தேடுதல்

குழந்தைகள் மத்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம்) குழந்தைகள் மத்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம்) 

உலக குழந்தைகள் நாளுக்கான திருத்தந்தையின் செய்தி

“இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” என்ற கருப்பொருளில் மே மாதம் 25 26 ஆகிய நாள்களில் திருஅவையில் முதல் உலக குழந்தைகள் நாள் சிறப்பிக்கப்பட உள்ளது.

மெரினா ராஜ் - வத்திக்கான்  

“இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” என்ற திருவெளிப்பாடு நூலின் இறைவார்த்தைகளானது குழந்தைகளைப்போல ஞானமுள்ளவர்களாகவும், புதியவற்றை புரிந்து கொள்ளவும், நமக்குள்ளும் நம்மைச்சுற்றிலும் நடக்கும் எதார்த்தங்களைப் புரிந்துகொள்ளவும் அழைப்பு விடுக்கின்றது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” என்ற கருப்பொருளில் மே மாதம் 25 26 ஆகிய நாள்களில் திருஅவையில் சிறப்பிக்கப்பட இருக்கும் முதல் உலக குழந்தைகள் நாளுக்கான செய்தியை மார்ச் 2 சனிக்கிழமை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவுடன் இணைந்து நமது மனித குடும்பத்தைப் புதுப்பிப்பதற்கானக் கனவினைக் காணுதல், நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியைக் கவனித்துக் கொள்ளுதல், மனித உடன்பிறந்த உணர்வுடன் கூடிய சமுதாயத்திற்காக பணியாற்றுதல் மிக முக்கியம் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், பிறருக்கு வணக்கம்  செலுத்துவது, அனுமதி கேட்பது, மன்னிப்பு கேட்பது, நன்றி சொல்வது போன்ற சிறிய விஷயங்களில் மனித குலத்தைப் புதுப்பிப்பதற்கான இக்கனவு தொடங்குகின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகைய சிறிய விடயங்களில் நாம் எடுக்கும் சிறு முயற்சியால் உலகம் மாறும் என்றும், நாம் பலராயிருந்தாலும் கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் ஒரே உடலாய் இருக்கிறோம்; ஒருவருக்கொருவர் உடனுறுப்புகளாய் இருக்கிறோம். என்ற தூய பவுலின் வரிகளையும் மேற்கோள்காட்டியுள்ளார்.

ஓர் உறுப்பு துன்புற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து துன்புறும். ஓர் உறுப்பு பெருமை பெற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து மகிழ்ச்சியுறும் என்ற இறைவார்த்தைகளுக்கிணங்க, நாம் மகிழ்வுடன் இணைந்து வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

2024 ஆம் ஆண்டு மே 25,26 ஆகிய நாள்களில் உரோமில் சிறப்பிக்கப்பட இருக்கும் முதல் குழந்தைகள் உலக நாளுக்கான திருத்தந்தையின் செய்தி

அன்புள்ள குழந்தைகளே!

திருவிவிலியம் நமக்குக் கற்பிப்பது போலவும், இயேசு அடிக்கடி சுட்டிக்காட்டியது போலவும், கடவுளின் பார்வையில் "குழந்தைகளாகிய நீங்கள் விலையேறப்பெற்றவர்கள்" (எசாயா 43:4).

எல்லா குழந்தைகளும், எல்லா இடங்களிலும், ஒவ்வொரு நபரின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான விருப்பத்தின் அடையாளமாகத் திகழ்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் நாம் அனைவரும் குழந்தைகள், சகோதர சகோதரிகள் என்பதை நினைவூட்டுகிறீர்கள். இந்த உலகத்திற்கு பிறரால் கொண்டு வரப்பட்ட நாம், பிறரை அன்பு செய்வதிலும், பிறரிடம் இருந்து அன்பைப் பெறுவதிலும் வளர்ச்சி அடைய வேண்டும்.

