமியில் உள்ளத் திருஅவையே இயேசு கிறிஸ்துவின் உடல், வாழ்விற்கான நுழைவாயில் இயேசுவின் உயிர்ப்பு என்பதால், கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களுக்கு, இறப்பு என்பது இவ்வுலகிலிருந்து நிலைவாழ்விற்குக் கடந்து செல்லும் பாதை என்றும் முதுபெரும்தந்தை NEOFIT இப்போது துன்பம், வலி, இல்லாத வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கின்றார் என்று நம்பிக்கைக் கொள்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
"இறந்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து தனது இறப்பினால் இறப்பை வென்றவர், இறந்தோர்க்கு வாழ்வளித்தவர். அத்தகைய இயேசு உங்களுக்கு அமைதியையும் ஆறுதலையும் வழங்குவார் என்று கூறி முதுபெரும்தந்தைப் பிரிவினால் துன்புறும் ஆர்த்தடாக்ஸ் தலத்திருஅவை தலைவர்களுக்கு தனது ஆறுதலை அளித்துள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்