பாலியல் முறைகேடுகளுக்கு ஆளாகும் சிறார்களைப் பாதுகாப்போம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
சிறார்களைப் பாதுகாக்கும் நமது திருஅவைப் பணிகளில், பாலியல் முறைகேடுகளுக்கு ஆளானவர்களுடன் நெருக்கமாக இருப்பதென்பது, கேட்பது, தலையிடுவது, தடுப்பது மற்றும் உதவுவது ஆகியவற்றை உள்ளடக்கியது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பாலியல் முறைகேடுகளுக்கு ஆளாகும் சிறார்களைப் பாதுகாக்கும் பாப்பிறை அமைப்பின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தின் பங்கேற்பாளர்களை மார்ச் 7, இவ்வியாழனன்று, திருப்பீடத்தில் சந்தித்தவேளை இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழு மனப்பான்மையுடன் இந்தப் பணியில் தொடரவும், மற்றவர்களுக்கு அவர்களின் கவனிப்பை மிகவும் பயனுள்ளதாக மாற்றும், உறவு பாலங்கள் மற்றும் வலையமைப்புகளை உருவாக்க அவர்களை ஊக்குவிப்பதாகவும் தெரிவித்தார்.
பாலியல் முறைகேடுகள் மற்றும் அவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களை எதிர்கொள்வதில், நாம் சோர்வடையலாம், ஏனெனில் உடைந்த அவர்களது வாழ்க்கையின் அடித்தளத்தை மீட்டெடுப்பது மற்றும் அதன் வலியைக் குணப்படுத்துவது மிகப்பெரியது மற்றும் சிக்கலானது என்ற எதார்த்தை எடுத்துரைத்த திருத்தந்தை, ஆனாலும் நமது அர்ப்பணிப்பு குறையக்கூடாது; உண்மையில், நான் உங்களை முன்னோக்கிச் செல்ல ஊக்குவிக்கிறேன், அதனால் திருஅவை எப்போதும் மற்றும் எல்லா இடங்களிலும், அனைவரும் தங்கள் இல்லம் என்பதை உணரக்கூடிய இடமாக இருக்கும் மற்றும் ஒவ்வொரு நபரும் புனிதமாக கருதப்படுவார்கள் என்றும் விளக்கினார்.
இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்ய, கிறிஸ்துவின் உணர்வுகளை நம்முடையதாக மாற்ற வேண்டும் என்றும், அவருடைய பரிவிரக்கமும், மனிதகுலத்தின் காயங்களைத் தொடும் அவரது பாணியும் அவருடைய இதயம் நமக்காக அன்பால் துளைக்கப்பட்டது என்பதை உணரச் செய்கிறது என்றும் உரைத்த திருத்தந்தை, துன்புறும் ஊழியனாகிய இயேசுவின் வழியில் உண்மையான நெருக்கத்தையும் இரக்கத்தையும் காட்டாத வரை, மற்றவர்களின் சுமைகளை நாமே சுமக்காத வரை நாம் அவர்களுக்கு உதவ முடியாது என்றும் விளக்கினார்.
திருஅவைத் தலைவர்கள் உட்பட நாம் அனைவரும் பாலியல் முறைகேடுகளின் தாக்கத்தை நேரில் ஒப்புக்கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களின் துயரங்களை ஆழமாக உணரவும், அவர்களின் குரல்களை நேரடியாகக் கேட்கவும், நடைமுறை முடிவுகளின் வழியாக அவர்களின் வாழ்வை உயர்த்தவும், அவர்களுக்கு உதவவும் முடியும் என்று நம்பிக்கை தெரிவித்த திருத்தந்தை, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வித்தியாசமான எதிர்காலத்தை தயார்படுத்துங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.
பாலியல் முறைகேடுகளுக்கு ஆளான சிறுவர்களுக்கான நமது பதில், நம்முடைய அன்பான பார்வையிலும், இதயப்பூர்வமான நெருக்கத்திலும் பிறந்தது என்பதை உணர்வோம் என்று கூறிய திருத்தந்தை, முறைகேடுகளால் பாதிப்பிற்குள்ளான நம்முடைய இந்தச் சகோதரர் சகோதரிகள் வரவேற்கப்பட வேண்டும் மற்றும் அவர்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டும், ஏனெனில் நாம் அவ்வாறு செய்ய மறுக்கும்போது அது அவர்களின் துன்பத்தை பெரிதும் மோசமாக்கும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் பாலியல் முறைகேடுகளுக்கு ஆளான சிறார்களைக் கவனித்துக்கொள்வதில் நம்முடைய தனிப்பட்ட அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றும், அதேவேளையில், திறமையான ஒத்துழைப்பாளர்களின் உதவியுடன் நாம் அவ்வாறு செய்ய வேண்டும் என்றும் விண்ணப்பித்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்