குழந்தைகளே! நீங்கள் அனைவரும் உங்கள் பெற்றோருக்கும், குடும்பங்களுக்கும் மகிழ்ச்சியின் ஆதாரமாக இருக்கின்றீர்கள். அது மட்டுமல்லாமல் நம் ஒவ்வொருவரையும் கடந்த காலத்திலிருந்து எதிர்காலத்திற்கு முழு உலகோடு இணைக்கும் மனிதகுலத்திற்கும், திருஅவைக்கும், மகிழ்வின் ஆதாரமாக இருக்கின்றீர்கள். அதனால்தான் உங்களின் பெற்றோர்கள், தாத்தா பாட்டிகள் மற்றும் வயதில் மூத்தோர்களின் கதைகளைக் கவனமுடன் கேட்டு வளர உங்களை ஊக்கமூட்டுகின்றேன். மேலும் மருத்துவமனையிலோ அல்லது வீட்டிலோ உடல்நோய் மற்றும் துன்பங்களால் போராடுகின்ற, தங்களது குழந்தைப் பருவம் கொடூரமாகப் பறிக்கப்படுகின்ற சூழலில் வாழும், பிற குழந்தைகள் மற்றும் இளைஞர்களை நாம் மறந்து விடக்கூடாது. போர் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பசி,தாகத்தை அனுபவிப்பவர்கள், தெருக்களில் வாழ்பவர்கள், படைவீர்களாக மாற கட்டாயப்படுத்தப்பட்டவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், பெற்றோரைப் பிரிந்தவர்கள், பள்ளிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டவர்கள், தீவிரவாத குழுவினர், போதைப்பொருள், இதர அடிமைத்தனங்கள் மற்றும் முறைகேடுகளுக்கு ஆளானவர்கள் என அனைவரையும் நினைவுகூர்கின்றேன். அவர்களின் குரலுக்கு செவிசாய்ப்போம். வாழ்க்கை எதார்த்தத்தை நினைவூட்டுகின்ற, துன்புறும் அவர்களின் குரல்களுக்கு நாம் செவிசாய்க்க வேண்டும். நன்மைக்கான உறுதியான ஏக்கத்துடன், கண்களில் கண்ணீரோடு நிற்கும் அவர்களின் குரலுக்கு நாம்  செவிசாய்க்க வேண்டும்.       

அன்பார்ந்த இளம் நண்பர்களே, நாமும் நமது உலகமும் வளர, செழிக்க, ஒருவரோடு ஒருவர் இணைந்திருப்பது மட்டுமன்று, எல்லாவற்றிற்கும் மேலாக நாம் இயேசுவோடு ஒன்றிணைந்து இருக்க வேண்டும். அவரிடமிருந்தே நாம் மிகுதியான துணிவைப் பெறுகின்றோம். அவர் எப்போதும் நமக்கு மிக நெருக்கமாக இருக்கிறார், அவருடைய தூயஆவியின் ஆற்றல் நமக்கு முன்னாலும், உலகின் அனைத்துப் பாதைகளிலும் நம்முடன் செல்கின்றது. இயேசு நம்மிடம் "இதோ, நான் எல்லாவற்றையும் புதியது ஆக்குகிறேன்" (திருவெளிப்பாடு 21:5) என்று கூறுகின்றார்.  முதல் உலக குழந்தைகள் நாளுக்காக நான் தேர்ந்தெடுத்துள்ள கருப்பொருளும் இதுதான். இந்த வார்த்தைகள், குழந்தைகளைப்போல ஞானமுள்ளவர்களாகவும், புதியவற்றை புரிந்து கொள்ளவும், நமக்குள்ளும் நம்மைச்சுற்றிலும் நடக்கும் எதார்த்தங்களைப் புரிந்துகொள்ளவும் அழைப்பு விடுக்கின்றன. நமக்குள்ளும் நம்மைச் சுற்றிலும் உள்ள, ஆவியானவரால் தூண்டப்பட்ட புதிய எதார்த்தங்களைப் புரிந்துகொள்வதில் குழந்தைகளைப் போல புத்திசாலிகளாக மாற நம்மை அழைக்கின்றன. இயேசுவோடு இணைந்து மனித குடும்பத்தைப் புதுப்பிப்பதற்கானக் கனவினைக் காணவும், மனித உடன்பிறந்த உணர்வுடன் கூடிய சமுகத்தை உருவாக்கவும் பொதுவான இல்லமாகிய இப்பூமியைக் காக்கவும், அதற்காக இன்னும் அதிகமாக உழைக்கவும் வலியுறுத்துகின்றன. பிறருக்கு வணக்கம் செலுத்துதல், அனுமதி கேட்டல், மன்னிப்பு கேட்டல், நன்றி கூறுதல் என்னும் சிறிய செயல்களின் வழியாக இச்செயல் தொடங்குகின்றது. இந்த செயல்களுக்கான சிறிய அடியை ஒன்றன்பின் ஒன்றாக நாம் அனைவரும் தயக்கமின்றி செய்யத் தொடங்கினோமானால் நமது உலகம் மாறத் தொடங்கிவிடும். ஏனெனில் நாம் பலராயிருந்தாலும் கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் ஒரே உடலாய் இருக்கிறோம்; ஒருவருக்கொருவர் உடனுறுப்புகளாய் இருக்கிறோம். (உரோ: 12:5) ஓர் உறுப்பு துன்புற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து துன்புறும். ஓர் உறுப்பு பெருமை பெற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து மகிழ்ச்சியுறும் (1 கொரி 12:26).  நாம் சிறியவர்களாக இருந்தாலும் பலவீனமானவர்கள் ஒரே உடலின் உறுப்புக்களாக பிறரோடு இணைந்து வாழும் தேவையைக் கொண்டவர்கள்.

