தேடுதல்

இறையழைத்தல் தினத்திற்கான திருத்தந்தையின் செய்தி இறையழைத்தல் தினத்திற்கான திருத்தந்தையின் செய்தி 

அமைதியை கட்டியெழுப்பவும், நம்பிக்கையை விதைக்கவும் அழைப்பு

ஒவ்வொருவரும் பெற்றுள்ள தனிவரங்களின் துணைகொண்டு, ஒருவருக்கொருவர் செவிமடுத்து, ஒன்றிணைந்து நடைபோட்டு, தூய ஆவியானவரின் பாதையைக் கண்டு கொள்வோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

நம் மேல் திணிக்கப்பட்ட கடமை என்பதற்கு வெகுதூரமாக இருக்கும் இறையழைப்பு, மகிழ்ச்சிக்கான நம் ஆழமான பேராவலை நிறைவேற்றும் ஒன்றாக உள்ளது என இறையழைத்தல் தினத்திற்கான தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி இறையழைத்தலுக்கு செபிப்பதற்கான 61வது உலக தினத்திற்கென மார்ச் 19 செவ்வாய்க்கிழமையன்று செய்தி வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதியை கட்டியெழுப்பவும், நம்பிக்கையின் விதைகளை விதைக்கவும் அழைப்புப் பெறுகிறீர்கள்  என்ற மையக்கருத்தை முன்வைத்துள்ளார்.

நாம் யார், நம்முடைய கொடைகள் என்னென்ன, அவைகள் கனிதர நாம் செய்ய வேண்டியதென்ன, அன்பு, தாராள ஏற்புடைமை, அழகு, அமைதி என்ற கருவிகளின் அடையாளமாக நாம் விளங்க தேர்ந்தெடுக்க வேண்டிய பாதை என்ன என்பதையெல்லாம் நாம் கண்டுகொள்ளும்போது நம் வாழ்வு நிறைவுள்ளதாக மாறுகின்றது என உரைக்கும் திருத்தந்தை, மற்றவர்களுடன் ஒத்துழைப்பு உணர்வுடன் சேவையாற்றுவோரையும், நீதியான உலகையும், ஒருமைப்பாட்டு பொருளாதாரத்தையும், சரிசமமான சமூகக் கொள்கைகளையும், மனிதாபிமானம் நிறைந்த சமுதாயத்தையும் கட்டியெழுப்ப உழைப்போரையும், இவ்வேளையில் நினைவுகூர்வதாகத் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையின் விதைகளை விதைக்கவும், இறையரசின் அழகை வெளிப்படுத்தவும் இறையழைத்தலை ஏற்று தங்களை அர்ப்பணிக்க முன்வரும் சகோதரர் சகோதரிகளையும் இந்நேரத்தில் நன்றியுடன் நினைத்துப் பார்ப்பதாக தன் செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் கருத்தை நம் மீது திணிக்காமல், அதனை ஒரு பரிந்துரையாக முன்வைக்கும் இயேசுவின் அழைப்புக்கு இளையோர் தகுந்த பதிலுரை வழங்கவேண்டும் எனற அழைப்பையும் முன்வைத்துள்ளார்.

நாம் ஒவ்வொருவரும் பெற்றுள்ள தனிவரங்களின் துணைகொண்டு, ஒருவருக்கொருவர் செவிமடுத்து, ஒன்றிணைந்து நடைபோட்டு, அனைவருக்கும் பயன்தரும்வகையில் தூய ஆவியானவர் நம்மை வழிநடத்திச் செல்லும் பாதையைக் கண்டு கொள்வோம் எனவும் தன் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.    

நம்பிக்கையுடன் 2025ஆம் ஜூபிலி ஆண்டை நோக்கி ஒன்றிணைந்து நடைபோடுவோம் என்ற அழைப்பை முன்வைக்கும் திருத்தந்தை, அறுவடைக்கு ஆட்களை அனுப்பும்படி இறைத்தந்தையிடம் செபிக்கவேண்டிய நம் கடமையையும் வலியுறுத்தியுள்ளார்.    

நம்பிக்கையின் கதவுகளை செபமே திறக்கிறது என உரைக்கும் திருத்தந்தை, நாம் நம்பிக்கையின் திருப்பயணிகளாகவும், அமைதியைக் கட்டியெழுப்புபவர்களாகவும் செயல்படுவோம் என்ற அழைப்பையும் முன்வைத்து, நாம் விழித்தெழுந்து செயல்படவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

விழித்தெழுந்து, பிறன்பின் அப்போஸ்தலர்களாகவும், நம்பிக்கையின் தூதர்களாகவும் செயலாற்றி, மகிழ்ச்சியின் தூதர்களாக, புதிய வாழ்வின் ஆதாரமாக, உடன்பிறந்த நிலை, அமைதி ஆகியவைகளின் கலைஞர்களாக செயல்படுவோமாக என தன் இறையழைத்தல் செபநாளுக்கான செய்தியை நிறைவுச் செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 March 2024, 15:57