புலம்பெயர்ந்தோர் மீது மிகுந்த அக்கறை கொள்வோம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இலத்தீன் அமெரிக்காவிலும் கரீபியனிலும் உள்ள தலத் திருஅவை, இடம்பெயர்வு பிரச்சினையில் எப்போதும் தனது கவலையை அக்கறையுடன் வெளிப்படுத்துகிறது என்றும், எல்லைகள் இல்லாத ஒரு தலத் திருஅவையாக, அனைவருக்குமான ஒருதாயாக அது இருக்க விரும்புகிறது என்றும், பெருமிதத்துடன் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 19 முதல் 22 வரை பனாமாவில் நடைபெறும், 'நமது புலம்பெயர்ந்த சகோதரர்களுடன் உயிர்ப்புப் பெருவிழா' என்ற நிகழ்விலும் மற்றும், Costa Rica மற்றும் பனாமாவின் ஆயர் பேரவையில் பங்குபெறும் அதன் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியுள்ள செய்தி ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.
“நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” (காண்க. மத் 26:17) என்று சீடர்கள் இயேசுவிடம் எழுப்பிய கேள்வியை சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இன்று கொலம்பியா, Costa Rica மற்றும் பனாமாவின் தலத்திருஅவைகள் புலம்பெயர்ந்த சகோதரர் சகோதரிகளுடன் இணைந்து அதற்குப் பதிலளிக்க அழைக்கப்படுகின்றன என்றும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மிகவும் மாறுபட்ட சூழலிலிருந்து வந்துள்ள ஆண்களையும் பெண்களையும் பெரியவர்களையும் குழந்தைகளையும் ஒன்றிணைக்கும் கண்ணீர் மற்றும் மரணக் கடலின் கரையில் அவர்கள் நமக்காகக் காத்திருக்கிறார்கள் என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
எனவே, பன்னாட்டுச் சமூகத்தின் அனைத்து அமைப்புகளுடனும் இணைந்து புலம்பெயர்ந்தோரின் மனித மாண்பு மற்றும் அமைதி நிறைந்த வாழ்வை அவர்கள் மேற்கொள்ள உதவுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் உரைத்துள்ளார் திருத்தந்தை
அனைவரையும் வரவேற்கவும், பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும், ஒருங்கிணைக்கவும், வேறுபாடுகளின்றி அனைவரையும் நடத்திச் செல்லவும் வேண்டும் என்றும் விண்ணப்பித்துள்ள திருத்தந்தை, மனித மாண்பைக் கட்டிக்காக்கும் ஒரு திருஅவையை உருவாக்கவும், நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாக்கவும், நம்மைநாமே முழுமையாக அர்பணிப்பதன் வழியாக நமது பங்களிப்பை வழங்கிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்