தயவுசெய்து போரை நிறுத்துங்கள் – திருத்தந்தை

போரினால் ஏற்படும் துன்பங்கள், எளியவர்கள் மற்றும் பலவீனமானவர்களின் எதிர்காலத்தில் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன

மெரினா ராஜ் – வத்திக்கான்

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரயேலில் நடந்து வரும் வன்முறையால் துன்புறும் மக்களை ஒவ்வொரு நாளும் இதயத்தில் துயரத்துடன் சுமக்கின்றேன் என்றும், இறந்தவர்கள், காயமடைந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் என பெரும் அழிவுகளை போர்கள் ஏற்படுத்துகின்றன என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 3 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு மூவேளை செபஉரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன்பின் தனது செப விண்ணப்பங்களை எடுத்துரைத்து இவ்வாறு கூறினார்.

போரினால் ஏற்படும் இத்தகைய துன்பங்கள், எளியவர்கள் மற்றும் பலவீனமானவர்களின் எதிர்காலத்தில் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்றும், இவ்வழியில் ஒரு சிறந்த உலகத்தை உருவாக்க முடியும், அமைதியை அடைய முடியும் என்று நாம் உண்மையில் நினைக்கிறோமா? என்று சிந்தித்திப் பார்க்கவும் அழைப்பு விடுத்து, தயவு செய்து போரை நிறுத்துங்கள்! தயவு செய்து போரை நிறுத்துங்கள் என்று வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

காசா மற்றும் ஏனைய இடங்கள் முழுவதும் உடனடி போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர ஊக்குவிப்பதாகக் கூறிய திருத்தந்தை அவர்கள், இதனால் பிணையக்கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட்டு, அவர்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும் அவர்களது அன்புக்குரியவர்களிடம் திரும்புவார்கள் என்றும், மனிதாபிமான உதவிகளை பாதுகாப்பாக மக்கள் பெறமுடியும் என்றும் கூறினார்.

மேலும் அதிகமான இறப்புக்களையும் துயரங்களையும் சந்திக்கும் துன்புறும் உக்ரைன் மக்களுக்காக செபிப்போம், அவர்களை மறந்துவிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

இரண்டாவது ஆண்டு பன்னாட்டு ஆயுதக்குறைப்பு மற்றும் ஆயுதப்பரவல் தடுப்பு விழிப்புணர்வு நாள்  

மார்ச் 5 அன்று செவ்வாய்க்கிழமை சிறப்பிக்கப்படும் பன்னாட்டு ஆயுதக் குறைப்பு மற்றும் ஆயுதப் பரவல் தடுப்பு விழிப்புணர்வுக்கான இரண்டாவது ஆண்டை  நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், இராணுவச் செலவினங்களுக்காக உலகின் வளங்கள் வீணடிக்கப்படுகின்றன என்றும், தற்போதைய சூழ்நிலையின் காரணமாக, வளங்கள் வீணடிக்கப்படுவது அதிகரித்து வருகின்றன என்றும் கூறினார்.

ஆயுதமின்றி இருத்தல் முதலில் ஒரு கடமை, ஆயுதங்களைக் களைவது ஒரு தார்மீகக் கடமை என்பதை பன்னாட்டு சமூகம் புரிந்து கொள்ளும் என்று தான் உண்மையாக நம்புவதாகவும், அச்ச நிலையிலிருந்து நம்பிக்கையின் சமநிலைக்கு நகர்வதற்கு நாட்டின் அனைத்து உறுப்பினர்களுக்கும் துணிவு தேவைப்படுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

உரோம் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், குறிப்பாக, போர்ச்சுகலில் உள்ள Vila Pouca de Aguiar பல்கலைக்கழக மாணவர்கள், படாஜோஸில் உள்ள "Rodríguez Moñino" நிறுவனத்தின் மாணவர்கள், போலந்தில் இருந்து வந்திருந்த பங்குத்தள மக்கள் அனைவரையும் வாழ்த்தினார்.

கியோஜ்ஜா மறைமாவட்டத்தில் உள்ள ரோசோலினாவில் இருந்து வந்திருந்த உறுதிப்பூசுதல் அருளடையாளம் பெற இருப்பவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார், பதுவா, அஸ்ஸானோ மெல்லா, கப்ரியானோ, பெனிலி, தரண்டோ பகுதிகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகள், உரோமில் உள்ள தூய ஆல்பர்ட் மாஞ்னோ பங்குத்தள மக்கள் ஆகியோரையும் வாழ்த்தினார் திருத்தந்தை.

"தீமையை நன்மையால் வெல்வோம் - செபம், ஏழ்மை, அமைதி" என்ற கருப்பொருளில் Sant'Egidio அமைப்பால் கூட்டப்பட்டுள்ள இளம் உக்ரேனியர்களுக்கு தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட திருத்தந்தை அவர்கள், போரினால் அதிகம் பாதிக்கப்படுபவர்களுக்கு அவ்விளைஞர்கள் ஆற்றும் அர்ப்பணிப்புள்ள பணிக்குத் தனது நன்றியினையும் தெரிவித்தார்.

இவ்வாறு தனது செப விண்ணப்பங்களையும் வாழ்த்துக்களையும் எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், தனக்காக செபிக்க மறக்கவேண்டாம் என்று கூறி தனது மூவேளை செப உரையினைத் தொடர்ந்த செப விண்ணப்பங்களை நிறைவுசெய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 March 2024, 14:59