தேடுதல்

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை - விவேகம் என்னும் நல்லொழுக்கம்

மார்ச் 20 புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்தத் திருப்பயணிகளுக்கு விவேகம் என்னும் நல்லொழுக்கம் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

மார்ச் மாதத்தின் மூன்றாம் வாரமும், தவக்காலத்தின் ஐந்தாம் வாரமுமாகிய மார்ச் 20 இப்புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏறக்குறைய 12000 திருப்பயணிகள் திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு செவிசாய்க்கக் கூடியிருந்தனர்.

இளஞ்சூரியனின் இதமான இளஞ்சூடு உடலுக்கு உற்சாகத்தைக் கொடுக்க, உள்ளத்தில் உவகையோடு, திருத்தந்தையைக் கரவொலியும் மகிழ்வொலியும் எழுப்பி வரவேற்றனர் திருப்பயணிகள். திறந்த காரில் சிறார் சிலருடன், வத்திக்கான் வளாகத்தில் திருப்பயணிகள் நடுவே வலம் வந்து அவர்களை மகிழ்வுடன் வாழ்த்தினார் திருத்தந்தை. புதன் மறைக்கல்வி உரை வழங்கும் இடத்தை வந்தடைந்த திருத்தந்தை அவர்கள், சிலுவை அடையாளம் வரைந்து கூட்டத்தைத் துவக்கி வைத்தார். அதன்பின் நீதிமொழிகள் நூலில் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.            

நீதிமொழிகள் 15: 14,21,22,33

விவேகமுள்ளவர் மனம் அறிவை நாடும்; மதிகேடர் வாய்க்கு மடமையே உணவு. மூடன் தன் மடமை குறித்து மகிழ்ச்சியடைகின்றான்; மெய்யறிவுள்ளவன் நேர்மையானதைச் செய்வான். எண்ணிப் பாராமல் செய்யும் செயல் தோல்வியடையும்; பலர் திட்டமிட்டுச் செய்யும் செயல் வெற்றியடையும். ஆண்டவரிடம் அச்சம்கொள்ளுதல் ஞானத்தைத் தரும் பயிற்சி; மேன்மை அடையத் தாழ்மையே வழி.

இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பயணிகளை வாழ்த்தி நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் பற்றிய நமது தொடர் மறைக்கல்வி உரையின் தொடர்ச்சியை இன்றுக் காண்போம் என்றும், தனது உடல்நிலை இன்னும் சரியாகாதக் காரணத்தால், தனக்குப் பதிலாக மறைக்கல்வி உரைக்கருத்துக்களை பேரருள்திரு பியர்லூயிஜி ஜிரெல்லி அவர்கள் வாசித்தளிப்பார் என்றும் கூறினார்.

எனவே கடந்த வாரத்தைப் போலவே இவ்வாரமும் திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களை பேரருள்திரு பியர்லூயிஜி ஜிரெல்லி அவர்கள் திருத்தந்தையின் சார்ப்பாக வாசித்தளித்தார். திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.

அன்பான சகோதர சகோதரிகளே காலை வணக்கம்,

நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் பற்றிய நமதுத் தொடர்மறைக்கல்வி உரையில் இன்று நாம் விவேகம் என்னும் நல்லொழுக்கம் குறித்துக் காண இருக்கின்றோம். நீதி, துணிவு, மற்றும் தன்னடக்கத்துடன் இணைந்து, நற்பண்புகளில் முதன்மையானதாக விவேகம் திகழ்கின்றது. விவேகம் கிறிஸ்தவர்களின் சிறப்புரிமை மட்டுமன்று, பண்டைய ஞானத்தின் பாரம்பரியமாகக் குறிப்பாக, கிரேக்கத் தத்துவஇயலாளர்களுடையதாகவும் கருதப்படுகின்றது. எனவே தான் சந்திப்பு மற்றும் வளர்ச்சியில் மிக முக்கியமான மற்றும் ஆர்வமுள்ள நல்லொழுக்கக் கருப்பொருளாக விவேகம் உள்ளது.

