தாராள மனதுடன் குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துவோம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
அறிவியலும் நவீன மருத்துவமும் ஒரு சிலருக்கு மட்டும் கிடைக்கப்படும் ஒன்றாக மட்டுமன்று, தேவையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கப்படவேண்டும் என்றும், மருத்துவமனைப் பணியாளர்கள் தாராள மனத்துடன் அனைவருக்கும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 16 சனிக்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் உரோமில் உள்ள குழந்தை இயேசு மருத்துவமனையின் பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஏறக்குறைய 6000 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொடை, கவனிப்பு, மற்றும் சமூகம் என்னும் மூன்று தலைப்புக்களில் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.
கொடை
ஐரோப்பாவின் மிகப்பெரிய குழந்தை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையங்களில் ஒன்றாக "Bambino Gesù" எனப்படும் குழந்தை இயேசு மருத்துவமனைத் திகழ்கின்றது என்றும், உலகெங்கிலுமிருந்து ஏராளமான பெண்கள் தங்களது குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்காக அங்கு வருகின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கொடை, தாராளமனம், தாழ்ச்சி, எளிதில் அணுகும் சூழல் போன்றவற்றின் வழியாக அதன் வரலாறு மற்றும் பணிக்கான அழைப்பில் குழந்தை இயேசு மருத்துவமனை உறுதியாக உள்ளது என்றும், duchessa Arabella Salviati என்பவரின் குழந்தைகள் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை தங்களைப்போல உள்ள குழந்தைகள் நலம்பெறுவதற்காகத் தாழ்ச்சியுடன் மருத்துவமனைக் கட்ட அளித்ததிலிருந்து அதன் வரலாறு தொடங்குகின்றது என்றும் கூறினார்.
மேலும் மருத்துவமனையின் பணியாளர்கள் தாராளமனத்துடன் இப்பணியினைச் செய்கின்றார்கள் என்றும், தன்னார்வ மனதுடன் உதவிகள் பல செய்பவர்களால் குணப்படுத்த முடியாத நோயினால் பாதிக்கப்படும் இளம் நோயாளர்களுக்கான ஒரு நோய்த்தடுப்பு சிகிச்சை மையத்தை உருவாக்க முடிந்தது என்றும் கூறினார்.
ஒளி நிறைந்த இத்தகைய செயல்களால் நாம் செய்யும் சிறிய மற்றும் பெரிய பணியின் மதிப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்றும், எதிர்காலத்திற்கானக் கனவுகளைத் தொடரமுடியும் என்றும் வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், உலகெங்கிலும் உள்ள தேவையில் இருக்கும் குழந்தைகளை அன்புடன் வரவேற்று, சமூக, தேசிய, மத வேறுபாடின்றி அனைவருக்கும் மருத்துவ உதவிகள் வழங்க திருஅவை இணைந்து செயல்படுகின்றது என்றும் கூறினார்.
கவனித்தல்
அறிவியல், கவனித்துக்கொள்ளும் திறன் போன்றவை குழந்தை இயேசு மருத்துவமனையின் மிக முக்கியமான சிறப்பம்சங்களாக உள்ளன என்று கூறிய திருத்தந்தை அவர்கள், குழந்தைகளின் நலன், குணப்படுத்துதல் மற்றும், உதவிக்காக இதயப்பூர்வமாக வேண்டுகோள் விடுக்கும் குடும்பங்களுக்கான உறுதியான பதில் என்றும், உயிரி மருத்துவ ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவது முக்கியமானது என்றும் கூறினார்.
மிக மோசமான, அரிதான, குணப்படுத்த இயலாத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலவீனமானவர்களிடத்தில், சிறப்புக் கவனம் செலுத்த ஊக்குவித்தத் திருத்தந்தை அவர்கள், அறிவியலும் நிபுணத்துவமும் ஒரு சிலருக்கு மட்டும் கிடைக்கப்படும் ஒன்றாக மட்டுமன்று, தேவையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தி, ஆப்ரிக்கா, ஆசியா, மத்திய தரைக்கடல் போன்ற பகுதியில் உள்ளவர்களுக்கும் கிடைக்கப்பெற வழங்கப்பட்டு வரும் செவிலியர் பயிற்சிக்கு வாழ்த்துக்களையும் கூறினார்.
நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் துயரங்கள் என இரண்டு உணர்வுகளை தான் குழந்தை இயேசு மருத்துவமனையில் பார்த்து வருந்துவதாகக் கூறிய திருத்தந்தை அவர்கள், அதே நேரத்தில் அவர்கள் சிகிச்சை பெறுவதற்காகவும் குணம் பெறுவதற்காகவும் செய்யப்பட்டுள்ள அனைத்தையும் பார்த்து நம்பிக்கைக் கொள்வதாகவும் எடுத்துரைத்தார்.
நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகள் மட்டுமன்று அவர்களது குடும்பத்தாரும் அதில் துன்பத்தை அனுபவிக்கின்றனர் என்றும், நெருக்கம், அருகிருப்பு போன்றவற்றை அவர்களுக்குக் கொடுத்து வாழ வேண்டும் என்றும், அருகிருப்பு, மென்மை, கவனிப்பு இன்றி எந்த செயல்களும் செய்யப்படுவதில்லை என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்