திருத்தந்தையின் கிறிஸ்து உயிர்ப்புவிழா ஊர்பி எத் ஓர்பி செய்தி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
அன்பு சகோதரர், சகோதரிகளே,
சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார் (மாற் 16:6) என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பறைசாற்றப்பட்ட செய்தி இன்று உலகம் முழுவதும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
வாரத்தின் முதல் நாள் அதிகாலையில் கல்லறைக்குச் சென்ற பெண்கள் அடைந்த அதே திகைப்புடன்கூடிய பெருவியப்பை திருஅவை மீண்டும் வாழ்கிறது. இயேசுவின் கல்லறை ஒரு பெரிய கல்லால் மூடப்படிருந்தது. இன்றும் பெரும் கற்கள், பாரமான கற்கள் மனிதகுலத்தின் நம்பிக்கைகளை, எதிர்பார்ப்புகளைத் தடைச்செய்து வருகின்றன. போர் என்னும் பெரும் கல், மனிதபிமான நெருக்கடிகள் என்னும் பெரும்கல், மனித உரிமை மீறல்கள் என்னும் கல், மனிதர்களை வணிபப் பொருளாகக் கடத்தும் பெரும் கல், இதையொத்த கற்கள் என்னும் நிறையத் தடைகள் உள்ளன. இயேசுவின் பெண் சீடர்கள் போல் நாமும் ஒருவர் ஒருவரை நோக்கி, “கல்லறை வாயிலிலிருந்து கல்லை நமக்கு யார் புரட்டுவார்?” (மாற்16:3) என்று கேட்டுக்கொள்கிறோம்.
இயேசு கிறிஸ்து உயிர்த்த அந்த நாள் காலையில் நாம் கண்டுகொண்ட பெரும் வியப்பு என்னவென்றால், மூடப்பட்டிருந்த பெரிய கல் புரட்டப்பட்டிருந்தது. அன்று அந்தப் பெண்கள் கண்ட திகைப்புடன்கூடிய பெருவியப்பு, இன்று நமக்கும் உரியதாக இருக்கிறது. இயேசுவின் கல்லறை திறந்திருந்தது, அதுவும் காலியாகவிருந்தது. இதிலிருந்து அனைத்தும் புதியதாகத் துவங்குகிறது. அந்தக் காலியான கல்லறையிலிருந்து ஒரு புதிய பாதை வழிநடத்திச் செல்கின்றது. அந்தப் பாதை நம் எவராலும் அல்ல, மாறாக, கடவுள் ஒருவராலேயே திறக்கப்படக் கூடியது. இந்தப் பாதை மரணத்தினிடையே வாழ்வின் பாதை. போரின் நடுவே அது அமைதியின் பாதை. பகைமையின் நடுவே இது ஒப்புரவின் பாதை. பகைமையுடன் கூடிய வெறுப்புணர்வுகளின் நடுவே உடன்பிறந்த உணர்வின் பாதை இது.
சகோதரர் சகோதரிகளே, இயேசு கிறிஸ்து உயிர்த்துவிட்டார். வாழ்வின் பாதையை தடைச்செய்யும் அனைத்துக் கற்களையும் தகர்த்திடும் வல்லமையுடையவர் அவர் ஒருவரே. என்றென்றும் உயிர்வாழும் அவரே வழியாகவிருக்கிறார். அவரே வாழ்வுக்கு வழி நடத்தும் வழி. அமைதியின், ஒப்புரவின், உடன்பிறந்த உணர்வின் வழி. அவர் அந்த வழியைத் திறந்துவிடுகிறார், இது மனிதரால் இயலாதது, ஏனெனில் அவரே இவ்வுலகின் பாவங்களை எடுத்துக்கொள்கிறார், நம் பாவங்களை மன்னிக்கிறார். கடவுளின் மன்னிப்பு இல்லையெனில் அந்தப் பெரிய கல்லை புரட்டமுடியாது. பாவங்கள் மன்னிக்கப்படவில்லையெனில், முன்சார்பு எண்ணங்கள், ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி நிற்றல், மற்றவர்கள் தவறானவர்கள் நாமே சரியானவர்கள் என்ற தவறான ஊகங்கள் போன்றவைகளை நாம் வெற்றிகொள்ள முடியாது. உயிர்த்த கிறிஸ்து ஒருவரே நம் பாவங்களுக்கான மன்னிப்பை வழங்கி ஒரு புதுப்பிக்கப்பட்ட உலகிற்கான வழியைத் திறக்கிறார்.
