ரெபிபியா பெண்கள் சிறையில் பாதங்களைக் கழுவும் திருத்தந்தை (கோப்புப் படம்) ரெபிபியா பெண்கள் சிறையில் பாதங்களைக் கழுவும் திருத்தந்தை (கோப்புப் படம்) 

புனித வியாழனன்று ரெபிபியா சிறையில் திருத்தந்தையின் திருப்பலி!

கடந்த 2015-ஆம் ஆண்டு புனித வியாழன் அன்று உரோமையிலுள்ள ரெபிபியா சிறைச்சாலையில் திருப்பலி கொண்டாடினார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மார்ச் 28, வியாழனன்று உரோமையிலுள்ள ரெபிபியா பெண்கள் சிறையில் மாலை 4.00 மணிக்கு நடைபெறும் புனித வியாழன் திருப்பலியைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலைமையேற்று வழி நடத்துகிறார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம்  தெரிவித்துள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ரெபிபியா சிறைக்கானத் தனது பயணத்தின் போது, ​​பெண் கைதிகள் மற்றும் சிறை வளாகப் பணியாளர்களைச் சந்திப்பார் என்றும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயேசு, தான் இறப்பதற்கு முந்தினநாள் நிகழ்ந்த இரவு உணவின்போது தனது சீடர்களின் கால்களைக் கழுவியதுபோன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இப்புனித வியாழன் திருப்பலியில் கைதிகளின் பாதங்களைக் கழுவி முத்தம் செய்வார் என்றும் அச்செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த 2015-ஆம் ஆண்டு புனித வியாழன் அன்று, உரோமையிலுள்ள ரெபிபியா சிறையில் திருப்பலி கொண்டாடினார் என்பதும், இந்த ஆண்டுக் கொண்டாட்டம் தனிப்பட்டதாக இருக்கும் மற்றும், பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 March 2024, 14:33