தேடுதல்

நைஜீரியக் கத்தோலிக்கக் குழுமத்தாருடன் திருத்தந்தை பிரான்சிஸ் நைஜீரியக் கத்தோலிக்கக் குழுமத்தாருடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (VATICAN MEDIA Divisione Foto)

மனிதகுலத்தில் நல்லிணக்கம் மற்றும் அமைதியை ஏற்படுத்த வந்த இயேசு

அருகிருப்பு, இரக்கம் மற்றும் மென்மை என்னும் கடவுளின் பண்புநலன் கொண்டவர்களாக நாம் வாழும்போது சகோதர ஒன்றிப்பு மற்றும் நல்லிணக்கத்துடன் ஒன்றிணைந்து நாம் நடக்க முடியும்

மெரினா ராஜ் – வத்திக்கான்

மனிதகுலத்தில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் ஏற்படுத்துவதற்காக இயேசு மனிதராக வாழ்ந்தார், இறந்தார், உயிர்த்தார் என்றும், எப்பொழுதும் இறைவனின் உண்மையுள்ள சீடர்களாக வாழ்தல், திருமுழுக்கு அருளடையாளத்தின் வழியாகப் பெற்ற அழைப்பின் விழிப்புணர்வை ஆழமாக்குதல், கடவுளுக்கும் அவருடைய மக்களுக்கும் நம்மை நாம் அர்ப்பணித்து வாழ்தல் போன்றவற்றில் சிறந்து விளங்கவேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 25 திங்கள் கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் உரோமில் உள்ள நைஜீரியன் கத்தோலிக்கக் குழுமத்தார் ஏறக்குறைய 800 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நன்றியுணர்வு, பன்முகத்தன்மையில் வளமை மற்றும் உரையாடல் என்னும் மூன்று தலைப்புகள் குறித்தக் கருத்துக்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

மார்ச் 25 திங்கள் கிழமை திருஅவையில் வழக்கமாக சிறப்பிக்கப்படும்  இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு திருவிழாவானது புனித வாரத்தில் வருவதால், வருகின்ற ஏப்ரல் மாதம் 8 திங்கள் கிழமை சிறப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்த திருத்தந்தை அவர்கள், கடவுள் மனிதஉரு எடுத்தார், மீட்பின் பாஸ்கா மறைபொருள் என்னும் இரண்டு முக்கியமான கருத்துக்களை இவ்விழா நமக்கு வலியுறுத்துகின்றது என்றும் கூறினார்.

இயேசு மனிதகுலத்தில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் ஏற்படுத்துவதற்காக மனிதராக வாழ்ந்தார், இறந்தார், உயிர்த்தார் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள்,  வார்த்தை மனுஉருவான இயேசு நமக்காக தன் வாழ்வையே கொடையாகக் கொடுத்தார் என்றும் கூறினார்.    

நன்றியுணர்வு

நற்செய்தியின் மகிழ்ச்சியான செய்திக்கு சாட்சியாக நைஜீரிய இளம் அருள்பணியாளர்கள் செய்து வரும் பணிக்காகத் தன் நன்றியினைத் தெரிவித்த திருத்தந்தை அவர்கள், தாராளமனம், தாழ்ச்சி, பணிவு மற்றும் விடாமுயற்சியுடன் தங்கள் வாழ்வை இறைப்பணிக்காக அர்ப்பணித்து குருத்துவம் மற்றும் துறவறத்தை ஏற்று வாழும் அனைத்து மக்களுக்கும் தன் நன்றியினைத் தெரிவித்தார்.

அர்ப்பணிக்கப்பட்ட ஒவ்வொருவரும் கடவுளுக்குப் பணியாற்றுதல், உடன்வாழும் சகோதர சகோதரிகளை அன்பு செய்தல், கிறிஸ்துவை அவர்களில் முன்னிலைப்படுத்தி வாழ்தல் போன்றவற்றிற்காக அழைக்கப்பட்டுள்ளோம் என்றும், எப்பொழுதும் மறைப்பணியாளர்களாக இருந்து, நம்பிக்கையின் பேரார்வத்தை எடுத்துரைப்பதற்காக இறைவனால் அழைக்கப்பட்ட நாம் அத்தகைய இறைவனுக்கு எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை.