நாம் நமக்குள்ளாக மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க முடியாது, மாறாக அதனைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளும்போது மட்டுமே நமது மகிழ்ச்சி அதிகரிக்கின்றது. மகிழ்ச்சி என்பது நாம் பெற்றுக்கொண்ட கொடைகளின் வழியாகக் கிடைக்கும் நன்றியுணர்விலிருந்து பிறக்கின்றது. நாம் அதனைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளும்போது பிறருடனான உறவு வளர்கின்றது. கடவுளின் இந்த அருளை நாம் நமக்கென்று வைத்துக்கொள்ளும்போது, நம்மிடம் இருக்கும் மிகப்பெரிய பரிசு நாம் தாம் என்பதைப் பல நேரங்களில் மறந்துவிடுகின்றோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இருக்குபோது, கடவுளின் கொடையாகின்றோம். பிற கொடைகள் மற்றும் பரிசுகள் நல்லவையாக இருந்தாலும், அவை பிறரோடு ஒன்றிணைந்து இருப்பதற்கு உதவினால் மட்டுமே நல்லவையாக இருக்க முடியும். இந்த  நோக்கத்திற்காக நாம் அக்கொடைகளைப் பயன்படுத்தாவிடில், நாம் எப்போதும் மகிழ்ச்சியற்றவர்களாக நிறைவற்றவர்களாக முடிவடைவோம்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து இருக்கும்போது, எல்லாமே வித்தியாசமானதாக இருக்கும். உங்களது நண்பர்களை நினைத்துப் பாருங்கள், வீட்டில், பள்ளியில், பங்கில், விளையாட்டு மைதானத்தில், எல்லா இடங்களிலும் அவர்களுடன் நேரத்தை பகிரும்போது எவ்வளவு சிறப்பாக இருக்கின்றது. விளையாடுதல், பாடுதல், புதியவற்றைக் கண்டறிதல், மகிழ்ச்சியாக இருத்தல், போன்ற எல்லா செயல்களிலும் ஒருவரையும் ஒதுக்காமல் ஒன்றிணைந்து இருத்தல் வேண்டும். நட்பு என்பது மிக அருமையானது, அது பொறுமை, துணிவு, படைப்பாற்றல், கற்பனைத்திறன் கொண்ட பகிர்தல் மற்றும் மன்னித்தல் வழியில் அச்சமற்ற, முன்தீர்மானங்களற்ற வழியில் மட்டுமே வளர்ச்சியடைய வேண்டும்.  

