அன்பின் ஒவ்வொரு செயலிலும் இறைவனின் முகம் ஒளிர்விடுகிறது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
ஒப்புரவு என்னும் அருளடையாளத்தை நிறைவேற்றும் அருள்பணியாளர்கள், இறையன்பின் இனிமைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாகச் செயல்படவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Apostolic Penitentiary எனப்படும் வத்திக்கானின் மனச்சான்று பேராயம் ஏற்பாடுச் செய்த பயிற்சி முகாமில் கலந்துகொண்ட குருமட மாணவர்களை வெள்ளிக்கிழமை, மார்ச் 8ஆம் தேதி திருப்பீடத்தில் சந்தித்து உரைவழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைமன்னிப்பின் மற்றும் அருளின் ஒரு தனித்துவமான நேரத்தை ஒப்புரவு அருள்சாதனம் வழங்குகிறது என்று எடுத்துரைத்தார்.
ஜூபிலி ஆண்டிற்கான தயாரிப்புக்களில் ஈடுபட்டுவரும் இந்த ஆண்டில் இறையிரக்கம் பல இதயங்களில் மலர்ந்து அதன் வழி கடவுள் அன்புகூரப்படுவதும், ஏற்றுக்கொள்ளப்படுவதும், புகழப்படுவதும் இடம்பெறுவதாக என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார் திருத்தந்தை.
ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற வருபவர்கள் இறையன்பின் இனிமையைப் பெறும் அனுபவத்தைக் காண அருள்பணியாளர்கள் உதவ வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை, ஒப்புரவு அருள்சாதனத்தை நாடி வருபவர்கள் ஒரு தந்தைக்குரிய அன்புடனும் தாய்க்குரிய கனிவுடனும் அணுகப்பட்டு, இறைமன்னிப்பை அபரிவிதமாகப் பெற வழிவகைச் செய்யப்பட வேண்டும் எனவும், குருத்துவத்திற்கு தயாரித்துக் கொண்டிருந்தோரிடம் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
கடவுளின் முடிவற்ற அன்பு மற்றும் அளவிடமுடியாத இரக்கத்தின் முன்னர் ஒவ்வொருவரும் தம் நிலையை உணர்ந்துகொண்டு தங்கள் பாவங்களுக்காக மனம் வருந்தி, கடவுளிடம் முழு நம்பிக்கைக் கொண்டு அனைத்தையும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
கடவுளை அன்புகூரும் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளையும் அன்புகூருவர் என்பதை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இனிமேலும் பாவம் இழைக்காதிருக்க இறையருளின் துணையோடு எடுக்கப்படும் தீர்மானம் குறித்தும் விரித்துரைத்தார்.
கருணையின் ஒவ்வொரு செயல்பாட்டிலும், அன்பின் ஒவ்வொரு செயலிலும் இறைவனின் முகம் ஒளிர்விடுகிறது என, குருத்துவ தயாரிப்புப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களிடம் மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்