இயேசு நமக்கு வாழ்வின் கதவுகளை திறந்துவிடுகிறார். நாமோ தொடர்ந்து, உலகம் முழுவதும் போர்களை பரவ விட்டு அக்கதவுகளை மூடிவருகிறோம். இன்று முதலில் யெருசலேம் நகரை நோக்கி நம் பார்வையைத் திருப்புவோம். இயேசுவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பின் மறையுண்மைக்குச் சான்றாக இருக்கும் அந்த நகர் நோக்கியும், புனித பூமியிலுள்ள கிறிஸ்தவ சமூகங்கள் நோக்கியும் நம் பார்வையைத் திருப்புவோம்.
இஸ்ராயேல், பாலஸ்தீனம், உக்ரைன் என்பதிலிருந்து துவங்கி, உலகம் முழுவதும் காணப்படும் மோதல்கள் குறித்து என் எண்ணங்கள் செல்கின்றன. இந்தப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு, உயிர்த்த கிறிஸ்து அமைதியின் பாதையைத் திறந்து விடுவாராக.
அனைத்துலக சட்ட விதிமுறைகள் மதிக்கப்பட வேண்டும் என நான் அழைப்புவிடும் அதே வேளை, அனைவரின் நலனையும் மனதில்கொண்டு, இரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே அனைத்துக் கைதிகளும் பரிமாறிக்கொள்ளப்பட வேண்டும் என்ற ஆவலையும் வெளியிடுகிறேன்.
காசா பகுதியின் மனிதாபிமான உதவிகள் தடையின்றி செல்வதற்கு உறுதி வழங்கப்பட வேண்டும் எனவும், கடந்த அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி கடத்திச் செல்லப்பட்ட பிணையாளிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும், காசாப் பகுதியில் உடனடி போர் நிறுத்தம் இடம்பெற வேண்டும் எனவும் மீண்டும் ஒருமுறை விண்ணப்பிக்கிறேன்.
குடி மக்களுக்கு, குறிப்பாக, குழந்தைகளுக்குப் பெரும் தீய விளைவுகளைக் கொணரும் இந்த மோதல்களைத் தொடர்ந்து அனுமதிப்பதை நிறுத்துவோம். அக்குழந்தைகளின் கண்களில் எவ்வளவு துன்பங்களை நம்மால் காணமுடிகிறது? அந்தக் கண்களுடனேயே அவர்கள் நம்மைப் பார்த்துக் கேட்கிறார்கள், ஏன் என்று. ஏன் இத்தனை மரணங்கள்? ஏன் இத்தனை அழிவு? போர் என்பது மதியீனமானது, மற்றும் தோல்வியே. போர் என்னும் பலம் பொருந்திய காற்று ஐரோப்பா மீதும் மத்தியதரைக்கடல் பகுதியிலும் வீச நாம் அனுமதியோம். ஆயுதங்கள் சார்பாகவும் ஆயுதம் தூக்கலுக்கு சார்பாகவும் இடம்பெறும் வாதத்திற்கு நம்மை கையளிக்காதிருப்போம். அமைதி என்பது ஆயுதங்களால் உருவாக்கப்படுவதில்லை, மாறாக, விரித்த கைகளாலும் திறந்த இதயங்களாலும் உருவாக்கப்படுகிறது.
சிரியா நாட்டை மறவாதிருப்போம். அந்நாடு கடந்த 14 ஆண்டுகளாக ஒரு நீண்ட மற்றும் அழிவுதரும் போரின் விளைவுகளை அனுபவித்து வருகிறது. இங்கு இடம்பெற்றுள்ள மரணங்களும், காணாமல்போதலும், ஏழ்மையும், அழிவுகளும் நம் ஒவ்வொருவரின் பதிலுக்கும், அனைத்துலக சமுதாயத்தின் பதிலுக்கும் அழைப்புவிடுக்கிறது.