இடைக்கால எழுத்தாளர்களின் எழுத்துக்களில், நல்லொழுக்கங்கள் என்பது ஆன்மாவின் நேர்மறையான குணங்களின் எளிய பட்டியல் அல்ல. கிறிஸ்தவ பாரம்பரியத்தின் வெளிச்சத்தில் பார்த்தோமானால் பண்டைய ஆசிரியர்கள் நல்லொழுக்கத்தின் மிகமுக்கியமான ஏழு  நற்பண்புகளை விவேகம், நீதி, தன்னடக்கம் துணிவு ஆகிய நான்கு முக்கிய நற்பண்புகளிலும், நம்பிக்கை, எதிர்நோக்கு, தொண்டு என்னும் மூன்று இறையியல் நற்பண்புகளுடன் இணைத்துக் கூறினர். ஒவ்வொரு நல்லொழுக்கமும் நல்லிணக்கத்துடன் வாழும் இடமாகக் கருதினர். தலைமை  நல்லொழுக்கங்கள், துணை நல்லொழுக்கங்கள் போன்றவைத் தூண்களாகவும், முதன்மையானவைகளாகவும் காட்சியளிக்கின்றன. ஓர் இடைக்கால பேராலயத்தின் கட்டிடக்கலை போன்ற எதுவும் மனிதனில் இருக்கும் நல்லிணக்கத்தையும், நன்மையை நோக்கிய அவனது தொடர்ச்சியான பதற்றத்தையும் வெளிப்படுத்த முடியாது.

எனவே, விவேகத்துடன் நமது செயல்களைத் தொடங்குவோம். அது எப்பொழுதும் பயமுள்ளவரும் தயக்கத்துடன் செயல்களைச் செய்கின்றவருமான மனிதரின் நல்லொழுக்கமல்ல. அது தவறான விளக்கம். இது வெறும் எச்சரிக்கை மட்டுமல்ல. விவேகத்திற்கு முதலிடம் கொடுக்கும் மனிதனின் செயலானது சுதந்திரம் மற்றும் அறிவாற்றலுடன் செயல்படும் அவனது கரங்களில் உள்ளது. விவேகம் உள்ள மனிதர் படைப்பாற்றல் மிக்கவர். சிந்தித்து செயல்படுகின்றார், மதிப்பிடுகின்றார். எதார்த்தத்தின் சிக்கல்களைப் புரிந்துகொள்கின்றார். உணர்ச்சிகள், சோம்பல், மனஅழுத்தம், மற்றும் மாயைகளுக்குள் தன்னை அவர் மூழ்கடிக்க மாட்டார்.

தோற்றங்கள், மேலோட்டமான எண்ணங்கள், நன்மை மற்றும் தீமை என்னும் இரண்டின் இயல்பான தன்மைகள் ஆதிக்கம் செலுத்தும் இவ்வுலகில், விவேகத்தின் பண்டைய  வாழ்க்கைப்பாடம் நம்மை மீட்டெடுக்கத் தகுதியானது.

தூய தாமஸ், அரிஸ்டாட்டில் அறிஞரைத் தொடர்ந்து விவேகத்தை ரெக்டா ரேஷியோ அஜிபிலியம் அதாவது சரியான செயல்முறை என்று அழைத்தார். நமது செயல்களை நன்மையை நோக்கி வழிநடத்தும் திறன் கொண்டது விவேகம். எனவே தான் விவேகம் நற்குணங்களின் பயிற்சியாளர் என்னும் சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. புத்தகங்களுக்கு அதிக நேரம் செலவழித்தால், வாழ்க்கை எப்போதும் எளிதானது. அன்றாட வாழ்வின் புயல்காற்று, அலைகளுக்கு மத்தியில் வித்தியாசமான ஒன்றாக, தெளிவற்றவர்களாக எதைத்தேர்வது எந்தப் பாதையில் செல்வது என்ற குழப்பம் ஆகிய இரண்டில் சரியானவற்றைத் தேர்வு செய்வதில் திறன் பெற்றவராகின்றார் விவேகம் உள்ளவர்.   

