தவக்கால வழிபாட்டில் திருத்தந்தை தவக்கால வழிபாட்டில் திருத்தந்தை  (AFP or licensors)

24 மணி நேர செபவழிபாட்டை துவக்கி வைக்கும் திருத்தந்தை

இறைவேண்டல் மற்றும் ஒப்புரவை நோக்கமாகக் கொண்டு துவக்கிவைக்கப்படும் 24 மணி நேர தவக்கால செபவழிபாடு, இவ்வாண்டில் புதிய வாழ்வில் நடைபோடுதல் என்பதை தலைப்பாகக் கொண்டுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இத்தவக்காலத்தில் ஒவ்வொரு பங்குதளமும் செபம் மற்றும் மன்னிப்பு முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என அழைப்புவிடுத்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மாதம் 8ஆம் தேதி, உரோம் பங்குதளம் ஒன்றில் 24 மணி நேர செபவழிபாட்டை தலைமையேற்று துவக்கி வைக்க உள்ளார்.

இறைவனுக்காக 24 மணி நேரம் என்ற தலைப்பில் உரோம் மறைமாவட்டத்தின் புனித ஐந்தாம் பயஸ் பங்குதளத்தில் திருத்தந்தையால் துவக்கி வைக்கப்பட உள்ள இந்த  இறைவேண்டல் வழிபாடு குறித்து நற்செய்தி அறிவிப்புக்கான திருப்பீடத்துறை அறிவித்துள்ளது.

தவக்காலத்தின் நான்காவது ஞாயிறுக்கு முன்னர் கடைபிடிப்பதற்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால், திருஅவையின் தலைமைப் பொறுப்பேற்ற துவக்க காலத்திலேயே இறைவேண்டல் மற்றும் ஒப்புரவை நோக்கமாகக் கொண்டு துவக்கிவைக்கப்பட்ட இந்த 24 மணி நேர தவக்கால செபவழிபாடு, இவ்வாண்டிற்கு, புதிய வாழ்வில் நடைபோடுதல் என்பதை தலைப்பாகக் கொண்டுள்ளது.

உரோம் நேரம் மாலை 4.30 மணிக்கு புனித 5ஆம் பயஸ் பங்குதளத்தில் இந்த 24 மணி நேர செபவழிபாட்டைத் துவக்க உள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒப்புரவு அருள்சாதனத்தை பெற விரும்பும் பங்குதள மக்களுள் பலருக்கு தானே அவ்வருளடையாளத்தை வழங்குவார்.

இறைவேண்டல் மற்றும் மன்னிப்பு நிகழ்வுகளில் பங்குதளம் முழுவதும் பங்குபெறவேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த ஆண்டு முதல் இந்த 24 மணி நேர செப வழிபாட்டை உரோம் நகர் பங்குதளத்தில் தானே தலைமையேற்று வழி நடத்தி வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூபிலி ஆண்டிற்கு தயாரிப்பாக இவ்வாண்டு திருத்தந்தையால் இறைவேண்டல் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த 24 மணி நேர செபழிபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 March 2024, 14:41