தேடுதல்

மெரிதா சகோதர்களுக்குத் திருத்தந்தையின் புனிதவாரக் காணொளிச்செய்தி

புனித வாரம் அருளின் காலம், நம் இதயங்கள், தலத்திருஅவைகள், சகோதரத்துவ அமைப்புகள் போன்றவற்றின் கதவுகளைத் திறக்க இறைவன் அருள்தரும் காலம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

புனித வாரம் என்பது ஒரு நிகழ்ச்சி அல்ல, மாறாக மீட்பின் அறிவிப்பு, எனவே அது ஓர் அடையாளத்தை நிச்சயம் விட்டுச்செல்ல வேண்டும் என்றும், அழியாத மற்றும் நிரந்தரமான அடையாளத்தை இந்த யூபிலி ஆண்டு முழுவதும் ஏற்படுத்த உழைக்கின்ற, தவமுயற்சிகள் செய்கின்ற ஒவ்வொருவரின் வாழ்விலும், ஏற்படுத்த வேண்டும் என்றும் மெரிதாவில் இருக்கக்கூடிய அனைத்து சகோதரத்துவ உறவுகளுக்கும் வலியுறுத்தியுள்ளார் திருத்ததை பிரான்சிஸ்.

மார்ச் 17 ஞாயிற்றுக்கிழமை இஸ்பெயினில் உள்ள மெரிதா சகோதரத்துவ உறவுகளுக்கு அனுப்பியுள்ள புனிதவாரத்திற்கானக் காணொளிச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளத் திருத்தந்தை அவர்கள், மெரிதா மக்கள் சிறப்பிக்கும் யுலாலியா யூபிலி ஆண்டினையும் நினைவுகூர்ந்துள்ளார்.

இவ்வாண்டு தவக்காலச் செய்தியில் புனித வாரத்தில் நாம் அதிகமாக செபித்தல், இறைவார்த்தைக்கு செவிமடுத்தல், நல்ல சமாரியன் போல, கடவுளையும் அயலாரையும் அன்பு செய்து கடவுள் முன் சகோதர சகோதரிகளாகப் புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கவும் வலியுறுத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், பிறரைப் பகைவர்களாகப் பார்த்தல் மற்றும் பிரித்தல் போன்றவற்றை கற்பனை செய்வதை விடுத்து சகோதர அன்புடன் புதியக் கண்ணோட்டத்தில் ஒருவர் ஒருவரைப் பார்க்க வலியுறுத்தியுள்ளார்.

புனித வாரம் அருளின் காலம், நம் இதயங்கள், தலத்திருஅவைகள், சகோதரத்துவ அமைப்புகள் போன்றவற்றின் கதவுகளைத் திறக்க இறைவன் அருள்தரும் காலம் என்றும், இதயக்கதவுகளைத் திறத்தல், இயேசுவை, பிற மக்களை எதிர்கொண்டு நமது நம்பிக்கையின் ஒளி மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு செல்பவர்களாக வாழ அழைக்கப்படுகின்றோம் என்றும் கூறியுள்ளார்.

நமது கைகள், கால்கள், இதயம் போன்றவற்றில் இயேசுவின் அன்பு, மென்மை மரியாதை, பொறுமை கொண்டு, அனைத்து செயல்களையும் செய்யவும், கடவுள் நம்மை வழி நடத்துகின்றார் நமது பாதையைக்காட்டுகின்றார் என்பதை உணர்ந்து வாழவும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை

உலகின் குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டுமே, 2000 ஆண்டுகளுக்கு முன்பாக மனிதகுல வரலாற்றை மாற்றிய இந்த புனித வாரத்தையும் கிறிஸ்து நமக்காக பாடுகள் பட்டு துன்புற்றதையும் நினைவுகூர்ந்து மீண்டும் வாழ முடிகின்றது என்றும், இந்த ஆண்டு கொலோசேயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு சிறப்பிக்கப்படும் நேரத்தில் உலகம் முழுவதும் உள்ள நம்பிக்கைக்கொண்ட மக்களை ஈர்க்கும் விதமாக இஸ்பெயினில் உள்ள வட்டவடிவ அரங்கத்தில் மெரிதா மக்களும் சிலுவைப்பாதை சிறப்பிக்க உள்ளார்கள் என்பதையும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

யுலாலியா யூபிலி ஆண்டின் நிறைவில் இருக்கும் மெரிதா மக்கள் குழந்தை மறைசாட்சியான தூய யுலாலியாவை வணங்கும் வழிபாட்டுமுறையானது இஸ்பானிய கிறிஸ்தவத்தின் தொட்டிலாகவும், திருப்பயணிகளுக்கான வரலாற்று இடமாகவும் மாறியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.    

Mérida-Badajoz பேராயர், அருள்பணி Celso Morga, நகரமேயர், Antonio Rodríguez Osuna, மற்றும் மறைசாட்சியாளரான தூய Eulalia சங்கத்தின் தலைவர் Luis Miguel González ஆகியோர் உரோம் நகருக்கு வந்து யூபிலி நிகழ்வுகள் அனைத்தையும் நன்றாக விளக்கித் தன்னுடன் பகிர்ந்துகொண்டதாகத் தெரிவித்தார் திருத்தந்தை.

மெரிதாவில் உள்ள அனைவருக்காகவும், உடல்நலமற்றவர்களைக் கொண்டிருக்கும் குடும்பத்தார், தனிமையில் இருப்பவர்கள், தேவையில் இருப்பவர்கள், பொருளாத நெருக்கடியில் இருப்பவர்கள், மெரிதா சகோதரத்துவ அமைப்பில் உள்ள தற்கால மற்றும் எதிர்கால இளையோருக்காகவும் செபிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

தூய யுலாலியாவின் பாதுகாப்பில் இந்த புனித வாரமானது நிறை பலன்களைக் கொடுக்க வேண்டும் என்று கூறி தனது சிறப்பு அப்போஸ்தலிக்க ஆசிரை வழங்கியுள்ள திருத்தந்தை அவர்கள், தனக்காக செபிக்க மறக்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 March 2024, 14:57