இன்று சிறப்பான விதத்தில் என் எண்ணங்கள் லெபனோன் நாட்டை நோக்கிச் செல்கின்றன. இந்நாடு சில காலங்களாக நிர்வாகத் தொய்வையும், பொருளாதார மற்றும் சமூக பதட்டநிலைகளையும் அனுபவித்து வந்துள்ளது. அது இப்போது இஸ்ராயேலுடன் ஆன எல்லையில் இடம்பெறும் மோதல்களால் மேலும் சீர்கேடடைந்துள்ளது. உயிர்த்த இயேசு அன்புநிறை லெபனோன் மக்களுக்கு ஆறுதலை வழங்கி, உரையாடல், இணக்க வாழ்வு மற்றும் பன்மைக்கோட்பாட்டின் பூமியாக இருக்கும் அதன் அழைப்பில் நிலைத்திருக்க உதவுவாராக.
ஐரோப்பியத் திட்டத்தில் ஒன்றிணைவதற்கான பாதையில் குறிப்பிடத்தக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுவரும் மேற்கத்திய பால்கன் பகுதியை இந்நேரத்தில் சிறப்பான விதத்தில் நினவுகூர்கிறேன். மக்களில் காணப்படும் இன, கலாச்சார, மற்றும் மத வேறுபாடுகள், பிரிவினைக்கான காரணமாக இல்லாமல், ஐரோப்பா முழுமைக்கும், உலகம் முழுமைக்கும் செறிவூட்டலின் ஆதாரமாக இருக்கட்டும்.
இதேபோன்று நான் அர்மீனியாவுக்கும் அசர்பைஜானுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளுக்கு ஊக்கமளிக்கிறேன். அவர்கள் அனைத்துலக சமூகத்தின் ஆதரவுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடரவும், புலம்பெயர்ந்தோருக்கு உதவவும், பல்வேறு மதங்களின் வழிபாட்டுத்தலங்களை மதிக்கவும், நிரந்தர அமைதி உடன்பாட்டைப் பெறவும் தொடர்வார்களாக.
உலகின் ஏனைய பகுதிகளில் வன்முறைகளாலும், மோதல்களாலும், உணவு பாதுகாப்பின்மையாலும், காலநிலை மாற்றத்தின் விளவுகளாலும் துயர்களை அனுபவிக்கும் மக்களுக்கு உயிர்த்த கிறிஸ்து நம்பிக்கையின் பாதையைத் திறந்துவிடுவாராக. பயங்கரவாதத்தின் பல்வேறு முகங்களால் பாதிக்கப்பட்டிருப்போருக்கு உயிர்த்த இயேசு ஆறுதலை வழங்குவாராக. பயங்கரவாதத்திற்குப் பலியாகியுள்ளோருக்காகவும், இக்குற்றங்களை இழைத்துள்ளோர் தங்கள் பாவச் செயல்களுக்காக மனம் வருந்தி நல் மாற்றம் பெறவேண்டும் என்பதற்காகவும் இறைவேண்டல் செய்வோமாக.
உயிர்த்த கிறிஸ்து ஹெயிட்டி நாட்டு மக்களுக்கு உதவுவாராக. வன்முறைச் செயல்கள், பேரழிவு, இரத்தம் சிந்தல் போன்றவை முடிவுக்கு வந்து மக்களாட்சி மற்றும் உடன்பிறந்த உணர்வின் பாதையில் அந்நாடு நடந்திட உயிர்த்த இயேசு உதவுவாராக.
பெரும் மனிதாபிமான நெருக்கடிகளைச் சந்தித்துவரும் ரொஹிங்கியா மக்களுக்கு ஆறுதலையும் பலத்தையும் உயிர்த்த இயேசு வழங்குவாராக. பல ஆண்டுகளாக உள்நாட்டு மோதல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் மியான்மார் நாட்டில் அனைத்துவிதமான வன்முறை சார்பு வாதங்களும் முற்றிலுமாக களையப்பட்டு, ஒப்புரவின் பாதை திறக்கப்பட உயிர்த்த கிறிஸ்து உதவுவாராக.
ஆப்ரிக்கக் கண்டத்தில், குறிப்பாக சூடானில் துயருறும் மக்கள், சாஹெல் பகுதி முழுவதன் மக்கள், ஆப்ரிக்காவின் கொம்புப்பகுதி நாடுகள், காங்கோ நாட்டின் கிவு பகுதி, மொசாம்பிக்கின் காப்போ தெல்காதோ மாவட்டம் ஆகியவைகளுக்காகவும், பஞ்சத்தையும் பட்டினிச் சாவுகளையும் உருவாக்கும் வறட்சி முடிவுக்கு வரவும் உயிர்த்த இயேசு அமைதிப் பாதைகளைத் திறப்பாராக.
