புனித தாமஸ் அக்குவினாஸ் புனித தாமஸ் அக்குவினாஸ் 

அக்குவினாஸின் எண்ணங்கள் எக்காலத்திலும் பொருத்தமானவை

வெளிப்படுத்தப்பட்ட உண்மைக்கும் பகுத்தறிவு வாதத்தினால் கண்டுகொள்ளப்படும் உண்மைக்கும் இடையே அடிப்படையான முரண்பாடுகள் கிடையாது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

உலக மயமாக்கல் இடம்பெற்றுவரும் இன்றைய காலக்கட்டத்திலும் புனித தாமஸ் அக்குவினாஸ் அவர்களின் எண்ணங்கள் எப்போதையும் விட தற்போது மிகவும் பொருத்தமானதாக இருப்பதாக உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறையியலாளர் புனித தாமஸ் அக்குவினாஸ் இறந்ததன் 750வது ஆண்டையொட்டி சமூக அறிவியலுக்கான பாப்பிறைக் கழகம் ஏற்பாடுச் செய்துள்ள கருத்தரங்கில் பங்குபெறுவோருக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை,  சமூக அறிவியலின் வளர்ச்சிக்கு திருஅவை வரலாற்றில் முக்கிய இறையியலாளர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பு குறித்து சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

"தாமஸ் அக்குவினாசின் சமூக இயல்வியல் மற்றும் இயற்கை சட்டங்களின் சரியான கண்ணோட்டத்தில்” என்ற தலைப்பில் சமூக அறிவியலுக்கான பாப்பிறைக்கழகம் ஏற்பாடுச் செய்துள்ள கருத்தரங்கில் பங்குபெறுவோருக்கு திருத்தந்தையால் அனுப்பப்பட்ட செய்தி, வெளிப்படுத்தப்பட்ட உண்மைக்கும் பகுத்தறிவு வாதத்தினால் கண்டுகொள்ளப்படும் உண்மைக்கும் இடையே அடிப்படையான முரண்பாடுகள் கிடையாது என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.

நன்மைத்தனம் குறித்து மனிதன் கண்டுகொள்ள அவனுக்குள் உள்ளார்ந்த சக்தி உள்ளது என்பதை வலியுறுத்தும் திருத்தந்தை, நவீன கால ஒழுக்க ரீதி மற்றும் சட்ட ரீதி எண்ணங்களை வடிவமைப்பதில் தாமஸ் அக்குவினாசின் பாதிப்புக்களையும் குறிப்பிட்டுள்ளார்.

கடவுள் குறித்த உண்மையைக் கண்டுகொள்ளுதல் மற்றும், சமூகத்தில் வாழ்தல் குறித்து தாமஸ் அக்குவினாசின் கருத்துக்களை நாம் மீண்டும் அசைபோட வேண்டியுள்ளது என்ற அழைப்பை தன் செய்தியில் விடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்குவினாசின் இக்கருத்துக்கள் வழி உண்மையான மனித வளர்ச்சியை ஊக்குவிக்கும் சமூக சிந்தனைகளும் கொள்கைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதையும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 March 2024, 15:35