கடவுள் பணிக்கான மிக முக்கியமான வளங்கள் நாம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஒன்றிணைந்து செயல்படுதல் என்பது நன்மையை மட்டும் செய்வதல்ல, நன்மையைச் செய்வதற்கான ஒன்றிப்பில் வளர்தல், பிறரன்புப் பணியினை ஆற்றுதல் மற்றும் ஆதரித்தல் என்றும், கடவுள் பணிக்கான மிக முக்கியமான வளங்கள், பொருள்கள் அல்ல மாறாக பிறருடன் நம்மைப் பகிரும் நாம் தான் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 16 சனிக்கிழமை வத்திக்கான் கிளமெந்தினா அறையில் விசென்ஷாவில் உள்ள, பேரருள்திரு Camillo Faresin அறக்கட்டளை உறுப்பினர்கள் ஏறக்குறைய 250 பேரைச் சந்திந்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடைநிலையில் இருப்பவர்களுக்காக உழைத்தல், ஒன்றிணைந்து உழைத்தல் என்னும் இரண்டு கருத்துக்களை அவர்களுக்கு வலியுறுத்தினார்.
கடைநிலையில் இருப்பவர்களுக்காக உழைத்தல்
பேரருள்திரு ஃபரேசின் மற்றும் அவரது சகோதரர்கள் தாழ்ச்சியுள்ள மனிதர்களாக இருந்தார்கள், எளிமை, அர்ப்பண மனநிலை, அடக்கம், மரியாதை, கொண்ட குடும்பத்தில் இருந்து பிறரன்புப் பணிகள் மற்றும் இரக்கச்செயல்களைக் கற்றறிந்தவர்கள் என்றும், இந்தச்சூழலில் இருந்தே அவர்கள், கடவுளின் அருளால் கடைநிலையில் இருப்பவர்களுக்காக உழைப்பதற்கான அழைப்பையும் செய்தியையும் பெற்றார்கள் என்றும் கூறினார்.
தங்களது எதிர்கால வாழ்விற்கான ஒரு செய்தியைப் பெற்ற அவர்கள், மிகப்பெரிய சோதனையான நேரங்களிலும் கூட கடைநிலையில் உள்ளவர்கள் மேல் எல்லையற்ற அன்பு கொண்டு தாராள மனம் மற்றும் அறிவுத்திறனுடன் பணியாற்றினார்கள் என்றும், ஆயர் கமிலஸ் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் துன்புறுத்தப்பட்ட யூதர்களுக்கு தன்னால் முடிந்த அனைத்து தொண்டுப்பணிகளையும் துணிவுடன் ஆற்றி எருசலேமில் உள்ள நேர்மையாளர்களின் தோட்டத்தில் ஒருவராய் இடம்பிடித்துள்ளார் என்றும் கூறினார்.
கடைநிலையில் உள்ள ஏழைகளுடன் எப்போதும் இருங்கள் என்பதை ஆயரின் வாழ்க்கை நமக்கு அறிவுறுத்துகின்றது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், ஏழைகள் மற்றும் தங்க இடமின்றி வெறுக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கான நமது திட்டங்களைத் தேர்ந்தெடுத்தல், முன்னுரிமையளித்தல் போன்றவற்றில் வாக்களிக்கப்பட்ட நாட்டை அவர்கள் உரிமையாக்கிக்கொள்ளும் விதமாக உழைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஏழைகளுடன் அருகிருந்து அவர்களுக்காக முடிந்தவரை பணியாற்றி அவர்களின் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்றும், இந்த வழியில் மட்டுமே கடவுள் நமது பாதையில் வைக்கும் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் உணர்வுத் துடிப்புக்களை நாம் அறிந்துகொள்ள முடியும் என்றும் கூறினார்.
ஏழைகளுக்கான நமது இந்தப் பணியினை இயேசுவோடு இணைந்து செய்வதன் வழியாக ஒளி, வலிமை மற்றும் ஞானத்தால் நாம் செழுமைப்படுத்தப்படுகின்றோம் என்றும், துன்புறுத்தப்படும் அவரது உடலின் உறுப்புக்களான ஏழைகளை அடையாளப்படுத்தப்படுகின்றனர் என்றும் கூறினார்.
ஒன்றிணைந்துப் பணியாற்றுதல்
பஸ்ஸானோ தெல் கிராப்பாவில் உள்ள கடவுளின் திருவுள மறைப்பணியாளர்சபை அருள்சகோதரிகளுடன் இணைந்து செய்யும் அவர்களின் பணியைக் குறிப்பிட்ட திருத்தந்தை அவர்கள், பல்சமயத்தார் மற்றும் இயக்கத்தாருடன் இணைந்து செய்யப்படும் பணி பாராட்டுக்குரியது என்றும், இதுவே சரியான பாதை மற்றும் நற்செய்தி அறிவிப்பு என்றும் கூறினார்.
மேலும் வளங்களை மேம்படுத்துவதற்கான அறிவார்ந்த வழி, பிறரன்பு மற்றும் ஒன்றிணைந்த பணியின் பயிற்சிக்கான ஒரு வழி என்றும், ஒன்றிணைந்து செயல்படுதல் என்பது நன்மையை மட்டும் செய்வதல்ல நன்மையைச் செய்வதற்கான ஒன்றிப்பில் வளர்தல், பிறரன்புப் பணியினை ஆற்றுதல் மற்றும் ஆதரித்தல் என்றும் வலியுறுத்தினார்.
ஒன்றிணைந்து செயல்படுதல் என்பது இறைபராமரிப்பில் நம்பிக்கை வைத்து செயல்படுவதன் வெளிப்பாடு என்றும், கடவுள் பணிக்கான மிக முக்கியமான வளங்கள் பொருள்கள் அல்ல மாறாக நம் உடன்வாழ்பவர்களிடத்தில் நமது படைப்பாற்றல், திறமை அனுபவங்கள், பலவீனங்கள், பலங்கள் என்பதைப் பகிர்ந்து, நம்மை நாமே வெளிப்படுத்துகின்ற நாம் ஒவ்வொருவருமே என்று கூறினார் திருத்தந்தை.
பொறுமையுடன் ஒருவர் மற்றவருடன் பகிர்ந்து செய்யப்படும் செயல்கள் சிறந்த ஆற்றல்களையும் உறுதியான பலன்களையும் தரும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
திருத்தந்தையின் கருத்துக்களை பேரருள்திரு சம்பனெல்லி வாசித்தளித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்