வெனிஸ் நகரில் திருத்தந்தையின் ஒருநாள் திருத்தூதுப்பயணம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இரண்டாட்டிற்கு ஒருமுறை இத்தாலியின் வெனிஸ் நகரில் நடத்தப்படும் கலைக்கண்காட்சியில் பங்குபெறும் வத்திக்கான் கலையரங்கத்தை பார்வையிடுவதற்கென ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி அந்நகர் செல்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வெனிஸ் நகரில் ஒரு நாள் மேய்ப்புப்பணி சார்ந்த திருத்தூதுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளதையொட்டி அது சார்ந்த பயண விவரங்களை வெளியிட்டுள்ளது திருப்பீட தகவல் துறை.
ஏப்ரல் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று வெனிஸ் நகரம் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்று காலை ஹெலிகாப்டரில் வெனிசிலுள்ள Giudecca பெண்கள் சிறைச்சாலையின் உள்வளாகத்தில் சென்றிறங்குவார்.
முதலில் வெனிஸ் நகர முதுபெரும் தந்தை Francesco Moraglia அவர்களாலும், இத்தாலிய அதிகாரிகளாலும் காலை 8 மணிக்கு வரவேற்கப்படும் திருத்தந்தை, அதன்பின் அச்சிறைச்சாலை வளாகத்திலேயே ஏறத்தாழ 80 பெண்கைதிகளை சந்திப்பார்.
அந்த சிறைச்சாலையின் கோவிலிலேயே கலைஞர்களை சந்தித்தபின், 60ஆவது அனைத்துலகக் கலைக்கண்காட்சிக்குச் சென்று, அங்குள்ள வத்திக்கான் கலையரங்கத்தைப் பார்வையிடுவார்.
“என் சொந்த கண்களோடு,” என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த கலையரங்கம் மனித உரிமைகள் மற்றும் வறியோருக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கலாச்சாரங்களிடையேயான உரையாடல்களை ஊக்குவிக்கும் நிலைகளில் புறக்கணிக்கப்படும் மக்களைக் குறித்து உலகின் கவனத்தைத் திருப்புவதாக இந்த வத்திக்கான் கலையரங்கம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசின் Giudecca தீவிலிருந்து விசைப்படகு வழியாக புனித மேரி பசிலிக்கா வரும் திருத்தந்தை, அங்கு இளையோரை சந்தித்து உரையாடுவார். அதன்பின் புனித மாற்கு சதுக்கம் வரும் திருத்தந்தை, இத்தாலிய நேரம் காலை 11 மணிக்கு விசுவாசிகளுக்கு திருப்பலி நிறைவேற்றியபின், புனித மாற்கு பசிலிக்காவில் அப்புனிதரின் திருப்பண்டத்தை தரிசித்து, பின் புனித எலேனா தீவுக்கு விசைப்படகில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் பிற்பகல் உள்ளூர் நேரம் 2.30 மணியளவில் வத்திக்கான் வந்தடைவார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்