நியாயமான மற்றும் மனிதாபிமானமுள்ள உலகை உருவாக்க நம்பிக்கையுடன் நமது பங்களிப்பை வழங்க வேண்டும் இதற்காகவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், கடவுளுக்குப் பணியாற்றுதல் அயலாரை அன்புசெய்தல் அவர்களில் கிறிஸ்துவைக் காணுதல் நமது மிகப்பெரிய பொறுப்பு என்றும் வலியுறுத்தினார்.

பன்முகத்தன்மையில் வளமை

நைஜீரியாவில் உள்ள இனக்குழுக்கள், கலாச்சார மரபுகள், மொழிகளின் பன்முகத்தன்மை போன்றவை திருஅவையின் கட்டமைப்பையும் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வளப்படுத்தும் ஒரு கொடை  என்றும், பரஸ்பர புரிதல் மற்றும் உள்நாட்டு சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கான மதிப்புக்களை மேம்படுத்த அவை உதவுகின்றன என்றும் கூறினார் திருத்தந்தை.

உரோமில் வாழ்கின்ற நைஜீரிய கத்தோலிக்கக் குழுமமானது பிற நம்பிக்கையாளர்களை அன்புடன் வரவேற்கின்றது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், எல்லாரும் தூய ஆவியின் கொடைகளான தங்களது திறமைகளையும் ஆற்றல்களையும் பயன்படுத்தி பலன்தரும் ஒரு பெரிய குடும்பமாகச் செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

மகிழ்ச்சி, துயரம், வெற்றி மற்றும் இடர்ப்பாடுகளின்போது ஒருவருக்கொருவர் பலப்படுத்தி கொள்ளுங்கள் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள் இதன்வழியாக இன்றைய மற்றும் வருங்கால சந்ததியினரின் உள்ளத்தில் சமூகநட்புறவு மற்றும் நல்லிணக்க விதைகளை நம்மால் விதைக்க முடியும் என்றும் எடுத்துரைத்தார்.

உரையாடல்

மோதல்களையும் துன்பங்களையும் அனுபவித்து வருகின்ற உலகின் பல பகுதிகள் போல நைஜீரியாவும் கடினமான காலங்களை அனுபவித்து வருகின்றது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், நாட்டின் பாதுகாப்பு, ஒற்றுமை, ஆன்மிக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான தனது உறுதியான செபத்தையும் அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

மேலும் அரசியல், சமூக மற்றும் மத அளவில் யாரையும் ஒதுக்காமல், உரையாடலை ஊக்குவிக்கவும், ஒருவரையொருவர் திறந்த மனதுடன் செவிசாய்க்கவும் அனைவருக்கும் அழைப்புவிடுத்த திருத்தந்தை அவர்கள், இறைவனின் இரக்கத்தை எடுத்துரைக்கும் பெரிய அறிவிப்பாளர்களாகவும், சகோதரர்களுக்கிடையே  நல்லிணக்கத்தை ஏற்படுத்துபவர்களாகவும், ஏழைகளின் சுமையைக் குறைப்பவர்களாகவும் வாழ வலியுறுத்தினார்.

அருகிருப்பு, இரக்கம் மற்றும் மென்மை என்னும் கடவுளின் பண்புநலன் கொண்டவர்களாக நாம் வாழும்போது சகோதர ஒன்றிப்பு மற்றும் நல்லிணக்கத்துடன் ஒன்றிணைந்து நாம் நடக்க முடியும் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எப்பொழுதும் இறைவனின் உண்மையுள்ள சீடர்களாக வாழவும், திருமுழுக்கு அருளடையாளத்தின் வழியாகப் பெற்ற அழைப்பின் விழிப்புணர்வை ஆழமாக்குவதற்கும், இயேசு நம்மிடம் கேட்கும் பணியின் வழியாக கடவுளுக்கும் அவருடைய மக்களுக்கும் நம்மை நாம் அர்ப்பணித்து வாழவும் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 March 2024, 13:50