திருத்தந்தை : நானும் ஒரு புலம்பெயர்ந்த குடும்பத்தின் புதல்வனே
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
கொலம்பியாவுக்கும் பானமா நாட்டிற்கும் இடையேயான காட்டுப் பகுதி வழியாக குடியேற முயலும் புலம்பெயர்ந்தோர் சிறப்பு அக்கறையுடன் நடத்தப்படவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பானமா நாட்டின் மேற்குப் பகுதியிலுள்ள லாஹஸ் பிளங்காஸ் (Lajas Blancas) என்னுமிடத்தில், ‘குடிபெயரும் சகோதரர் சகோதரிகளுடன் உயிர்ப்புப் பெருவிழா’ என்ற தலைப்பில் கொலம்பியா, கோஸ்டா ரிக்கா, மற்றும் பானமா ஆயர்களுடனும் குடிபெயர்ந்த மக்களுடனும் இடம்பெற்றுவரும் கூட்டத்தில் கலந்துகொள்ளும் புலம்பெயர்ந்தோருக்கென செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தானும் நல்ல வருங்காலத்தைத் தேடி குடிபெயர்ந்த ஒரு புலம்பெயர்ந்த குடும்பத்தின் புதல்வனே என அதில் குறிப்பிட்டுள்ளார்.
குடிபெயரும் ஏழை மக்கள் உண்ண எதுவும் கையில் இல்லா நிலையிலும், இதயம் முழுவதும் நம்பிக்கையுடன் இருப்பவர்கள் என்பதை எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புலம்பெயர்ந்தோரின் முகங்களில் இயேசுவைக் கண்டு, அவர்களின் சிலுவைப்பாதையில் நம்பிக்கையையும் இடருதவிகளையும் வழங்கும் வெரோனிக்காவாக திருஅவை செயல்படுவதாக தன் செய்தியில் கூறியுள்ளார்.
பல்வேறு இடர்பாடுகளை தங்கள் பாதையில் சந்திக்கும் புலம்பெயர்ந்தோரை புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவி வரும் அனைவருக்கும் தன் நன்றியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடிபெயர்வோர் அனைவரும் எச்சூழலிலும் தங்கள் மனித மாண்பை விட்டுக்கொடுத்தல் இயலாது என்பதையும், தாங்களும் மனித குல குடும்பத்தின் உரிமையுள்ள அங்கத்தினர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது என்பதையும் தன் செய்தியில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
அண்மை புள்ளிவிவரங்களின்படி, 2023ஆம் ஆண்டில் மட்டும் 5 இலட்சத்து 20 ஆயிரம் பேர் கொலம்பியாவுக்கும் பானமாவுக்கும் இடையிலான பேராபத்து நிறைந்த காட்டுப்பகுதி வழி புலம்பெயர்ந்துள்ளனர்.
வெனிசுவேலா, கொலம்பியா, நிகரகுவா, தொமினிக்கன் குடியரசு, கோஸ்டா ரிக்கா மற்றும் மெக்சிகோவிலிருந்து பெருமளவில் புலம்பெயர்ந்தோரைக் கொண்டுள்ள பானமாவில், அங்குள்ள மொத்த குடிபெயர்ந்த மக்களுள் 10.7 விழுக்காட்டினர் சீனர்கள் எனவும் 2.4 விழுக்காட்டினர் இந்தியர்கள் எனவும் அண்மைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்