இலத்தீன் அமெரிக்க திருஅவைத் தலைவர்களுடன் திருத்தந்தை இலத்தீன் அமெரிக்க திருஅவைத் தலைவர்களுடன் திருத்தந்தை  (ANSA)

கடவுள் எப்போது, எவ்வாறு தன்னைத் தருகிறார் என்பதை சிந்தியுங்கள்

யார் கொடுக்கிறார்கள், என்ன கொடுக்கிறார்கள், எவ்வாறு கொடுக்கிறார்கள், எப்போது கொடுக்கிறார்கள், எதனால் கொடுக்கிறார்கள், எதுவரை கொடுத்துக் கொண்டிருப்பார்கள் என்ற கேள்விகள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இலத்தீன் அமெரிக்காவின் கொலம்பிய தலைநகரில் இம்மாதம் 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதிவரை இடம்பெற்றுவரும் உதவி அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்களின் கூட்டத்திற்கு செய்தி ஒன்றை மார்ச் 5ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இக்கூட்டத்தில் பங்குபெறும் அனைத்து அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளித்துவரும் இலத்தீன் அமெரிக்காவுக்கான பாப்பிறை அவையின் தலைவர், கர்தினால் Roberto Prevost அவர்களுக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை, ஆற்றும் பிறரன்பு உதவிகளுக்கான பலனை எதிர்பார்ப்பதும், எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி உதவிகளை ஆற்றுவதும் எவ்வாறு தங்களுக்குள் இணக்கத்தைக் காணமுடியும் என்பது குறித்து அதில் விளக்கியுள்ளார்.  

இயேசுவின் மற்றும் நற்செய்தியின் படிப்பினைகளின்படி, நாம் முதலில், யார் கொடுக்கிறார்கள், என்ன கொடுக்கிறார்கள், எவ்வாறு கொடுக்கிறார்கள், எப்போது கொடுக்கிறார்கள், எதனால் கொடுக்கிறார்கள், எதுவரை கொடுத்துக் கொண்டிருப்பார்கள் என்ற கேள்விகளை நம்மை நோக்கி நாம் கேட்க வேண்டும் என தன் செய்தியில் கூறும் திருத்தந்தை, யார் கொடுக்கிறார்கள் என்ற கேள்விக்கான விடை, நாம் இறைவனிடம் பெறுவதைத்தான் பிறருடன் பகிர்கிறோம் என்பதாக இருப்பதால், அங்கு நாம் மார் தட்டிக்கொள்ள ஒன்றுமில்லை எனக் கூறியுள்ளார்.

கடவுள் நமக்கு என்ன கொடுக்கிறார் என்ற கேள்விக்கு, நம் வாழ்வில் அனைத்துமே அவரால் கொடுக்கப்பட்டதே என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும் என தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, கடவுள் எப்போது, எவ்வாறு தன் மக்களுக்கு தன்னைத் தருகிறார் என்பது குறித்து நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும் என்ற அழைப்பையும் விடுத்துள்ளார்.

பாவிகளாகிய நம்மை மன்னிக்க எப்போதும் காத்திருக்கும் இயேசு, நமக்காகத் தன்னையே நம் நிலைக்குத் தாழ்த்தினார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

சிலுவையை ஏற்றுக்கொள்வது தோல்வியின் அடையாளம் அல்ல, மாறாக ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கும் இயேசுவின் மீட்புப் பணியில் பங்குபெறுவதாகும் என்பதையும் தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 March 2024, 13:33