விவேகமுள்ளவர்கள் தற்செயலாக எதையும் தேர்ந்தெடுப்பதில்லை: முதலில் அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை அவர்கள் நன்கு அறிந்துள்ளார்கள். சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்கிறார்கள், ஆலோசனையைப் பெறுகிறார்கள், பரந்த பார்வை மற்றும் உள்மன சுதந்திரத்துடன், எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பதைத் தேர்வு செய்கிறார்கள். அவர்கள் தவறே செய்ய முடியாது என்று நாம் சொல்ல முடியாது, எல்லாவற்றிற்கும் மேலாக விவேகமுள்ள மனிதர் எப்போதும் மனிதத்துவம் உள்ளவர்களாகவே இருப்பதால் குறைந்தபட்சம் வாழ்வின் பெரிய சறுக்கல்களைத் தவிர்க்க அவர்களுக்கு உதவுகின்றது. ஒவ்வொரு சூழலிலும் மேலோட்டமான நகைச்சுவைகளால் பிரச்சினைகளை நிராகரிப்பவர்களோ அல்லது எப்போதும் பிரச்சனைகளை எழுப்புபவர்களோ இருக்கத்தான் செய்கின்றனர். விவேகம் என்பது நிர்வாகம் செய்ய அழைக்கப்பட்டவர்களின் தரம். நிர்வாகம் செய்வது கடினம், அதனைப் பற்றிய பல கருத்துக்கள் உள்ளன, அவற்றை ஒன்றிணைக்க முயற்சிக்க வேண்டும், சிலருக்கு மட்டுமல்லாது எல்லாருக்கும் நல்லது செய்யவேண்டும்.

உண்மையில், அதிகப்படியான ஆர்வம் சில சூழ்நிலைகளில் பேரழிவுகளுக்கு வழிவகுக்கின்றது. அது படிப்படியாக உயர்த்தப்பட இருக்கும் கட்டிடத்தை அழிக்கலாம். முரண்பாடுகள் மற்றும் தவறான புரிதல்களை உருவாக்கலாம்; வன்முறையைக் கூட தூண்டலாம்.

விவேகமுள்ள மனிதர் கடந்த கால நினைவுகளை எவ்வாறு பாதுகாப்பது என்பதை அறிந்துள்ளார். அவர் எதிர்காலத்தைப் பற்றி பயப்படுவதால் அல்ல, மாறாக கலாச்சாரம் ஞானத்தின் வளமை என்பதை அவர் அறிந்திருப்பதால். வாழ்க்கை என்பது பழையவற்றையும் புதியவற்றையும் தொடர்ச்சியாக ஒன்றுடன் ஒன்று சேர்ப்பதால் உருவானது. உலகம் நம்மில் இருந்து தொடங்குகிறது, புதிதாகப் பிரச்சினைகளை நாம் சந்திக்க வேண்டும் என்று எப்போதும் நினைப்பது நல்லதல்ல. விவேகமுள்ள நபர் தொலைநோக்குப் பார்வையுடையவர். நாம் அடையவேண்டிய இலக்கை அடைவதற்கான எல்லையை முடிவு செய்தவுடன், அதை அடைவதற்கான அனைத்து வழிகளையும் பாதுகாக்கவேண்டும்.