உங்களோடு ஓர் இரகசியத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நீங்கள் உண்மையிலேயே மகிழ்வாக இருக்க விரும்பினால், ஒவ்வொரு நாளும் அதிகமதிகமாக செபிக்க வேண்டும். ஏனெனில் செபத்தின் வழியாக நாம் இறைவனோடு நெருங்கிய தொடர்பு கொள்ள முடியும். செபம் நமது இதயங்களைக் கடவுளின் ஒளியாலும் அரவணைப்பாலும் நிரப்புகின்றது. எல்லாவற்றையும் நம்பிக்கையுடனும் அமைதியான மனநிலையுடனும் செய்ய வைக்கின்றது. இயேசு அடிக்கடி இறைத்தந்தையை நோக்கி செபித்தார். அவரை அப்பா தந்தாய் என்று அழைத்தார். அவரைப்போலவே நாமும் இறைத்தந்தையை அழைப்போம். இயேசு நம்முடன் மிக நெருக்கமாக இருக்கின்றார்  “இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (மத்: 18:20) என்று அவர் நமக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.        

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து உரோமிற்கு பல குழந்தைகள் இந்த முதல் உலக குழந்தைகள் நாளைக் கொண்டாட வருகின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதற்காக நன்கு தயாரிக்க இயேசு கற்றுக்கொடுத்த செபத்தை ஒன்றிணைந்து செபிக்க உங்களை அழைக்கின்றேன். ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் விண்ணகத்தந்தையை நோக்கிய செபத்தை உங்களது பெற்றோர், உடன்பிறந்தோர், தாத்தா பாட்டிகளோடு இணைந்து செபியுங்கள். வெறும் வார்த்தைகளாக மட்டுமன்று இயேசு நாம் அவரோடு இணைந்து ஆற்றலுடன் செயல்பட அச்செபத்தின் வழியாக நம்மை அழைக்கின்றார். புதியதும், அதிகமான மனிதாமிபிமானம் கொண்டதும், நீதியும் அமைதியும் கொண்ட உலகைக் கட்டியெழுப்புபவர்களாக வாழ, அவருடன் இணைந்து செயல்பட நாம் இந்த முதல் உலக குழந்தைகள் நாளில் அழைக்கப்படுகின்றோம். நம் அனைவரையும் அன்பில் ஒன்று சேர்க்க, சிலுவையில் தன்னையே ஒப்புக்கொடுத்து, மரணத்தை வென்று இறைத்தந்தையுடன் நம்மை இணைத்த இயேசு, திருஅவையில் தம் பணியை நம் வழியாகத் தொடர விரும்புகிறார். குறிப்பாக முதல் முறையாக திருநற்கருணை அருளடையாளத்தைப் பெற தங்களையேத் தயாரிக்கும் சிறார் இதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்.

“தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்; (எரே 1:5). என்ற இறைவார்த்தைக்கேற்ப கடவுள் எல்லா காலமும் நம்மை அன்பு செய்து வருகின்றார். அன்பான தந்தை மற்றும் மென்மையான தாயின் கண்களால் நம்மைப் பார்க்கின்றார். அவர் நம்மை ஒருபோதும் மறப்பதில்லை. ஒவ்வொரு நாளும் ஆவியின் வழியில் நம்மைப் புதுப்பித்து நம்முடன் நடக்கின்றார்.

அன்னை மரியா மற்றும் தூய யோசேப்புடன் இணைந்து இந்த செபத்தை நாம் அனைவரும் இணைந்து செபிப்போம்.

தூய ஆவியே வாரும்.

உலகின் எல்லா பகுதிகளிலும் உள்ள சிறாரின் முகத்தில்

பிரதிபலிக்கும், உமது அழகை எங்களுக்குக் காட்டியருளும்.

இயேசுவே வாரும்,

நீரே எல்லாவற்றையும் புதியதாக மாற்றுபவர்,

விண்ணகத்தந்தையை நோக்கிய பாதையை எங்களுக்குக் காட்டுபவர்.

வாரும், எப்போதும் எங்களுடன் தங்கியருளும் ஆமென்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 March 2024, 16:28