பெண்களை ஆசிர்வதிக்கும் திருத்தந்தை பெண்களை ஆசிர்வதிக்கும் திருத்தந்தை   (AFP or licensors)

இளகிய மனதுடன் மக்களை ஒன்றிணைக்கப் பெண்களுக்குத் தெரியும்

பெண்களின் கல்வி வழியாகத்தான் சமூக முன்னேற்றேம் சாத்தியம். இது ஒட்டுமொத்த மனித வளர்ச்சிக்கும் பயனளிக்கிறது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உண்மையில், சமூக மற்றும் திருஅவையின் வாழ்க்கையிலிருந்து பெண்கள் பெருமளவில் ஒதுக்கப்பட்ட வரலாற்றில் துல்லியமாக, தூய ஆவியானவர் பெண் புனிதர்களை திருஅவையில் எழுப்பினார் என்றும், அவர்களின் மனம் கவரும் பண்புகள் புதிய ஆன்மிக வீரியத்தையும் திருஅவையில் முக்கியமான சீர்திருத்தங்களையும் உருவாக்கியது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'திருஅவையில் பெண்கள்: மனிதகுலத்தை கட்டியெழுப்புபவர்கள்' என்ற தலைப்பில் நடைபெறும் அனைத்துலக கருத்தரங்கம் ஒன்றின் பங்கேற்பாளர்களுக்கு மார்ச் 7, இவ்வியாழனன்று, அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு உரைத்துள்ள திருத்தந்தை, திருஅவை என்பது தன்னிலேயே ஒரு பெண், ஒரு மகள், ஒரு மணமகள் மற்றும் ஒரு தாய் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

வாழ்க்கை, பொது நன்மை மற்றும் அமைதிக்கான சேவையில் படைப்பாளருடன் ஒத்துழைக்கும் "கட்டமைப்பாளர்கள்" என்ற பெண்களின் அழைத்தலின்  தன்மையை உங்களின் கருத்தரங்கின் தலைப்பு இன்னும் தெளிவாக வெளிப்படுத்துகிறது என்று கூறியுள்ள திருத்தந்தை, பாணி மற்றும் கல்வி என்ற இரண்டு தலைப்புகளின் கீழ் தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

01. பாணி

அன்பின் வலிமையை உணர வேண்டிய நமது மனிதக் குடும்பம், மனித இதயத்தின் உன்னத உணர்வுகளை ஒடுக்கும் வன்முறை, போர் மற்றும் கருத்தியல்களாஸ் அடிக்கடி வடுவை ஏற்படுத்தும் ஒரு காலம் நம்முடையதாக மாறிவிட்டது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, துல்லியமாக இந்தப் பின்னணியில், பெண்களின் பங்களிப்பு முன்னெப்போதையும் விட மிகவும் அவசியமானது என்பதை நாம் உணர்ந்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

உண்மையில், பெண்கள், இரக்கம், தனித்துவமான திறன்கள், உள்ளுணர்வு, அக்கறை, கரிசனை ஆகியவற்றின் வழியாக ஒரு புதிய பாணியில் செயல்படுகிறார்கள் என்றும், அவர்களின் இயற்கையான விருப்பத்துடன், ஒரு சிறந்த வழியில், அறிவு மற்றும் அன்புகூரும் மற்றும் ஒன்றிணைக்கும் இதயம் இரண்டையும் சமூக நலன் சார்ந்ததாக மாற்றுகிறார்கள் என்றும் எடுத்துக்காட்டிய திருத்தந்தை, அன்பு இல்லாத இடத்தில் அன்பையும், மனிதர்கள் தங்கள் உண்மையான அடையாளத்தைக் கண்டறிய தேடும் மனிதநேயத்தையும் பெண்களால் கொண்டுவர முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

02. கல்வி

பல்வேறு கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இந்தக் கலந்துரையாடலை நீங்கள் ஏற்பாடு செய்திருக்கிறீர்கள் என்று உரைத்த திருத்தந்தை, பல்கலைக்கழக சமூகங்களுக்குள் மேய்ப்புப் பணியின் பின்னணியில், திருஅவையின் கோட்பாடு மற்றும் சமூகப் போதனையின் கல்விப் படிப்புக்கு மேலதிகமாக, புனிதம், குறிப்பாக, பெண்மையின் புனிதத்தன்மை ஆகியவற்றின் சாட்சியங்களை மாணவர்களுக்கு வழங்குவதற்கான ஒவ்வொரு முயற்சியும், எல்லைகளை விரிவுபடுத்த, உயர்ந்த இலக்கை அடைய அவர்களை ஊக்குவிக்கும் என்றும், அவர்களின் கனவுகள் மற்றும் சிந்தனை முறைகள் மற்றும் உயர்ந்த இலட்சியங்களைத் தொடர உதவும் என்றும் விவரித்துள்ளார்.

உங்கள் கல்வி அமைப்புகள், படிப்பு, ஆராய்ச்சி மற்றும் கற்றல், தகவல் இடங்கள் ஆகியவற்றுடன், தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப செயல்படும் இடங்களாக உங்கள் மனங்களும் இருக்கும் என்று தான் நம்புவதாகவும் உரைத்துள்ளார் திருத்தந்தை.

அதனால்தான், புனிதர்களை, குறிப்பாக, பெண் புனிதர்களை அவர்களின் மனிதநேயத்தின் அனைத்து ஆழத்திலும் உண்மையிலும் நன்கு அறியச் செய்வது முக்கியம் என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, இந்த வழியில், கல்வி ஒவ்வொரு நபருக்கும் அவரது முழுமை மற்றும் தனித்துவத்தைத் தொடும் திறனை அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 March 2024, 13:58