நற்செய்தியின் பல பகுதிகள் விவேகத்தைக் கற்பிக்க நமக்கு உதவுகின்றன. உதாரணமாக, இருவகை அடித்தளங்கள் பகுதியில், பாறையில் தன் வீட்டைக் கட்டுகிறவன் அறிவாளி விவேகமுள்ளவன், மணலில் தன் வீட்டைக் கட்டுகிறவன் அறிவிலி விவேகமற்றவன். பத்துத் தோழியர் உவமையில் தங்கள் விளக்குகளுக்கு எண்ணெய் கொண்டு வரும் மணமகளின் தோழியர் முன்மதி உடையவர்கள், எண்ணெய் எடுத்து வராதவர்கள் அறிவிலிகள் என்று விவேகத்தைக் குறித்து நமக்குக் கற்பித்துள்ளார் இயேசு. கிறிஸ்தவ வாழ்க்கை என்பது எளிமை மற்றும் விவேகத்தின் கலவையாகும். பணிக்காக தம் சீடர்களைத் தயார்படுத்திய, இயேசு இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே, பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள் என்று வலியுறுத்துகின்றார் (மத் 10:16). நாம் புனிதர்களாக மட்டும் இருப்பதைக் கடவுள் விரும்பவில்லை. மாறாக, நாம் அறிவாற்றல் மிக்க புனிதர்களாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார், ஏனென்றால் விவேகம் இல்லாமல் செல்வது தவறான வழியில் நாம் செல்ல எளிதில் வாய்ப்பளிக்கின்றது.

இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களைப் பேரருள்திரு ஜிரெல்லி அவர்கள் வாசித்தளிக்கக் கூடியிருந்த திருப்பயணிகளை வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலிய மொழி பேசும் திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை, குறிப்பாக ஆயரும் மறைசாட்சியாளருமான தூய ஒரோன்சோ வழிபாட்டுடன் தொடர்புடைய நகரங்களைச் சார்ந்தவர்கள் அனைவரையும் வாழ்த்தினார். அன்பான சகோதர சகோதரிகளே, உங்களது பாதுகாவலரின் சான்று வாழ்வில் நம்பிக்கைக் கொண்ட உங்களது திருப்பொருள்களுக்கு ஆசீர் வழங்குவதில் நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன். கிறிஸ்துவையும் அவருடைய நற்செய்தியையும் இன்னும் தாராளமாக கடைப்பிடிக்கும் ஆர்வத்தை புனிதர் உங்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் எழுப்பட்டும்.

கிரிஞ்னானோ தி பிராத்தோவில் உள்ள தூய பேதுரு பங்குத்தள மக்கள், போவேஸின் ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் சோரா கல்வி நிறுவனத்தின் மாணவர்களையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், இளைஞர்கள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகளை நினைவுகூர்ந்து அவர்களுக்காக செபித்தார்.

மேலும் மார்ச் 19 செவ்வாய்க்கிழமை திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட உலகளாவிய திருஅவையின் பாதுகாவலரான தூய யோசேப்பின் பெருவிழாவை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், திருப்பயணிகள் அனைவருடனும் உலகளாவிய திருஅவை அனைத்தையும் அவரது பாதுகாப்பில் ஒப்படைப்பதாகவும், குறிப்பாக தூய யோசேப்பைப் போல தனித்துவமான மாதிரிகைகளாகத் தந்தையர்கள் அனைவரும் திகழவும் வாழ்த்தினார்.   

தூய யோசேப்பிடம் போரினால் துன்புறும் உக்ரைன், புனிதபூமி இஸ்ரயேல், பாலஸ்தீனம் நாடுகளில் உள்ள மக்களுக்காக செபித்து அவரின் பரிந்துரையை நாடுவோம் என்றும், போர் என்பது எப்போதும் தோல்வி தான் என்பதை மறந்துவிடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

இத்தகைய போர்ச்சூழலில் சென்று கொண்டிருப்பது நல்லதல்ல என்றும் போரை முடிவுக்குக் கொண்டு வர, பேச்சுவார்த்தை நடத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும், அதற்காக செபிப்போம் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வாறு தனது செப விண்ணப்பங்களையும் வாழ்த்துக்களையும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விண்ணகத்தந்தையை நோக்கிய செபத்திற்குப் பின் கூடியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 March 2024, 08:44

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >