தேடுதல்

சிறுவனை அரவணைத்துக்கொள்ளும் திருத்தந்தை சிறுவனை அரவணைத்துக்கொள்ளும் திருத்தந்தை  

பாலியல் முறைகேடுகளின் கொடுமையை அழித்தொழிப்போம்!

மற்றவர்களை பாலியல் முறைகேடுகளுக்கு ஆளாக்குபவர்களைப் பாதுகாக்கும் கட்டமைப்புகளை வேரறுக்குமாறு திருஅவைக்கு அழைப்புவிடுக்கின்றேன் : திருத்தந்தை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருஅவை உட்பட எந்தவொரு சமூகத்திலும் உள்ள உறவுகளை மனிதாபிமானமாக்குவது என்பது, தங்கள் நம்பிக்கை மற்றும் நெறிமுறைக் கொள்கைகளில் உறுதியான, தீமையை எதிர்கொள்ளும் திறன் கொண்ட, பெரிய அளவில் உண்மைக்கு சாட்சியம் அளிக்கும் முதிர்ந்த, ஒத்திசைவான நபர்களை உருவாக்க அயராது உழைப்பதாகும் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 12 முதல் 14 -ஆம் தேதி வரை “பாதிப்பு மற்றும் பாலியல் முறைகேடு: தடுப்பு பற்றிய பரந்த பார்வையை நோக்கி" என்ற கருப்பொருளில் பனாமாவில் நடைபெற்று  வரும் 3-வது இலத்தீன் அமெரிக்க மாநாட்டின் பங்கேற்பாளர்களுக்கு இச்செவ்வாயன்று அனுப்பியுள்ள செய்தி ஒன்றில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, சமூகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நிகழ்ந்து வரும் பாலியல் முறைகேடு என்ற கசப்பை ஒழிப்பதற்கான திருஅவையின் முயற்சிகளை இறைவனிடம் ஒப்படைப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பாலியல் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் உட்பட அனைத்துப் பாவிகளின் மனமாற்றத்திற்காகவும் இறைவேண்டல் செய்யுமாறு விண்ணப்பித்துள்ள திருத்தந்தை, அனைத்து வகையான பாலியல் முறைகேடுகளையும் தடுக்கும் பணியில் ஈடுபடுபவர்களையும் அக்கடிதத்தில் ஊக்குவித்துள்ளார்.

நமது பலத்தையும் கடவுள் நம்பிக்கையையும் கண்டறிவதன் வழியாக, வாழ்க்கையின் முரண்பாடுகளை நாம் எதிர்கொள்ள முடியும் மற்றும் நாம் அழைக்கப்பட்ட பணியில் பொது நன்மைக்கு நம்மால் பங்களிப்புச் செய்ய முடியும் என்றும் உரைத்துள்ளார் திருத்தந்தை.

“என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்” (காண். 2 கொரி 12:9).என்று ஆண்டவர் தன்னிடம் உரைத்ததாகக் கூறிய புனித பவுலடியாரின் வார்த்தைகளை எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் அருளில் நம்பிக்கை வைத்து பலவீனங்களில் பலம் காண கிறிஸ்தவர்கள் அழைக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

CEPROME எனப்படும் சிறார்களின் பாதுகாப்பு மையத்தால் ஊக்குவிக்கப்பட்ட இந்த மாநாடு “பாதிப்பு மற்றும் பாலியல் முறைகேடு: தடுப்பு பற்றிய பரந்த பார்வையை நோக்கி" என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. இதில் இலத்தின் அமெரிக்காவின் அனைத்து நாடுகளிலிருந்தும் தலத்திருஅவையின் பல்வேறு பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 March 2024, 12:18