புலம்பெயர்ந்தோர், பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்வோர் மீது உயிர்த்த இயேசுவின் முக ஒளி ஒளிர்ந்து அவர்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் வழங்குவதாக. அனைத்து நல்மனதுடையோரும் ஒருமைப்பாட்டில் தங்களை இணைத்து, ஏழை குடும்பங்கள் தங்களின் நல்வாழ்வுக்கான தேடலில் எதிர்நோக்கும் பல சவால்களை அவர்களுடன் இணைந்து தீர்வுகாண உதவ நல்மனதுடைய மக்களை உயிர்த்த இயேசு வழிநடத்துவாராக.
இறைமகனின் உயிர்ப்பின் வழி நமக்கு வாழ்வு வழங்கப்பட்டுள்ளதை சிறப்பிக்கும் இந்நாளில் நம் ஒவ்வொருவருக்குமான இறைவனின் முடிவற்ற அன்பை நினைவில் கொள்வோம். இந்த அன்பு அனைத்து வரம்புகளையும் அனைத்து பலவீனங்களையும் வெற்றிகொள்ளவல்லது. இருப்பினும் மிக உயரிய கொடையான அந்த வாழ்வு எவ்வளவு இகழ்ச்சியாக அவமதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவோம். எத்தனை குழந்தைகள் பிறப்பையே காணமுடியாமல் உள்ளன. எத்தனை பேர் பசியால் மடிகின்றனர், அடிப்படை அக்கறையின்றி நடத்தப்படுகின்றனர், உரிமை மீறலுக்கும் வன்முறைகளுக்கும் பலியாகின்றனர்? மனிதர்களை பொருளாக நடத்தும் வணிகம் அதிகரித்துள்ளதால், எத்தனை உயிர்கள் வியாபாரப் பொருட்களாகியுள்ளன?
மரணத்தின் அடிமைத்தனத்திலிருந்து இயேசு கிறிஸ்து நம்மை விடுவித்துள்ள இந்நாளில் அரசியல் பொறுப்பில் உள்ளோர் அனைவரிடமும் ஒரு விண்ணப்பதை முன்வைக்கிறேன். மனிதர்களை வியாபாரப் பொருள்களாக கடத்துவதை தடுத்து நிறுத்த அனைத்து முயற்சிகளையும் எடுங்கள். இந்தச் சுரண்டலின் கூட்டு வலையமைப்பை இல்லாமல் ஆக்குவதற்கான முயற்சிகளைச் சோர்வின்றி கைக்கொள்ளுங்கள். மனித வணிபத்தால் பாதிக்கப்பட்டிருப்போருக்கு விடுதலையை வழங்க முன்வாருங்கள். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளோரின் குடும்பங்களை இறைவன் ஆறுதல்படுத்துவாராக. குறிப்பாக, தங்களால் அன்புகூரப்பட்டவர்கள் குறித்த செய்திக்காக கவலையுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்களுக்கு ஆறுதல் மற்றும் நம்பிக்கையின் உறுதியை கிறிஸ்து வழங்குவாராக.
உயிர்ப்பின் ஒளி நம் மனங்களை ஒளிர்வித்து நம் இதயங்களை நல்மாற்றம் அடையச் செய்வதாக. மேலும், வரவேற்கப்படவேண்டிய, பாதுகாக்கப்படவேண்டிய, அன்புகூரப்படவேண்டிய ஒவ்வொரு மனித வாழ்வின் மதிப்பையும் குறித்த விழிப்புணர்வைப் பெற உயிர்ப்பின் ஒளி நமக்கு உதவுவதாக.
உங்கள் அனைவருக்கும் இயேசுவின் உயிர்ப்புவிழா வாழ்த்துக்கள்.
ஊருக்கும் உலகுக்கும் என அழைப்படும் இந்த ஊர்பி எத் ஓர்பி செய்தியை வழங்கியபின் அனைவருக்கும் தன் ஊர்பி எத் ஓர்பி ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்