போதைப்பொருள் தொடர்புடைய வன்முறைகள் குறித்து காணொளிச் செய்தி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
அர்ஜென்டினா நாட்டின் ரொசாரியோ என்னும் நகரில் கடந்த சில வாரங்களாக போதைப்பொருள் தொடர்புடைய வன்முறைகள், ஊழல், சட்டவிரோத பண பரிமாற்றங்கள் ஆகியவை இடம்பெற்றுவருவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டு அந்நகருக்கு காணொளிச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களால் கொலைகளும் ஏனையக் குற்றங்களும் ரொசாரியோ நகரில் இடம்பெற்றுவரும் நிலையில், போதைப்பொருள்களின் தேவையையும் விநியோகத்தையும் கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என தன் காணொளிச் செய்தியில் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
போதைப்பொருளுக்கு அடிமையானோர் மற்றும் பலியானோரின் குடும்பங்கள், போதைப்பொருட்களால் நோயுற்றோர், போதைப்பொருட்களின் விளைவுகளால் சிறையில் வாடுவோர், போதைப்பொருட்களுக்கு அடிமையானோர் என அனைவருடனும் தலத்திருஅவை நடைபோட்டு அவர்களை குணப்படுத்த உரிய உதவிகளை ஆற்றவேண்டும் என தன் செய்தியில் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அரசியல், நீதி, பொருளாதாரம், நிதி, காவல்பிரிவு ஆகிய துறைகளின் மறைமுக ஆதரவின்றி ரொசாரியோ நகரம் இந்த சீர்கேடான நிலைக்கு வந்திருக்க முடியாது என தன் செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த காணொளிச் செய்தியை, ‘அமைதியை உருவாக்குபவர்கள் பேறுபெற்றோர்’ என்ற இயேசுவின் வார்த்தைகளுடன் துவக்கியுள்ளார்.
மார்ச் 26, செவ்வாய்க்கிழமையன்று வெளியிடப்பட்ட திருத்தந்தையின் காணொளிச் செய்தி, ரொசாரியோ நகரில் இணக்க வாழ்வை உருவாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து உழைக்கவேண்டிதன் தேவையை வலியுறுத்தியுள்ளது.
அர்ஜெண்டினா நாட்டின் சாந்தாபே மாகாணத்தின் மிகப்பெரும் மக்கள் தொகையைக் கொண்ட ரொசாரியோ நகரில் கடந்த சில வாரங்களாக மூன்று வாகன ஓட்டுனர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், அரசு நிர்வாகக் கட்டிடங்களுக்கு எதிரான துப்பாக்கிச் சூடுகளும் இடம்பெற்றுவருகின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்